ஜாஜா சொல்வளர்காடு குறித்துப் பேசிய முன் இரு கலந்துரையாடல்களுக்கும் என்னால் செல்ல இயலவில்லை. இன்றும் சொல்வளர்காடு குறித்த விவாதம் தொடரும் என அறிவித்து இருந்தனர். மாலை ஐந்து முப்பதிற்கு, குருஜீயின் இல்லத்தில் கூட்டம் தொடங்கியது. மீனாம்பிகை கோவையிலிருந்து வந்திருந்தார்.

ஜாஜா, மஹாபாரத காலகட்ட சமுக-அரசியல் அமைப்பில் வேதங்களின் பங்கு குறித்த சிறு அறிமுகத்தின் பின் பிரகதாரண்யக உபநிடதம் குறித்து பேசத் தொடங்கினார்.

என்னைப்போன்ற வாசகனுக்கு, சொல்வளர்காடு பேசும் உபநிடதங்கள், ஞான தரிசனங்கள் குறித்த அறிமுகம் நாவலை அணுகக் கூடுதல் திறப்பாக அமையும். அந்த வகையில் இது ஒரு தத்துவ ஞான உரையாக அமையும் என்றே எண்ணினேன்.

அதேசமயம், இந்தத் தகவல்களை ஒரு தேடல் உள்ள வாசகன் தானே கண்டுகொள்ள இயலும். அதற்கு ஜாஜா தேவையில்லை! தொழில்முறை பயிற்றுனரான ஜாஜாவுக்கும் அது தெரியாதா? நாம் தேடி அடையக்கூடிய விஷயங்களைத் தொகுத்துக் கூறி நமது தேடலை எளிமை ஆக்காமல், நாவலின் பல்வேறு நுணுக்கங்களை சுட்டிக்காட்டி நம் தேடலை விரிவாக்கும் வகையில் உரையை அமைத்திருந்தார்!

அவர் அவனை தன் கையால் தலைவளைத்து நெற்றிப்பொட்டை தன் சுட்டுவிரலால் தொட்டு  தானறிந்த வேதவரியை சொன்னார் “நானே பிரம்மம்.”

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29

பிரகதாரண்யக உபநிடத்தின் மைய சொல்லான – அஹம் பிரம்மாஸ்மி – யை சொல்வளர்காடு இந்த வார்த்தைகளில் குறிப்பிடுகிறது என கோடிட்டு காட்டி தத்துவக் கூறுகளைக் கடந்து சென்ற ஜாஜா, மூல பிரகதாரண்யக உபநிடதம் மற்றும் சொல்வளர்காட்டின் ‘பிருஹதாரண்யகம்’ பகுதியின் மையகூறுகளில் உள்ள ஒற்றுமைகளை இணைவாசிப்பின் மூலம் சுட்டிக்காட்டினார்.

“வேதம் செழித்த காடுகளில் அதுவே பெரிது.” என பிருஹதாரண்யகம் தொடங்குகிறது. காடு மட்டுமல்ல, பிரகதாரண்யக உபநிடதமே, உபநிடதங்களில் பெரியது என உபநிடத புத்தகங்களைக் காட்டி ஜாஜா செயல்முறை விளக்கம் தந்தார்!

பிருஹதாரண்யகத்தை நோக்கிச் சென்ற பாதை மரப்பட்டைகளும் கற்பாளங்களும் பதிக்கப்பட்ட வண்டித்தடமாக இருந்தது. “ஒரு வேதக்காட்டுக்கு வண்டித்தடம் இருப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்று தருமன் சொன்னார். “ஆம், இக்காடு மட்டுமே அவ்வாறு அரசர்களால் முற்றிலும் பேணப்படுகிறது” என்றான் அவர்களை அழைத்துச்சென்ற வைரோசனன் என்னும் மாணவன்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 30

ஒரு செய்தியாக வரும் இந்தக் குறிப்பிற்குக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? வேதங்களின் மூலமே தொல்குடி சத்திரியர்களின் அதிகாரம் நிறுவப்படுவதை வெண்முரசில் திரும்பத்திரும்பக் காண்கிறோம். இந்தச் சூழலில், பிரகதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயமே அஸ்வமேத யாகத்தைப் பற்றியது என ஜாஜா கூறியபொழுது, சத்திரியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வேதமரபில் பிருஹதாரண்யம் முக்கியப் பங்கு வகிப்பதை உணரலாம்.

“முன்பிருந்த எதுவும் பின்னிற்காத மெய்யறிதல் ஒன்றைத் தேடி நான் இவ்வேதக்காடுகளில் அலைந்தேன். நேதி நேதி எனத் துறந்து இக்காட்டை கண்டுகொண்டேன்.” சூரியர் “எவ்வண்ணம் இதை கண்டாய்?” என்றார். “நான் பறவைகளை பார்த்துக்கொண்டே வந்தேன். இத்திசையிலிருந்து எப்பறவையும் வெளிவரவில்லை. இத்திசை நோக்கி பிறநிலத்துப் பறவைகள் செல்லவுமில்லை. இங்குள்ள காடு தனித்தது என்று உணர்ந்தேன்.”

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 30

இதில், பறவைகளை மற்ற வேத மரபின் தாக்கங்களாகவும் பார்க்கலாம் அல்லவா?

காத்யாயனி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 30

இந்த வரிகளை, பிரகதாரண்யக உபநிடத்தில் வரும் உணவு குறித்த வரிகளின் மூலமும், யாக்ஞவல்கியர்  தேடி வந்த “பிறிதொன்றில்லாத மெய்மை” மூலமும் அணுகுவதன் மூலம் வேவ்வேறு திறப்புகளை அடையலாம். இதுப்போல் பல விஷயங்கள் ஜாஜா குறிப்பிட்டார்.

சுருங்கச் சொல்வதென்றால், பேட்ட முழுதும் விரவி இருக்கும் பழைய ரஜினி பட references போல், சொல்வளர்காட்டில் விரவி இருக்கும் உபநிடத referencesகளை ஜாஜா நமக்கு விளக்கினார்!