பயணக்குறிப்புகளுக்குள் செல்லும் முன், தமிழக வரலாற்றை சுருக்கமாக அறிந்துகொள்வது உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
மனிதன் எழுத தொடங்கியபொழுது தான் வரலாறு தொடங்குகிறது என்பதால், அதற்கு முன்புள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் என குறிப்பிடுகிறார்கள். உலகம் உருவான நாளில் இருந்தே வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கிவிடுகிறது என்றாலும், தொல்லியலாளர்களின் கவனம் மனிதன் / மனிதன் போன்ற இனங்கள் உருவாகிய காலத்தில் இருந்து தான் தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தை உலகலவில்
- கற்காலம்
- செப்புக்காலம்
- வெண்கலக்காலம்
- இரும்புக்காலம்
- வரலாற்றுக்காலம்
என பிரிக்கிறார்கள். இவை முக்கியமாக ஐரோப்பிய ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்ட பிரிவிகள். இந்த காலகட்டங்களின் வருடங்கள் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார்போல் மாறும். சில இடங்களில் கற்காலத்திலிருந்து நேரடியாக இரும்புக்கலத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள். இந்திய வரலாற்றை பற்றி கூறும் பொழுது, வேதகாலம் என்ற பகுப்பு முக்கியமாக இடம்பெறுகிறது. தமிழகத்தில் சங்ககாலம். எனவே இது அறுதியான வகைப்பாடு அல்ல.
பழைய கற்காலம்
குரங்கு போல், இயற்கையாக கிடைக்கும் பழம், கனிகளை உண்டுக்கொண்டிருந்த மனிதன், விலங்குகளை வேட்டையாடி உண்ன கல்கருவிகளை உபயோகிக்க தொடங்கிய காலம் பழைய கற்காலம் எனப்படுகிறது. கல்லை செதுக்கி கூர்மையாக்கி உபயோகிக்க தொடங்குகிறான். சில ‘பழைய கற்கால’ கருவிகள் கீழே:
அத்திரம்பாக்கத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளில் 3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதன் உபயோகித்த கருவிகள் கிடைத்துள்ளன. கற்காலத்திற்கும் முந்தைய மனிதன் (மனிதன் போன்ற இனம்) உபயோகித்த கருவிகளும் அங்கு கிடைத்திருந்தாலும், இந்த கற்கால கருவிகள் நமது பண்பாட்டின் ஆரம்ப புள்ளியாக அமைகின்றன. பழைய கற்காலம் லட்சகணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை தொடர்ந்துள்ளது. அதன் பிறகு இடைகற்காலம், புதிய கற்காலம் என்ற பிரிவுகள் உருவாகின்றன.
புதியகற்காலம்
இடைகற்காலம் என்பது பழைய கற்காலத்தில் இருந்து புதிய கற்காலத்திற்கு மனிதன் நுழைவதற்கு இடைப்பட்ட காலம். இந்த காலத்தில் மத நம்பிக்கைகள், குழுவிற்கான பழக்கவழக்கங்கள் போன்றவை உருவாகி வந்திருக்கக்கூடும் என கருதுகிறார்கள். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதும் இந்த காலத்தில் தான்.
அந்த நிலையிலிருந்து, ஒரு இடத்தில் தங்கி விவசாயம் செய்வது, விலங்குகளை வீட்டு விலங்குகளாக பழக்கப்படுத்துவது என முன்னேறிய காலத்தை புதிய கற்காலம் என குறிப்பிடுகிறார்கள். இந்த காலத்தில் கல் கருவிகளை மெருகூட்டி (கரடு முரடான வெளிபுறத்தை பளபளக்க செய்து) உபயோகிக்க தொடங்கினார்கள். மெலும், சிறிய கூர்மையான கருவிகளையும் உபயோகிக்க தொடங்கினார்கள்.
பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரையில் கருவிகளில் நிகழ்ந்த மாற்றங்களை இங்கு காணலாம்:
தமிழகத்தில் புதிய கற்காலம் பொதுயுகத்திற்கு 3,500 ஆண்டுகள் முன் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. புதிய கற்காலத்தின் இறுதியில் இரும்புகாலம் தொடங்குகிறது..
பார்க்க: தமிழகத்தின் கற்காலங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
இரும்புக்காலம்
சமீப அகழாய்வு ஒன்றின்படி தமிழகத்தில் இரும்பு பொது யுகத்திற்கு 2,700 ஆண்டுகள் முன்பே உபயோகிக்கப்பட்டது என தெரியவருகிறது. இது குறித்து ஆய்வாளர்களின் கருத்துகள் இன்னும் இறுதியாகவில்லை. அதற்கு முன்பு வரை, பொதுயுகத்திற்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்(பொமு 1,500) இரும்புகாலக்கட்டம் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கருதி வந்தார்கள். இந்த காலகட்டத்தை பெருங்கற்காலம் எனவும் குறிப்பிடலாம். பெரிய கல் அமைப்புகளை இந்த காலத்தில் உருவாக்கினார்கள். நடுகற்கள், இறந்தவர்களை புதைப்பதற்கான சடங்குகள் போன்றவை உருவாக தொடங்கிய காலம் இது. தமிழக பெருங்கற்கால இடங்களை குறித்து மேலும் அறிய.
சங்ககாலத்திற்கு முன்
இது வரை அகழாய்வில் கிடைக்கும் தொல் சின்னங்களின் அடிப்படையில் நமது புரிதல் உருவாகி வந்தது. பொமு 13ம் நூற்றாண்டிலிருந்து வட இந்தியாவில் எழுத்து வடிவ சான்றுகள் கிடைக்க தொடங்குகின்றன (வேதகாலம்). தமிழகத்தில் கிடைக்கும் எழுத்து வழி சான்றான சங்ககால படைப்புகள் காலத்தால் மிகவும் பிந்தியவை.
வேதகால ஆர்யவர்தம் விந்தயமலையை தனது தென் எல்லையாக கோண்டுள்ளது. அதற்கு கீழ் உள்ளவர்களை பண்படாதவர்கள் என குறிப்பிடுகிறது. அவர்களை பற்றிய விரிவான குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், பொமு 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் தெற்கில் இருந்து வந்த அகத்திய முனிவர் குறித்த குறிப்புகள் உள்ளன. மஹாபாரதத்திலும், ராமாயணத்திலும் உள்ள அகத்தியர் குறித்த தொன்மங்கள் வழியாக தென் இந்திய வரலாற்றை அனுமானிக்கலாம் என்பது ஒரு அனுகுமுறை.
வரலாற்று சான்றுகள்
பொமு நான்காம் நூற்றாண்டில் காத்தாயணர் பாண்டிய நாட்டின் முத்து மற்றும் மஸ்லின் ஆடைகளை பற்றி குறிப்பிடுகிறார். வேதகாலத்திற்கு பின், முதலாம் மௌரிய அரசர் சந்திரகுப்த மௌரியர்களின் காலத்தில், கௌத்தில்யா (அர்த்தசாஸ்திரம் இயற்றியவர்) தென்னகத்திலிருந்து வரும் தங்கம், முத்து, வைடூரியம் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மூன்றாம் மௌரிய அரசர், அசோகர், தனது இரண்டாம் மற்றும் பதின்மூன்றாம் பெரும்பாறை கல்வெட்டுகளில் (பொமு மூன்றாம் நூற்றாண்டு) , தனது அண்டை நாடுகளாக சோழ, பாண்டிய, சத்யபுத (அதியமானை குறிக்கலாம் என நம்பப்படுகிறது), கேளளபுத (கேரள) மற்றும் தாமிரபரணி (நெல்லை மற்றும் சிலோன்) நாடுகளை குறிப்பிடுகிறார்.
பொமு ஒன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கார்வேலா என்ற கலிங்க அரசன், ஹதிகும்பா கல்வெட்டுகளில் 113 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திராவிட அரசுகளின் கூட்டமைப்பை வென்றதாக குறிப்பிடுகிறான்.
பல லட்சகாலமாக தமிழக பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆதி மனிதர்கள் குன்றுகள் / மண்மேடுகள் மீது பொதுவாக வசித்து வந்துள்ளனர் என தெரிகிறது. பொமு 15ம் நூற்றாண்டில் ஓரிடத்தில் தங்கி, விவசாயம் விலங்கு வளர்ப்பு போனேஅவற்றில் ஈடுபட தொடங்கும் மனிதர்கள், பொமு 4ம் நூற்றாண்டில் நிலையான அரசியல் அமைப்பும், திடமான கட்டமைப்பும் கொண்ட சமூகமாக வளர்ந்துள்ளார்கள் என அறியமுடிகிறது. இந்த காலகட்டத்தில், மேற்கத்திய (பாலிலோன்) மற்றும் கிழக்கத்க்திய நாடுகளுடன் (ஜாவா) கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்ததற்கான என்பதற்கான சான்றுகள் அந்த நாட்ட்டு வரலாற்று குறிப்புகளில் கிடைக்கின்றன.
பேரரசுகள் பெரிதாக உருவாகியிராத அந்த காலகட்டத்தில், வேளிர் எனப்படும் சிறு அரசர்கள் ஆட்சி செய்து வந்தார்கள் என நம்பப்படுகிறது.
சங்ககாலம்
சங்க இலக்கியங்கள், பொது யுகம் முதல் நூற்றாண்டிலிருந்து… நான்காம் நூற்றாண்டிற்கு இடையே எழுதபட்டவை என கருதப்படுகின்றன. இவை குறுநில மன்னர்கள் மற்றும் சேர, சோழ, பாண்டிய அரசர்களைஅரசுகள் பற்றி குறிப்பிடுகின்றன. இந்த அரசுகளிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் தனித்தனி மன்னர்களாக தங்கள் பகுதிகளை ஆட்சி செய்திக்கொண்டிருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
சேர அரசர்கள் உடியஞ்சேரல், நெடுஞ்சேரல் ஆதன், செங்குட்டுவன், வெண்ணி போரில் வெற்றி பெற்ற கரிகால சோழன், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், பாண்டியன் நெடுஞ்செழியன், கடை ஏழு வள்ளல்கள் போன்றவர்கள் இந்த காலத்தை சேர்ந்தவர்கள்.
இதன் பிறகு கள்ளபிரர்களின் ஆட்சிகாலம் தொடங்குகிறது..
பல்லவ பாண்டியர்கள்
கள்ளபிரார்கள் ஆட்சி குறித்து பெரிதாக தகவல்கள் எதுவும் கிடைப்பதில்லை. திருக்குறள் இவர்களின் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். 6ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிம்மவிஷ்ணு பல்லவன் மற்றும் கடுங்கோன் பாண்டியன் கள்ளபிரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். 6ம் நூற்றாண்டிலிருந்து கிட்டதட்ட 10ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் ஆட்சி நடைபெறுகிறது. சேரநிலம் பெருமாள் என்ற மன்னர்களின் அளுகையில் இருக்கிறது. தமிழ்கத்தின் சில பகுதிகளில் குறுநில மன்னர்களின் ஆட்சியும் தொடர்ந்து வந்தது.
சோழர்கள்
பொயு 10ம் நூற்றாண்டில் சோழர்கள் வலுபெறுகிறார்கள். சுந்தரசோழன், உத்தமசோழர்கள் தொடங்கி வைக்கும் வளர்ச்சி, பொயு 985ல் ஆட்சிக்கு வந்த ராஜராஜனில் காலத்தில் உச்சியை அடைகிறது. ராஜராஜன் பாண்டியர்களையும், சேரர்களையும் (காந்தளூர்) வெற்றி கொள்கிறான். பொயு 1010ல் தஞ்சை பெரிய கோவில் கட்டிமுடிக்கப்படுகிறது. சோழர்கள் சாளுக்கியர்களுடன் பாண்டியர்களுடன் தொடர் போரில் ஈடுபட்டு வந்தனர். 12ம் நூற்றாண்டில், குலோத்துங்கனின் ஆட்சிகாலம் வரை சோழர்களின் கை ஓங்கி நிற்கிறது. இந்தகாலத்தில் சேரர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை.
பாண்டியர்கள், விஜநகர நாயக்கர்கள்
பொயு 13ம் நூற்றாண்டில் ஜடவர்மன் சுந்தர பாண்டியுன் ஆட்சிக்கு வந்த பின் சோழர்களின் ஆதிக்கம் குறைந்து பாண்டியர்கள் வலுபெற தொடங்குகிறார்கள். அவர்கள் வலுபெற தொடங்கில சில காலத்திலேயே, பொயு 14ம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் (கில்ஜி) அரசின் படைகள் மதுரையை கைபற்றுகின்றன. அவர்களிடமிருந்து தமிழக ஆட்சி விஜயநகர பேரரசிடம் கை மாறுகிறது. அவர்கள் சார்பில் 16ம் நூற்றாண்டில் தமிழகத்தை நிர்வகிக்க நாயக்கர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
நாயக்கர்கள்
விஜயநகர அரசின் பிரதிநிதிகளாக தமிழகத்தில் நாயக்கர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நியமிக்கப்படும் நாயக்கர்கள், நாளடைவில் சுதந்திர அரசாகவும் செயல்பட தொடங்கினர். தமிழகம் மூன்று நாயக்கர்களின் ஆளுகைக்கீழ் பிரிக்கப்பட்டிருந்தது, மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி. மதுரை நாயக்கர்களில் முக்கியமானவர்கள் திருமலை நாயக்கர் மற்றும் ராணி மங்கமாள். சேவப்ப, அச்சுதப்ப, ரகுநாத நாயக்கர்கள் தஞ்சையை ஆட்சி செய்தார்கள். சென்னப்ப நாயக்கர் போன்றோர் செஞ்சி நாயக்கர்களை சேர்ந்தவர்கள்.
நவாப்கள், பாளையர்கள் மற்றும் சீமைகள்
17ம் நூற்றாண்டின் இருதியில், முகாலைய அரசர் ஔரங்கசீப், தமிழகத்தின் ஆட்சி உரிமையை ஆர்காட்டு நவாப்களுக்கு அளிக்கிறார். செஞ்சியை தலை நகராக கொண்டு ஆண்டு வந்த இவர்கள், பிறகு தங்கள் தலைநகரை ஆர்காட்டிற்கு மாற்றுகிறார்கள். ஐரோப்பியர்கள் இவர்களின் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் நுழைய தொடங்குகிறார்கள். 19ம் நூற்றாண்டில், நவாப் அரசு வாரிசு இழப்புக்கொள்கையின் படி ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வருகிறது.
பாண்டியகாலத்திலிருந்தே, தெந்தமிழக நிலப்பகுதி பாளையங்களாக பிரிக்கப்பட்டு, அரசின் கீழ் ஆளப்பட்டு வந்தன. நாயக்கர் காலத்தில் இவை மேலும் வலுபெற்ற உள்ளாட்சி அமைப்புகளாக விரிகின்றன. 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பளையங்கள் தனி அரசுகளாக பிரியதொடங்குகின்றன. கட்டபொம்மன், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள் போன்றோர் முக்கிய பாளயக்காரர்கள்.
தஞ்சையில், பதினேழாம் நூற்றாண்டில், வெங்கோஜி, தஞ்சையை கைபற்றியிருந்த மதுரை நாயக்கர்களை வென்று, தஞ்சாவூர் மராட்டிய அரசை நிறுவுகிறார். 19ம் நூற்றாண்டில், வாரிசு இழப்புக்கொள்கையின் படி தஞ்சை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சென்றது.
17ம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை சமஸ்தஅனம் உருவாகிறது. ஆங்கிலேயர்களிடம் நட்பாக இருந்த இந்த அரசு, விடுதலை வரை தனி அரசாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டை அரசர்கள் தொண்டைமான் என்ற பெயர் கொண்டிருந்தார்கள்.
மதுரை நாயக்கர்கள் ராமேஸ்வரத்தில் அமைத்த படைநிலை, 17ம் நூற்றாண்டில், ரகுநாத கிழவரின் தலமையில், தனி நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. (ராமநாதபுரம் சமஸ்தானம்).
இது போல, சிவகங்கை மற்றும் ஆரணியிலும் ஆங்கிலேய ஆதரவுடன் சாகிர்கள் முறைப்படி ஆட்சி நடந்து வந்தது.
ஆங்கிலேயர்கள் மற்றும் விடுதலை
இதை விரிவாக எழுதப்போவதில்லை. தரங்கம்பாடியில் தொடங்கிய டேனிஷ் ஆட்சி, பாண்டிச்சேரியில் தொடங்கிகிய பிரெஞ்ச் ஆட்சி போன்றவற்றை முறியடித்து (கர்நாடக போர்கள்) ஆங்கிலேய அரசு தமிழகத்தின் ஆட்சியை கைபற்றுகிறது.
இதன் பிறகு சுதந்திர போராட்டம், விடுதலை, பொழிவாரி பிரிவுகள் போன்றவை பரவலாக நாம் அறிந்தவையே.
இந்த அடிப்படை காலகோட்டை மனதில் வல்வைத்துக்கொண்டு பயணிக்கும்பொழுது, நாம் காணும் இடங்களின் முக்கியத்துவத்தை வரலாற்றில் நிறுத்தி பார்க்கமுடியும் என நம்புகிறேன்.
பிகு: இந்த பதிவிற்கு முக்கிய உதவியாக க. அ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய A History of South India: from prehistoric times to the fall of Vijayanagar. Oxford University Press. 1955 என்ற நூல் அமைந்தது.