இன்னும் மேலே மேலே என்று தான் தேடிக்கொண்டிருந்தேன். 11ல் வரலாறும், சமூகவியலும் பிடித்தாலும் அறிவியல் தான் மேலானது என அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். SRMல் பொறியியல் முடித்த பின், எல்லாரும் ITக்கு செல்கிறார்கள், அதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம், என்னால் இன்னும் மேலே செல்ல இயலும் என இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றில் MBA சேர்ந்தேன், அங்கும் கடினம், ஆனால் என்னால் முடியும் என்பதற்காகவே நிதி மேலாண்மை தேர்ந்தெடுத்தேன். MBA கொஞ்சம் வாசிப்பு, நிறைய பயணம் என கடந்து சென்றது. Placements பொழுது, மீண்டும் அனைவரும் செல்வது போல் backend processing பக்கம் செல்லக்கூடாது என client facing roleயை தேடி சேர்ந்தேன். அங்கும் அமையயியலவில்லை. மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்ற ஆசை இருந்தது. Ivy Leagueல் மீண்டும் MBA படித்து Wall Streetல் வேலைக்கு சேர வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக வைத்துக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய மிகப்பெரிய வீடு… a billionaire’s life போன்ற ஆசைகள். ஒரே ஒரு காரணம் தான். என்னால் இயலும், ஆகவே எவ்வளவு இயலுமோ அவ்வளவு முன்னேற வேண்டும். ஏன் அந்த வாய்ப்பை தவறவிட வேண்டுமென. முதல் படியாக ஒரு International Certificationல் முதல் நிலையை கடந்தேன். கூடவே அமேரிக்காவில் MBA பயில, அங்கு எனக்கு admission கிடைக்க சாத்தியம் என்ன என அறிய profile evaluation செய்து, முதல் 20 பல்கலைகழக்கங்களில் இடம் நிச்சயம் என்றாலும், முதல் 5 கல்லூரிகளில் சேர இன்னும் கொஞ்சம் profile develop செய்ய வேண்டும் என்பதால் அதற்கு உழைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால், அதே நேரம் ஒரு தத்தளிப்பும் கேள்வியும் கூடவே இருந்தது… இந்த தேடல் எதற்கு? என்ன அடைய போகிறோம்? இன்னாருக்கு இன்னார் என்ன உறவு, ஒரு எண்ணின் முப்பதாம் வர்க்கத்தின் கடைசி எண் என்ன என்பதையெல்லாம் சரியாக கூறி அவர்களிடம் நிரூபித்தது, லாபத்தை அதிகரிக்கும் வழிகளை இரண்டு வருடம் பயின்று, ஒரு நிறுவனத்திற்கு நாளின் 12 மனிநேரத்தையாவது அடகு வைத்து எனக்கு சாத்தியமான செல்வத்தை சேர்த்தால், நான் மகிழ்ச்சியாக இருப்பேனா? இப்பொழுது இந்த 8 மணிநேர வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?? மிகவும் யோசிக்க வைத்த சொல் மகிழ்ச்சி தான். நான் எங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்?? எது மகிழ்ச்சி?
இந்த குழப்பங்களுக்கிடையே நாமக்கலில் ஜெவுடன் இரண்டு நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேசியவை… பிறகு அவரது தன்மீட்சி கட்டுரைகள் என இவை அனைத்தும் சேர்ந்து எனது தேடலின் அர்த்தமின்மையை உணரச்செய்தன. அர்த்தமற்ற தேடல்களுக்காக வாழ்க்கையை தொலைப்பவர்களை குறித்து ஜெ திரும்ப திரும்ப பேசியுள்ளார்.
அதன் தாக்கத்தில், தொடர்ந்து யோசித்ததில், Finance industryன் உச்சானிக்கொம்பில் அமர்ந்தாலும் நான் மகிழ்வுறப்போவதில்லை என்பதை உணர்ந்தேன். நான் மகிழ்ந்திருப்பது பயணங்களில் மட்டுமே.
வாழ்நாள் முழுதும் ஒரு பயணியாக வாழ்ந்துவிட முடிந்தால் போதும் எனக்கு. ஆனால், பயணம் என்றால் பணம் வேண்டும். பணம் இல்லையென்றால் சுத்தம் கிடைக்காது. சுத்தமில்லாத பயணங்கள் எனக்கு கொஞ்சம் உவப்பில்லை. நகரின் அனைத்து சாலைகளிலும் சந்துகளிலும் நடந்தாலும், இரவு படுக்க ஒரு நல்ல அறையை மனம் தேடிக்கொண்டிருக்கும். அந்த சிறு வசதியை உதர முடிந்ததில்லை. கிட்டத்தட்ட இந்த மனநிலையில் தான் அந்த கடிதத்தை எழுதினேன்.
ஜெ இவ்வாறு கூறினார்
//அழகு முக்கியமானதாகப் படுகிறது. மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. ஆனால் வசதியின்மை முற்றாக நிலைகுலையச் செய்வதில்லை. அழகின்மை எரிச்சலையும் அன்னியத்தன்மையையும் அளிப்பதில்லை. ஒரு தொடக்கநிலை தயக்கத்திற்குப் பின் கடக்க முடிகிறது.//
என்னாலும் கடக்க இயலும் என எண்ணுகிறேன். ஆனாலும், முழுதாக அப்படி கிளம்ப இயலவில்லை. அடிப்படை வசதிகள் கொண்ட பயணங்களை மேற்கொள்ளவாவது பணம் வேண்டும். வேலை வேண்டும்…. ஆனால் செய்யும் வேலையில் மகிழ்ச்சியில்லை.
அந்த காலத்தில்
1. இணையம் வழியாக உளவியல்பாதிப்பு உள்ளவர்களுக்கு நட்பான உரையாடல் மூலம் உதவ தொடங்கி இருந்தேன். இன்று வரை கிட்ட தட்ட 1000 உரையாடல்களை கடந்திருப்பேன். அங்க உரையாடும் பொழுது… முறையான தேர்ச்சி இல்லை என்றாலும், ஓரளவிற்கு என்னால் உதவ முடிகிறது. மனம் நிறைவவடைகிறது.
2. கல்லூரி முதலே இணைந்துள்ள தொண்டு நிறுவனத்தில் சக தன்னார்வளர்களுடன் ஒரு இரண்டுநாள் முகாமில் கலந்துக்கொண்டேன். ஒரு கற்றல் சார்ந்த நிகழ்வு என்றாலும் முழுக்க முழுக்க மகிழ்ந்திருந்தேன்.
ஜெ, இன்னொரு கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்
“நாம் வாழ்வது சரியான வாழ்க்கையா என்று நாமே மதிப்பிடுவது மிக எளிது …. எது நமக்கு உண்மையான நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது, அதை நோக்கி நாம் சென்றிருக்கிறோமா என்று அவதானித்தால் போதும்.”
இதையெல்லாம் வாசித்தபின், வேவ்வேறு சொற்களில் ஆசனிடமிருந்து கேட்டப்பின் பணம், சம்பாதியம் அவசியமென்றாலும், மகிழ்வளிக்காத வழியில் தொடர்ந்து அதை ஈட்டவோ, அந்த தேடலில் வாழ்வை வீணடிக்கவோ மனம் ஒப்பவில்லை.
எனக்காக நிறைவையும் மகிழ்ச்சியையும் மேற்குறிப்பிட்ட இரண்டிலும் அடைய முடிகிறது… அதில் தொடர்ந்து ஈடுபடுவோம் என பூமி என்ற தொண்டு நிறுவனத்தில் முழுநேர ஊழியனாக இணைந்தேன். 6 இலக்கமாக இருந்த சம்பளம், இன்று எனது தேவைகளுக்கு போதுமான அளவில் இருக்கிறது. 5 நாட்கள், 40 மணிநேரம் வேலை செய்தவன், இன்று 6 நாட்கள் நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறேன். கடந்த சில வாரங்களாக 7 நாட்களுமே. ஆனாலும்.. மகிழ்வாக இருக்கிறேன். நிறைவாக இருக்கிறேன்.
அதே சமயம், இங்கு எனது உள்ளுணர்வு திறக்கிறதா? இல்லை என்று தான் தோண்றுகிறது. எனவே எனது தன்னறம் இது இல்லையா??
தன்னறமோ, இல்லையோ, எனக்கான இடம் இது. எனது பயணங்களுக்கான பணத்தை இங்கு ஈட்ட முடியும். இங்கிருந்து பலவற்றையும் ஆழம் பார்க்க முடிகிறது. வரலாறு குறித்து வாசிக்க முடிகிறது, தத்துவங்கள் குறித்து யோசிக்க முடிகிறது… public policy எனக்கு பிடித்த துறை. அதன் அடிப்படைகளை அறிய ஏதேனும் இலவச வகுப்புகளில் இணைய முடியும். நான் குவிவதற்கும், உலகியல் தேடலை… எனக்கான தேடலாக மாற்றவும் இந்த வேலை வழி செய்கிறது. இந்த வேலை தரும் மகிழ்வும், நிறைவும் வழி செய்கிறது. இந்த தேடலின் நிறைவில் எனக்கான தன்னறம் எங்காவது இருக்கும்…
கூடவே தொலைநிலை கல்வியில் உளவியலும் பயின்று வருகிறேன். முதுகலை பட்டம் பெற்றபின் உளவியளாளராக செயலாற்ற இயலும். அதில் எனது உள்ளுணர்வு திறக்கும் என உள்ளுணர்வு சொல்கிறது… பார்ப்போம்!