மூன்றாம் ஆண்டு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மே 12 அன்று விருது அறிவிக்கப்பட்டதுமே, விழா ஏற்பாடுகள் சென்னை வட்டத்தின் சார்பில் தொடங்கி விட்டன. எனது பங்களிப்பாக அமைப்பினருடன் இணைந்து செயலாற்ற முடிந்தது சிறு மகிழ்ச்சி.
வழக்கம் போல் நேற்று காலையே விருந்தினர்கள், அழைப்பாளர்கள் நண்பர்கள் என அனைவரும் விடுதி அறையில் சந்தித்து உரையாட தொடங்கி விட்டோம்.
ஜெவின் சமிப பதிவுகள் குறித்து பேசிக்கொண்டிருந்த பொழுது மலையாள கவிஞர் பி. ராமன் வந்தார். நீண்ட நாள் கழித்து சந்தித்துக் கொண்ட பால்ய நண்பர்களாய் அவர்கள் உரையாடிக் கொண்டிருக்க நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். சமகால மலையாள, தமிழ் கவிதை, திரையிசை, கதகளி என பல விஷயங்களை குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அடுத்து, நண்பர் ச. துரை வந்தார். அவருடன் ஒரு சிறு அறிமுகம்.
Ofcourse, ஜெ இருக்கும் இடத்தில் இலக்கியம் இல்லாமலா? எழுத்தாளர் குறித்த மதிப்புரைகளில் ஜெ உருவாக்கும் உருவகங்கள் குறித்து விஷால் கேட்க, ரசனைசார் மதிப்பீடு, பிரதிசார் மதிப்பீடு மற்றும் கல்வித்துறை சார்ந்த மதிப்பீடுகளின் வித்தியாசங்களை விளக்கி, தனது அழகியல்சார் விமர்சனங்களின் அடிப்படையில் இருப்பவை படிமங்கள் என ஜெ விளக்கினார். விமர்சனங்களும் படைப்பு செயல்பாட்டிற்கு இணையானவை என கூறினார்.
12 மணி வாக்கில், நண்பர்களுக்கு டீ மற்றும் கொறிப்பான்கள் கொடுத்து விட்டு, நான், முத்து மற்றும் காளி மத்திய உணவு வாங்க புஹாரி சென்றோம். அங்கு கொஞ்சம் தாமதம் ஆக, இங்கு ஜெ 2 மணி நிகழ்விற்கு இவ்வளவு தாமதமாக கிளம்புவதா என கொதிப்படைய… ஒரு வழியாக சமாளித்து அனைவரும் அரங்கு சென்றடைந்தோம்.
முந்தைய நிகழ்வு முடிந்து தாமதமாக தான் அரங்கு எங்கள் கைக்கு வந்திருந்தது. சிறுகதை அமர்வை உடனடியாக தொடங்கி, பின்னணியில் நாங்கள் மற்ற ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டோம்.
மதிய அமர்விற்கே, அரங்கு நிறையும் கூட்டம் இருந்தது. பார்வையாளர்களின் கூரிய கேள்விகளுடன் விவாதத்தில் பங்கு கொண்டனர்.
மதிய வெயிலில், அரங்கில் குளிர் சாதனம் வேலை செய்யாதது மட்டும் ஒரு குறையாக அமைந்து விட்டது.
நல்லவேளையாக, மாலை விழாவிற்கு அரங்கினர் 2 air coolers ஏற்பாடு செய்தனர். கூடவே, ஏசியும் ஒரு பகுதி வேலை செய்ய தொடங்கியது.
மாலை விருது விழாவில், மலையாள கவிஞர் பி ராமன் மற்றும் தேவதேவன், ச துரை அவர்களுக்கு ஜெயமோகன் 2019ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதை அளித்தனர். நண்பர் அருணாசலம் மஹாரஜன் மற்றும் ஜெயமோகன் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் மனுஷ்யுத்திரன் வந்திருந்தார்.
இரவு உணவிற்கு, MGR புகழ், அம்மா செட்டிநாடு உணவகத்திற்கு சென்றோம். நண்பர்கள் சிலர் அரங்கிலேயே விடைப்பெற்றனர். சிலர், உணவகத்தில்.
விடுதிக்கு வர இரவு 10:30 ஆனது. மீண்டும் நண்பர்களுடன் அரட்டை. ஜெ, குரு நித்தியா குறித்து பேசாமல், ஒரு நாளும் சென்றதில்லை என்று கூறுவார். நேற்று இரவு பேச்சு, குரு குறித்தும், ஆசிரம அனுபவங்கள் குறித்தும் திரும்பியது. அங்கிருந்து பல இடங்களில் பயணித்து ஊவேசா மற்றும் அவரது குரு, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் வந்து முடியும் பொழுது இரவு மணி 1.
ஜெ உறங்க செல்ல, அனைவரிடமும் விடைபெற்று நானும் கிளம்பினேன்.