காலை ஆறு மணிக்கு நமக்கலில் இறங்கியதில் இருந்து இந்த கட்டுரையை தொடங்குவது அடித்து துவைத்து காயவைக்கப்பட்ட தேய்வழக்காம். வேறு எங்கிருந்து தொடங்குவது? என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? யாருக்காக எழுதுவது? எதை எழுதக்கூடாது? எப்படி எழுதக்கூடாது? எதற்கு எழுதுவது? இப்படி ஓராயிரம் கேள்விகளுக்கு பதில் தேடி தான் நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்!

பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்கனவே சில நண்பர்கள் காத்திருந்தார்கள், இலக்கிய விவாதமும் தொடங்கிவிட்டிருந்தது. புதிய வாசகர்களின் படைப்புகள் முதல் விஷ்ணுபுரம் வரை அவரவர் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தோம்.

அமைப்பாளர்கள், பேருந்து நிலையத்திலிருந்து சந்திப்பு அரங்கிற்கு வாகனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் சவாரியில் நாங்கள் 13 பேர் அரங்கை அடைந்தோம்.

மொத்த ஊரே ஒரு பெரிய பண்ணைத் தோட்டம் போல் தான் இருந்தது. தொடக்கத்தில் வயல்களில் மரவள்ளிக் கிழங்கு செடிகள். உள்ளே செல்ல செல்ல மாதோட்டங்கள். வாகனத்தில் இருந்து இறங்கியதும் மயில் ஒன்று தோகை விரித்து எங்களை வரவேற்றது!
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை, தொட்டுவிடும் தூரத்தில் மலை இலக்கியம் பேச இதைவிட சிறந்த இடம் கிடைத்துவிடுமா என்ன?

நாங்கள் குளித்து தயாராக, மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்தனர். காலை உணவு, கோதுமை ரவா உப்புமா, தேங்காய் சட்னியுடன் தயாரானது. நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே, ஜெமோ எழுந்தருளினார்!

நலம்விசாரிப்புகளின் இடையே, தன்னிச்சையாக நகுலன் பற்றி பேச்சு திரும்பியது. அதுவே சந்திப்பிற்கு தொடக்கமாகவும் அமைந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு நீண்ட கேள்வி பதில் அமர்வாகவே இந்த சந்திப்பை பார்க்கிறேன்.

அதிகாரப்பூர்வமாக, சந்திப்பு ஞாயிறு மதியம் முடிவடைந்தாலும், இரவு ரயில் ஏறும் வரை ஜெமோ வாசகர்களுடன் தான் இருந்தார். உள்ளறையில் கட்டில் இருந்தாலும், சனி இரவு எங்களுடன் முற்றத்தில் தான் உறங்கினார். எதுவும் பேசாவிட்டாலும், ஒரு ஆளுமையுடன்,அளுமை அருகில் இரண்டு நாட்கள் இருப்பதின் மூலமாக மட்டுமே நாம் அடையக்கூடியது மிகப்பெரியது.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திய விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் சந்திப்பை ஒருங்கிணைத்த நண்பர்கள் வரதராஜன் மற்றும் மகேஷ் அவர்களுக்கு எங்கள் அனைவர் சார்பிலும் நன்றிகள்.

அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த இருவரின் கைப்பக்குவத்தில் ஐந்து வேளையும் சுவையான உணவு. போதுமென்ற சொல்லே செவிக்கொள்ளாது, அள்ளிப் பரிமாறிய விருந்தோம்பல் நிறைவளித்தது.

ஜொமோவும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தார். அனைத்துக் கேள்விகளுக்கும் மிக ஆழமான பதில்கள், அனுபவ பகிர்வுகள் என ஒருவர் சாதாரணமாக உள்வாங்கக்கூடியதை காட்டிலும் பன்மடங்கு செறிவான தகவல்களை பகிர்ந்துக் கொண்டு இருந்தார். (நல்ல வேலை நான் குறிப்பு எடுத்துக்கொண்டேன்).

கேள்விகளுக்கு, நேரடியாக மட்டும் பதில் அளிக்காமல், அந்த கேள்விகள் எங்கிருந்து எழுகிறது என ஊய்த்துணர்ந்து அதற்கும் சேர்த்தே பதிலளித்தார்.

இந்த இரு நாட்களில், நான் கற்றுக்கொண்டது, எனது கேள்விகளுக்கு பதில் அவரிடம் இல்லை. என்னுள் நானே தேடி கணடடைய வேண்டியவை அவை என்பதே!