வாசகசாலை மற்றும் பனுவல் புத்தக விற்பனை நிலையம் இணைந்து நடத்தும் மாதாந்திர கதையாடல் நிகழ்வின் முப்பத்தி ஐந்தாம் அமர்வு கடந்த சனி (03/08/2019) அன்று நடைபெற்றது.
நண்பர் காளிபிரசாத் (எழு. காளி), இந்த நிகழ்வில் பேச விருப்பமா என கேட்டிருந்தார். இலக்கிய நிகழ்வுகளில் பேசும் அளவிற்கு வாசிப்பு பின்புலமோ, அனுபவமோ இல்லை என்ற தயக்கம் இருந்தது. ஆனாலும், காளி எங்கேனும் பேசி தொடங்க வேண்டும் என ஊக்குவித்து, வாசகசாலை உறுப்பினர் கார்த்திகேயன் அவர்களுடன் இணைத்து விட்டார்.
முதலில், ரவி நடராஜனின் ‘டேடா மதம்’ குறித்து பேச விருப்பம் தெரிவித்திருந்தாலும், கார்த்திகேயனுடன் ஆலோசித்து, உயிர்மையில் வெளிவந்த ஆத்மார்த்தி அவர்களின் ‘மிஸ்டர். கே’ குறித்து நான் பேசுவதாய் முடிவானது.

அனுபவங்கள் மூலம், வாசகசாலை அமைப்பை குறித்த ஒரு உள்ளப்பதிவு இருந்தது. நேற்றைய நிகழ்வுக்கு பின் அது பெரிதும் மாறியுள்ளது. எந்த அமைப்பிற்குமே, அதன் மையம்மாக செயல் படுபவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இங்கு, கார்த்திகேயனின் இலக்கிய ஞானமும், தேடலும் இந்த அமர்வுகளை செறிவான விவாதங்கள் மூலம், கொண்டுசெல்ல மிகவும் உதவுகின்றன.
பிரவின் குமாரின், “வழி தேடும் வேட்கை” குறித்து பேசிய மிருதுளா, முதலாமாண்டு கல்லூரி மாணவி. அவர் தனது கருத்துக்களை மிகவும் லாகவமாகவும், சரளமாகவும் எடுத்துரைத்தார். கதை, பெண்ணியம் சார்ந்தது என்பது அவருக்கு உதவியிருக்கலாம். ஒரு சிறந்த பேச்சாளராக வருவதற்கான திறன் உள்ளவர். கிளிஷே என்றாலும், இந்த வயதில், சமூக பொறுப்புணர்வும், அறிவும் இருப்பவர்களை பார்பதே அரிதல்லவா.
ரவி நடராஜின், ‘டேடா மதம்’ குறித்து முத்துக்குமார் முருகேசன் பேசினார். கதைபற்றி பேச அதிகம் இல்லை என்றாலும், கதை சார்ந்து ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. டேடாவும் ஒரு மதம் தான் என்ற கதையின் கருத்து, எவருக்குமே ஏற்ப்புடையதாக இருக்கவில்லை.

காலத்துகளின் ‘அந்திக்கிருஸ்துவின் வருகை’குறித்து அபர்ணா பேசினார். ஒரு பள்ளி மாணவனின் அதீத கற்பனை என்பதை தாண்டி, இந்த கதையில் நாம் பெற வேண்டியது என்ன என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது. தனிபதிவாக எழுதும் எண்ணம் உள்ளது.

இறுதியாக, கணேசகுமாரின் ‘பால்‘ சிறுகதை குறித்து வசந்தி பாரதி அவர்கள் பேசினார்கள். கதையின் வெளிப்படையான எழுத்து சில வாசகர்களுக்கு ஒவ்வாமை அளிக்கக்கூடும் என்றாலும், கதைகளத்திற்கு அவசியமில்லாத எதுவும் திணிக்கப்படவில்லை என எண்ணுகிறேன். சமுகத்தில் ஓரின சேர்க்கையாளர்களின் இடத்தை, அவர்களின் வலியை பேசும் நிலையில் இருந்து முன்னேறி, அவர்களுக்குள் ஏற்படும் உறவு, உணர்வு சிக்கல்களை பற்றி இந்த கதை பேசியுள்ளது. அந்த வகையில் இது ஒரு முக்கியமான படைப்பு என்று எண்ணுகிறேன்.