வாழ்க்கை மிகமிக அரிதானது என்றும், ஒருநாளை ஒரு கணத்தைக்கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். என்னைச்சுற்றி இயற்கையின் அழகும் மகத்துவமும் நிறைந்திருக்க, கலையின் சிந்தனையின் உன்னதங்கள் எனக்குச் சாத்தியமாக இருக்க, என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன் என

தேடியவர்களிடம் எஞ்சுவது ஜெயமோகன்

பித்து பிடிக்க வைக்கும் வரிகள் இவை. வாழ்ந்தால் இப்படி வாழவேண்டுமென அறைகூவல் விடுக்கும் சொற்கள். ஜெ கூறுவது போல, ஒரு கணத்தைக்கூட வீணாக்கமல் வாழ்ந்துவிட வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனாலும், பல இயலாமைகளால் செயலின்மையில் திளைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதோ, இந்த பதிவையே எடுத்துக்கொள்வோம். அக்டோபர் 30 அன்று நண்பர்களிடம் இதைப்பற்றி எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினேன். அதற்கு முன்பே சில வாரங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த பதிவில் கூறப்போகும் பல விஷயங்களை பல வருடங்களாகவே எண்ணிக்கொண்டிருக்கிறேன். எதையுமே செய்ததில்லை.

சோம்பித் திரியேல் என ஔவை சொன்னதை எனக்கு நானே கூறிக்கொண்டாலும், இது சோம்பல் அல்ல. அயர்ச்சி. பெரும் மனச்சோர்வு. கூடவே நேயறியப்பட்ட ஆளுமைச்சிதைவு. அதன் விவரங்களுக்குள்ளோ, குறிப்பிட்ட வகைப்பாடுகளுக்குள்ளோ இப்பொழுது செல்ல விரும்பவில்லை. பல்முனை கொண்ட அதன் தாக்கங்களில், இங்கு நான் பேச விரும்பவது ஒன்றை பற்றியே. செயல்!

இருத்தலிலிருந்து பிரக்ஞைபூர்வமாக வாழ்தல் என்ற நிலைக்கு வந்ததே சில வருடங்கள் முன்பு தான். அங்கு, முதலில் எதிர்கொண்டது உணர்வுகள், உறவுகள் சார்ந்த ஐயங்கள் என்றாலும், அடிப்படையில் ‘வாழ்வின் அர்த்தமின்மை’, ‘இங்கு எனது இடமென்ன?’ போன்ற கேள்விகள். அந்த நாட்களை, ஜெவின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால்: “மிகப்பெரிய சோர்வு ஒருகாலத்தில் இருந்தது. அந்நிலையைக் கண்ட நண்பர்கள் பலர் உள்ளனர். நாட்கணக்கில் குளிக்காமல், சவரம் செய்யாமல். ஆடை மாற்றாமல், உணவுண்ணாமல் கிறுக்கன்போலவே இருந்திருக்கிறேன். நாட்கணக்கில் ஒரு சொல் கூட பேசாமல் இருந்திருக்கிறேன்.” ஆனால், ஜெ அதை, “அங்கிருந்து என் விடையைக் கண்டடையும் வரை ஒரு பயணம் இருந்தது. அது எனக்குரிய செயலை ஆற்றியமையால் நான் அடைந்தது. இது நான் கண்டடைந்த விடை. நீங்கள் ஒன்றைக் கண்டடையலாம். உங்கள் தேடல் உங்களுக்கு.” எனக்கூறி தான் முடிக்கிறார்.

எனக்கான முழு விடையை அடைந்து விட்டேனா என தெரியவில்லை என்றாலும், ‘ஏன் வாழவேண்டும்?’ என்ற கேள்வி என்னுள் இன்று இல்லை. உள்ளே, ஏதோ எதையோ கண்டடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஆனால், உயிர்க்கிறேன் என்பதை தாண்டி என்ன செய்கிறேன்? பிறருக்கு, உலகுக்கு என்பதை விடுவோம், எனக்கு.. எனது விழைவுகள், எனது தேடல்கள் கூட ஒரு இருக்கட்டும். என்னைப்பேண? எனது வாழ்வை சீராக்க? என்ன செய்கிறேன்? எதுவுமே இல்லை.

இங்கு நான் எனது உளநலனை குறை சொல்லலாம், பிணிமாற்று முறைகளுக்கும், மருந்துக்களுக்கும் பின் ஒளிந்துக்கொள்ளலாம். ஒரு உளவியளாலனாக நான் செய்ய வேண்டியதும் அது தான். அதை செய்யாமலும் இல்லை. ஆனால், உளவியல் சொல்லும் விஷயங்கள் ஏற்ப்புடையதாக இருந்தாலும், அதன் வழிமுறைகள் எனக்கு உவப்பாக இல்லை.. அல்லது ஜெவின் வழி எனக்கு மேலும் உவப்பாக உள்ளது.

“ஆகவே அர்ச்சுனா கொலை புரிக!” என்ற தேரோட்டியின் கூற்றைத்தான் ஜெ வழிமொழிகிறார். அவர் வார்த்தைகளில் பயணித்து நான் கணடடைந்த வழி ஒன்று என் கண்முன்னே இருக்கிறது. நீண்ட நாட்களாகவே. ஆனால், அதை ஒரு இனிய கனவாக, சாத்தியங்களாக காண விரும்பும் மனம், அதை பரு வடிவாக, நிஜமாக, செயலாக மாற்ற தயங்குகிறது. இதை எழுதுவதில் எழும் தயக்கங்களை வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சும்மா இருக்க விரும்பும் மனத்திலிருந்து, எனது கனவுகளும், விழைவுகளும் மிகத்தொலைவில் இருக்கின்றன. ஆனால், எனது எண்ண ஓட்டங்களையும், தினசரி செயல்பாடுகளையும் முடிவு செய்வது மனம் தானே. இந்த இருமையை எப்படி எதிர்கொள்வது? ஜெ, தனது ஒரு கடிதத்திற்கு, “தன்னை வரையறை செய்தல்” என்ற தலைப்பளிக்கிறார். நான் செய்ய வேண்டியதும் அதுவே. நான் யாரென முதலில் வரையறை செய்தல், தொடர்து நன் வரையறை செய்த நானாக நானாதல்.

u/warboss36 on reddit

“Fake it till you make it” என்ற ஒரு சொலவடை உண்டு. நான் ஒரு அறிவியக்கவாதி என்றால், தேர்ந்த அறிவியக்கவாதி எப்படி இருப்பானோ அப்படி வாழ்தல். ஒரு இலக்கிய வாசகன் என்றால், தலைசிறந்த வாசகனாகவே வாழ்தல். பிரக்ஞைப்பூர்வமாக இப்படி உந்தி மட்டுமே செயலாற்ற முடியும் அல்லவா?

சோம்பல் என்பது ஓர் இயல்பான உளநிலை.சும்மா இருக்கத்தான் உள்ளம் விரும்பும். அதை உந்திச்செலுத்தித்தான் செயலுக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதை எப்போதும் செய்துகொண்டிருக்கவேண்டும். இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டால் அது அசையவே அசையாது.

ஆணவமும் சோம்பலும் , ஜெ

இங்கு, இரு விஷயங்கள். ஒன்று, அந்த உந்துதல்.. உந்துச்சத்தி எது? தன்முனைப்பு என எளிதாக சொல்லலாம். ஆனாது அது இல்லாது போதல் தானே இங்கு இடரே. இரண்டு, நான் யார்? நான் யாராக ஆகப்போகிறேன். முதல் கேள்வியை பின்பும், இரண்டாவது கேள்வியை முதலிலும் பரிசிலிப்போம்.

நான் யார்? இதற்கு அறுதியான பதில் ‘என் தன்னறம்.’ ஆனால், அதை நோக்கிய நெடிய பயணத்திலும், என்னை நான் வரையறை செய்துக்கொள்ள வேண்டியுள்ளதே? என்னவாக வரையறுப்பது? முன்பு கூறியது போல், இவ்வளவு நாட்களாக என்னுள் சாத்தியங்களாக இருந்த என்னை இங்கு விவரிக்கிறேன், நான்.. am a traveler, am a reader, am a counsellor, am an intellect, am a student of philosophy, culture and history, a painter and… lets hold it there. இவற்றை கண்டடைந்ததின் பின்பும் ஒரு பெரிய பயணம் உள்ளது, ஓரளவிற்கு சென்ற பதிவிலேயே கூறியது தான். இன்னொரு தருணத்தில் மேலும்.

இங்கு நான் என்னை வரையறை செய்வது, 30 வருடங்களுக்கு முன், பி கே பாலகிருஷ்ணனிடம், ஜெ தன்னை ‘தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளன்” என அறிமுகம் செய்துக்கொண்டது போல், எனக்கு நானே விடுத்துக்கொள்ளும் அறைகூவல். ஆனால், அவர்போல் ‘சிறந்த எழுத்தாளன்’ என்றோ, ‘மாபெரும் மகாபாரத படைப்பை எழுதுவேன்’ என்றோ குறிப்பாக என்னால் இப்பொழுது கூற இயலவில்லை. ஆனால், இந்த துறைகளில் குறிப்பிடத்தக்க ஒருவனாக ஆவேன் என்பது நிச்சயம். இதற்கு அடிநாதமாக, “மெஷின கண்டிஷனா வைச்சிக்கனும்”ன்ற முக்கியமான விஷயமும் இருக்கிறது. உடல்நலன்.

ஓரளவிற்கு இணைத்து பார்த்தால் ஒரு பிம்பம் எழுந்து வருகிறது. ஆரோகியமாக, உடல்நலனை பேனும் ஒருவனாக, அலுவலகத்திற்கு நியாயம் செய்யும் அளவிற்கு வேலை செய்பவனாக, ஒரு இலக்கோடு பயணங்கள் மேற்கொள்பவனாக, பயணங்களை தியானிப்பவனாக, தமிழ் இலக்கியத்தில் பரந்த வாசிப்பு உள்ளவனாக, மனோதத்துவத்தில் அறிமுகம் உள்ளவனாக, அறிவியக்கத்தில் முக்கியமான தரப்பாக முன்னெழ தேவையான பல்துறை வாசிப்பு உள்ளவனாக, கூடவே கொஞ்சம் water painting செய்ய முயல்பபவனாக. எழுதுகையில் மிகப்பெரிதாக இருக்கிறது ஆனால் அது அப்படி தானே? மாபெரும் கனவுகள் தானே நம்மை முன்னகர்த்துகின்றன!

சரி ஒரு உருவகம், மனதிலிருந்தது.. இப்பொழுது ஒரு வகையில், எழுத்தில் என் முன் உள்ளது. ஆனால், இதை நோக்கி எப்படி பயணிப்பது? செயலின்மையின் பிடியிலிருந்து எப்படி வெளிவருவது? மிண்டும் ஜெவிடம் செல்வோம்,

இப்படி ஒரு சவாலை நமக்குநாமே விடுத்துக்கொள்ளாவிட்டால் நாம் இன்றைய சூழலில் வாசிக்க மாட்டோம். ‘இயல்பாக’ வாசிக்கவேண்டும் என சிலர் சொல்லலாம். ஆனால் அவ்வாறு எதுவுமே ‘இயல்பாக’ நிகழ்வதில்லை. தீவிரமானவை எல்லாமே நோன்புகளாகக் கடைக்கொள்ளப்படவேண்டியவை. எழுதுவது வாசிப்பது மட்டும் அல்ல சிந்திப்பதுகூட. அதற்கென முடிவுகொள்ளவேண்டும். அதற்கென நேரம் ஒதுக்கவேண்டும். அதற்கான தடைகளைக் கண்டடைந்து நீக்கவேண்டும். அதன்மூலம் அடையும் பயிற்சியை ஒருங்கமைத்துக்கொள்ளவேண்டும்

வாசிப்பு எனும் நோன்பு , ஜெ

எனக்கான நோன்பாக சிலவற்றை நானே விதித்துக்கொண்டு அதை பின்பற்ற முயல வேண்டும். செயலாற்றினாலும், ஆற்றாவிட்டாலும் எந்த மாற்றமும் இல்லை என்ற எண்ணம் உள்ளே இருக்கிறது. அதை வெல்ல, நான் யார், யாராக விரும்புகிறேன் என எனக்கே தினமும் சொல்லிக்கொள்ள வேண்டும். அந்த கனவு தான் நான் என்ற பிரக்ஞை எனக்குள் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த துறைகள் சார்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பது உதவலாம். பண்பாட்டு வகுப்புகள், நண்பர் குழும உரையாடல்கள் போன்றவையும் பலனளிக்கும். தொடர்ந்து இத்துறைகள் சார்ந்து செயல்படுதல்.

இந்த நோன்புகளை எனக்கு நானே விதித்துக்கொண்டு இருப்பது மட்டுமல்லாமல், அவற்றை நண்பர்களிடம் பகிர்ந்து செய்தாக வேண்டிய கட்டாயத்தை அவர்கள் மூலம் உருவாக்க இயலும் என எண்ணுகிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்புக்கொள்ளலாம்.

சரி என்னன்ன நோன்புகள்? பின்வரும் தலைப்புகளில் அவற்றை பிரிக்கலாம் என எண்ணுகிறேன். நாளொழுங்கு மற்றும் உடல்நலன், அலுவல், விஷ்ணுபுரம் வட்டம்சார்ந்தவை, வாசிப்பு, மனோதத்துவம், ஓவியம், பயணம்.

நாளொழுங்கு மற்றும் உடல்நலன் – தினமும் ஒரே நேரத்தில் உறங்கி எழ வேண்டும். 12 முதல் காலை 7 வரை. ஒரு மணி நேரம் யோகா, ஒரு மணி நேரம் நடை, தினம் 4 லிட்டர் நீர் அருந்த வேண்டும், தினமும் தவறாமல் மாத்திரைகள். நேரத்திற்கு உணவு. வீட்டில் மீன்கள், பறவைகள் பராமரிப்பிற்கு குறைந்தது ஒரு 30 நிமிடங்கள். ஆம், அடிப்படை விஷயங்கள் தாம். ஆனால், விதித்துக்கொள்ளாவிட்டால் செய்ய மாட்டேன் என எனக்கு தெரியும்.

அலுவலகம்.. குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை. அலுவலத்திற்காக செலவு செய்ய விரும்பும் 6 -8 மணி நேரம் முழுவதும் முடிந்த வரை productiveஆக இருக்க வேண்டும்.

விஷ்ணுபுரம் சார்ந்து பல செயல்களை முன்னெடுத்து, பங்கெடுத்து பாதியில் நிற்கிறது. ஜெயமோகன் தளத்திற்கு புதிய வடிவமைப்பு, விஷ்ணுபுரம் அமைப்பிற்கு ஒரு இணையதளம், வெண்முரசிற்கான விக்கி, ஆசானின் புகைப்படங்கள், கானொளிகளை தொகுத்தல், கூடவே எண்னங்கள் ஆசைகளாக மேலும்பல. தினம் ஒரு 30 நிமிடங்களாவது regular வேலைகளுக்காக தேவைப்படும். அது அல்லாது, வாரத்தில் குறைந்தது 8 மணி நேரம் இது சார்ந்த வேலைகளில் செலவிட வேண்டும் என வகுத்துக்கொள்ளலாம்.

வாசிப்பு எனபது மிகவும் பெரிய வட்டம். இலக்கியம் மற்றும் அறிவியக்கம் சார்ந்தவை. இதை இவ்வாறு வகுக்க முயல்கிறேன். இந்த வருடம், குறைந்தது நூறு புத்தகங்கள் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகம் குறித்தும் விரிவாக எழுத வேண்டும். மேலும், தினமும் ஒரு சிறு பதிவு. எதைப்பற்றி வேண்டுமானலும். நண்பர்கள் வாசிக்க, நினைப்பகிர்வு என இருக்கலாம். கூடவே, வாரம் ஒரு விரிவான முழுமையான பதிவு. மொத்தம் மூன்று குறிக்கோள்கள். வாசிப்பையும், எழுத்தின் தரத்தை மேன்படுத்தவும் இவை உதவும் என எண்ணுகிறேன். இவை அல்லாமல், ஆலயக்கலை போன்ற வகுப்புகள், seen and the unseen போன்ற podcasts என வாழ்வின் மைய பயணமாக இது இருக்க வேண்டும்.

Psychology, முதல் செமஸ்டர் எழுதவில்லை. கொரோனா தயவால் இரண்டாம் செமஸ்டர் முடிவடைந்துவிட்டது. இந்த வருடம் மூன்று பருவத்தேர்வுகள் இருக்கும் என எண்ணுகிறேன். அதற்கான வாசிப்பு மட்டுமலாது, அந்த துறையின் முழு அறிதலையும் கறக வேண்டும் என்ற ஆசை உள்ளது. வாரத்தில் குறைந்தது 10 மணி நேரம் இதற்காக செலவிட வேண்டும்.

ஓவியம்… ஆசை என்ற நிலையில் தான் இருகிறது. oil paintingல் ஒரு வண்ணத்திற்கு மீது இன்னொரு வண்னம் பூசி அதை மறையச்செய்ய முடியும். water paintingல் இயலாது, ஆகவே ஒரு அடிப்படை நிபுணத்துவம் தேவைப்படும் கலை இது. பல மாதங்களுக்கு ஒருமுறை முயல்தல் என இருப்பதை மாதம் ஒரு ஓவியம் வரைந்து பார்க்கிறேன் என மாற வேண்டும். ஒரு துறையில் நிபுணனாக 1000 மணிநேர பயிற்சி வேண்டும் என கூறுவார்கள். ரமேஷ் அண்ணா, முன்பை விட சிறந்தது என 100 ஓவியங்களை வரந்துப்பார்க்கச் சொன்னார். இரண்டு அலகுகலிலுமே மிக மெதுவாக தான் தொடங்குகிறேன். ஆனால், இங்காவது தொடங்குவோம்.

பயணங்கள். வாழ்நாள் முழுதும் பயணித்தாலும் மகிழ்சி என்றாலும், அப்படி இருக்க இயலாது. பணம் வேண்டும். வருடத்திற்கு ஒரு பெரிய பயணம் என வகுத்துள்ளேன். சென்ற வருடம் கைகூடவில்லை. இந்த வருடம் செல்ல முயல்வோம். அஜந்தா, எல்லோரா, ஹம்பி போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் பயணிக்க திட்டம். அதுமட்டுமல்லாது, மாதம் ஒரு புதிய இடத்திற்கு செல்ல வேண்டும். சென்னையிலும், சென்னைக்கு அருகிலேயும் பல பழமையான கோவில்கள் உள்ளன, சென்னை அருங்காட்சியகம் உள்ளது. சென்னையிலிருந்து சில மணிநேர பயணத்தில் பல வரலாற்று சின்னங்கள் உள்ளன. ஒரு நாள் அல்லது over a weekend செய்யக்கூடிய பயணம். இந்த மாதம் சென்னையின் இரு பழமையான தேவாலயங்களை (லஸ் காட்டுக்கோவில் மற்றும் புனித தோமாயர் ஆலயம்) காண அமைந்தது. கூடவே, கோவையில் பேலூர் கோவிலுக்கும் சென்று வந்தேன். பயணங்களை பற்றி எழுதுவது முக்கியம். அதையும் முயல்கிறேன்.

மொத்தத்தில், எழுத்தின் வழி என்னை கட்டமைத்தல்… நான் வாசித்த, கற்ற, பயணித்தை அனைத்தையுமே எழுத்தாக பார்க்க முடிந்தாலே, அறிவியக்கத்தின் ஒரு பகுதியாக என்னை நானே உணரத்தொடங்குவேன் என நம்புகிறேன்.