சென்னை வட்ட குழுமத்தில் நண்பர் வெங்கட் ‘ழ‘ விற்கு ‘zha’ என்ற குறியீட்டை யார் அறிமுகபடுத்தினார்கள்? அதை யார் வரையறை செய்தார்கள் என கேட்டிருந்தார். அதற்கு நண்பர் மதுசூதன் சம்பத் (வெண்முரசில் பெயர்கள் செயலியை உருவாக்கியுள்ளார்) ஒரு முதல்கட்ட பதிலளித்திருந்தார். ஆனால், தேடினால் இன்னும் சுவாரஸியமான தகவல்கள் கிடைக்கக்கூடும் எனவும் கூறினார். அதிலிருந்து ஊந்தப்பட்டு கடந்த 3 மணிநேரங்களாக இணையத்தில் உலாவியதில் கண்டடைந்த தகவல்களை தொகுத்துக்கொள்ள இந்த பதிவை எழுதுகிறேன். மூன்று பகுதிகளாக இதை பிரித்துக்கொள்ளலாம்:

1. ழ என்ற ஒலியமைப்பு தமிழில் மட்டுமே உள்ளதா?

ழ என்ற ஒலியை voiced retroflex approximant என குறிப்பிடுகிறார்கள். இந்த ஒலி 15 மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளில் சில வார்த்தைகளின் உச்சரிப்பில் மட்டுமே பயன் படுத்தப்படுவதால், தமிழ் மொழியில் இருப்பது போல் தனி எழுத்துரு எத்தனை மொழிகளில் உள்ளது என தெரியவில்லை. இந்த ஒலியை பற்றி மேலும் அறிய விக்கி மற்றும் கூகிளை அனுகலாம். ஒலிப்பியல் முறையில் இந்த ஒலியை ɻ (தலைகீழாக்கப்பட்ட r) என்ற குறியின் மூலம் சுட்டுகிறார்கள். தமிழ் என்ற வார்த்தையின் உச்சரிப்பு, ஒலிப்பியல் முறையில் (International Phonetic Alphabet) t̪amiɻ.

2. ழ – ஒலிபெயர்ப்பு – transliteration

இதில் சமிபத்தில் இருந்து பின்னால் செல்வது உச்சிதம் என தோன்றுகிறது. ஒலிபெயற்பிற்கு பொதுவாக ஏற்கப்பட்ட ISO15919 (2001ல் வெளிவந்தது) தர நிர்ணயம் தென்கிழக்காசியா, கிழக்காசியா மற்றும் இந்திய துணை கண்டத்தில் பயன்படுத்தப்படும் பாமினி மொழிகளை ஆங்கில எழுத்துருக்கு மாற்றுவதற்கான நெறிமுறைகளை குறிப்பிடுகிறது. இதில் ழ என்பதை என்ற குறியின் மூலம் சுட்டுகிறார்கள். (சிறிய Lன் கீழ் ஒரு கோடு). 1923ல் வெளிவந்த தமிழ் பேரகராதியும் இந்த முறையையே பின் பற்றியிருக்கிறது.

சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்க பல நிர்ணயங்கள் உருவாகி வந்துள்ளன. ஆனால் குறிப்பிட்டு தமிழுக்கென எதுவும் உருவாக்கப்படவில்லை. தமிழ்க அரசு Tamil99 போன்று கனினியில் தமிழை உபயோகிக்க தனி விசைப்பலகை போன்றவற்றை முன்னெடுத்தாலும், தமிழிலிருந்து ஒலிபெயர்பிற்கான நிர்ணயங்கள் விரிவாக இல்லை. வடமொழிகளில் ழ என்ற ஒலி இல்லாத காரனத்தால், அவர்கல் ல ள போன்றவற்றிற்கு உபயோகித்த L என்ற எழுத்தையே தமிழில் ழவிற்கும் உபயோகித்தோம் என எண்ணத்தோண்றுகிறது. பிறகு, பிரித்தறிய l (ல), (ள), (ழ) என உபயோகிக்க தொடங்கியிருக்கலாம். Unicode முறை ழ என்பதை LLLA என கூறிப்பிடுகிறது. தமிழ் Tamil ஆனதும் இப்படிதானிருக்கலாம்.

3. ழ -> Zha

தற்பொழுதுள்ள தமிழு உள்ளீட்டு செயலிகளில் பெரும்பான்மையானவை, ழ என எழுத zha என்பதையே உபயோகிக்கின்றன. 1988ல் கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் (The National Library at Calcutta), இந்திய மொழிகளை ஆங்கிலத்தில் ஒலிமாற்ற (diacritic marks to be used for romanization of Indian scripts) ஒரு கையேட்டை வெளியிடுகிறது. அதில் ழ என்பதை ẕa என குறிப்பிட்டிருக்கிறார்கள். எனினும் இதன் முதல் தொடக்கம் எங்கு என கண்டறிய பலரும் முயன்றுள்ளனர்.

2.அ. ஒலிபெயர்ப்பு

பேராசிரியர் சி. இலக்குவனார் தான் 1930களில் இதை முதன்முதலில் உபயோகித்து, தொடர்ந்து முன்வைத்தார் என ஒரு தரப்பினர் நிறுவ முயற்சித்தாலும், பல வருடங்களாகவே அறிஞர்களால் za உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதை நாம் காணலாம்.

1985ல் வெளிவந்த திருக்குறள் பதிப்பில், பரிமேலழகரை Parimelazhagar என குறிப்பிட்டுள்ளார்கள்.

1812ல் வெளிவந்த எல்லிஸின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலும் இந்த உபயோகத்தை பார்க்கலாம்.

பத்தொன்பதாம் நுற்றாண்டில் (?) வெளிவந்த ஜெர்மணியின் கோன் பல்கலைகழக அகராதியிலும் இந்த பயன்பாடு உள்ளது.

அதே சமயம், 1840ல் வெளிவந்த இன்னொரு தொகுப்பில் ழவிற்கு ra உபயோகப்படுத்தப்படுள்ளது.

எனவே, இந்தியவியல் ஆய்வாளர்கள் தங்கள் மொழிப்பின்னனி போன்றவற்றின் தாக்கத்தில் தங்களுக்கு விருப்பமான வகையில் ழவை ஒலிபெயர்த்தார்கள் என கருதலாம்.

பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ழான் (Jean-Luc Chevillard), ஒரு இணைய உரையாடலில் 1772ல் வெளிவந்த Alphabetum grandonico-malabaricum sive samscrudonicum என்ற நூலை பற்றி குறிப்பிடுகிறார். இது, இத்தாலியை சேர்ந்த Giovanni Cristofano Amaduzzi என்ற மொழியியல் ஆய்வாளரால் மலையாள மொழியைப்பற்றி எழுதப்பட்டது. இது மலையாளம் குறித்து ஐரோப்பாவில் வெளிவந்த முதல் நூலாகும். அதில் மலையாலத்தில் உள்ள ழ என்ற உச்சரிப்பிற்கு z என்ற எழுத்தையே குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்க தொடங்கிய காலத்தில் இருந்தே ழ என்ற ஒலிக்கு zha/la என்ற இரண்டு குறியீடுகளுமே உபயோகத்தில் இருந்தது என கருதுகிறேன்.

2.அ. உள்ளீடு

ஒலிபெயர்ப்பின் பின்னனி அதுவென்றால், தமிழ் உள்ளீட்டு விசைப்பலகைகளில் ழ zha வானது எப்பொழுது? அச்சுப்போல் l (ல), (ள), (ழ) என மூன்று அமைப்புகள் இங்கு இல்லை. L,l என இரண்டு மட்டும்தான் எனும்பொழுது ழவிற்கு புதிதாக ஒரு எழுத்தை கண்டடைய வேண்டும். அதற்கு zha ஒலியமைப்பில் மிகவும் ஒத்துப்போவதால் அதை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பது common sense. ஆனால், இதை முதலில் செயல்படுத்தியது யார்?
1986ல் மத்திய அரசு InScript என்ற விசைப்பலகை அமைப்பை இந்திய மொழிகளுக்காக அமல்படுத்துகிறது. 1999ல் தமிழக அரசு தமிழ்99 என்ற விசைப்பலகையை அதிகாரபூர்வமாக்குகிறது. அது தட்டச்சிற்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆங்கில எழுத்துக்களுடன் ஒலி இணைவு பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

தமிழ்99

அதேப்போல், தமிழில் முதலில் வந்த எழுத்துருக்கள் அனைத்துமே தங்களுக்கென தனி விசைப்பலகை அமைப்பைக்கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக பாமினி எழுத்துருவின் விசைப்பலகையை கீழே பார்க்கலாம்.

தமிழில் Unicode எழுத்துரு வந்தபின் அரசு மற்றொரு விசைப்பலகையை அறிமுகப்படுத்தியது

இவை எதுவுமே இன்று பரவலாக உபயோகிக்கப்படுவதில்லை. இன்று அனைவரும் உபயோகிப்பது, phonetic keyboard எனப்படுகிற ஒலிப்புச்சார் விசைப்பலகை. இதன் முன்னோடி யார் என தேடியதில், தமிழ் உள்ளீட்டு செயலிகளுக்கே முன்னோடி 2000த்தில் வெளிவந்த அழகி செயலி என தெரிகிறது. அதன் தொடக்கத்திலேயே phonetic keyboard இருந்ததா என உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் அழகிக்கும் ஒரு முன்னோடி இருக்க வேண்டும் என தேடியதில், Project Madurai (மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்) முன்னெடுப்பை தொடங்கிய முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்களின் மயிலை எழுத்துருவை கண்டடைந்தேன். 1993ல் உருவாக்கப்பட்டது என இணையம் கூறுகிறது. 1997க்கு முன் உருவாக்கப்பட்டது என என்னால் உறுதிசெய்ய முடிந்தது.

இந்த விசைப்பலகையில் ழ விற்கு z என்ற keyயை உபயோகித்திருக்கிறார். அந்த முழு விசைப்பலகையுமே, இன்று நாம் உபயோகிக்கும் விசைப்பலகையை பெரும்பாலும் ஒத்திருக்கிறது. எனது தேடலில், தமிழ் உள்ளீட்டு செயலிகளின் முன்னோடி, ழவிற்கு zhaவை உபயோகிப்பதற்கான முன்னோடி என மயிலை எழுத்துருவையும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்களைதான் குறிப்பிடவேண்டும்.


பின்குறிப்புகள்:

  1. சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுத பல நிர்ணயங்கள் வெளிவந்துள்ளன. அவை ஒரு தனி பதிவாகவே எழுத வேண்டிய அளவிற்கு சுவாரஸ்யமானவை. Sir Roger Dowler methodல் இருந்து, Hunterian Systemற்கு 1872ல் மாறி, International Alphabet of Sanskrit Transliteration (IAST) என 1894ல் ஜெனிவாவில் ஒப்புதல் பெற்று… வளர்ந்து வந்தது. ஆனால், இதில் பரவலாகவும் எளிதாகவும் உபயோகப்படுத்தப்படுவது ITRANS என்ற ஒலிபெயர்ப்பு முறை. இது உருவாக காரணம் என்னவென்றால்….

1992ல் ஆர்குட், யாகுவிற்கெல்லாம் முன்பு, usenet என்ற இணைய தளத்தில் இந்திய சினிமா பாடல்களுக்காக ஒரு குழு உருவாகிறது. Rec.Music.Indian.Misc. இந்த குழு இந்திய, முக்கியமாக இந்தி சினிமா பாடல்களை பற்றி விவாதிக்கிறது. தங்கள் விவாதங்களுக்காக இந்திய மொழியை ஆங்கிலத்திலும், ஆங்கில உள்ளீட்டை இந்திய மொழியிலும் மொழிபெயர்க்கும் ITRANS என்ற செயலியை உருவாக்குகிறார்கள். இப்படி உருவான அவர்களின் ஒலிபெயர்ப்பு அமைப்பு இன்று விரிவாக உபயோகிக்கப்படுகிறது.

2. தமிழில் எதைக்குறித்து தேடினாலும், என்னற்ற பார்வைக்கட்டுப்பாடு இல்லாத கூகிள் குழுமங்களில் இருந்து தகவல்களை உடனடியாக பெற முடிகிறது. அந்த விவாதங்களை முன்னெடுத்தவர்களையும், public groupஆக வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்தோரையும் மனதார வணங்குகிறேன்.

கூடவே, தமிழ் தட்டச்சின் தொடக்கத்தில் பலரும் பயன் பாராது தங்கள் பங்களிப்பை அளித்துள்ளார்கள். இன்று அவற்றில் பல இணைய தளங்கள் செயல்படுவது கூட இல்லை. ஆனால், அவர்களின் பங்களிப்பின் பயனாக தான் இவ்வளவு எளிதாக யுனிக்கோடில் நான் தட்டச்சு செய்வதை சிரமமின்றி உங்களால் வாசிக்க இயல்கிறது. பங்களித்த அனைவருக்குமே தமிழ் சமுகம் நன்றிகடன் பட்டுள்ளோம். 🙏🏾