ஒரு சிறுகதை விவாதம்

நாகப்பிரகாஷ் அவர்களின் சகடம் சிறுகதையும், அவரது கடிதமும் மேலுள்ள சுட்டியில்.

முதல் வாசிப்பு: அமுதனின் பார்வையில் கதை தொடங்குகிறது. அங்கங்கே அவன் பங்கு பெறாத காட்சிகள் கதைச்சொல்லியின் பார்வையில் வருகின்றன. கதையில் இறுதியில் கதைச்சொல்லியின் பார்வையில் ஒரு flashback காட்சி. ஒரு தருணத்தில், ஒரு வாசகத்தில் கதை முடிகிறது. முதல் வாசிப்பில், அந்த நினைவு அமுதனின் பார்வையில் விரிவதில்லை என்பதை கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் இந்த கதையை எளிதில் கடந்து சென்றிருப்பேனோ என்னவோ! நாயை ஒருவர் அடிப்பதில் இருந்து, தன்னைதானே ஒருவர் வருத்திக்கொள்வது (தீவிர யோகா) வரை மற்றவர்களின் செயல்கள், காட்சிகள் மற்றும் அதற்கு தனது மனதின் எதிர்வினைகள் பற்றி அமுதன் கூறி வருகிறான். ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடும் என நான் உருவகிக்கும் சிறுவனின் அவதானிப்புகள் கொஞ்சம் பெரிய மனுஷ தனமாக இருக்கின்றன. கூர்ந்து நோக்கும் தன்மை உடைவனாகவும் இருக்கிறான். (கடையின் அமைப்பு போன்றவற்றை நுனுக்கமாகவே கவனிக்கிறான்). இப்படி இருப்பவன், ஏன் கடைசியில் தனது தாயை பற்றி பேசி முடிக்கிறான்?? வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த முதல் கேள்வி இதுதான்.  

எண்ணங்கள்: ஒரு நல்ல சிறுகதை, கதை முடிந்த பின்பும், வாசகனின் மனதில் நிகழ்ந்துகொண்டிருப்பது. கதையப்பற்றி, கதை மாந்தரின் வாழ்க்கையை பற்றி வாசகனை யோசிக்க வைப்பது. இந்த கதையின் முடிவு, அதிர்ச்சி அளித்தாலும், அதிர்ச்சி அளிக்க வேண்டுமென வலிந்து திணிக்கப்படவில்லை.கதை நிகழ்வதே அங்கு தான். அதுவரை அமுதன் பற்றி, பரமேஸ்வரன் பற்றி நாம்முள் எழுந்த பிம்பங்கள் அனைத்தும் உடைந்து, அனைத்தையும் புதிதாக பார்க்க நேர்கிறது. பல கேள்விகளுடன். இரண்டு நாட்களாக இந்த கேள்விகள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது, தோண்றிய சில எண்ணங்கள்:1) அவனது அம்மா எங்கே? உயிரோடு இருக்கிறாளா? பரமேஸ்வரனின் வீட்டில், அவனது நிலையை புரிந்துக்கொள்ளும் வயதில் யாரும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? அவனது மனைவி இருந்தால், அவளுக்கு புரியாதா என்ன? கிடைக்காமல் கிடைத்த ஐந்து ரூபயை ஏன் செலவழித்து அமுதனை கடைக்கு கூட்டிச்செல்ல வேண்டும்? வீட்டில் அவனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையா? 2) நாயை ஒருவன் உதைப்பதை பார்த்து அமுதன் ஏன் தலையை அடைத்து, கண்களை மூடிக்கொள்கிறான்? Was he abused? Did he see others get abused? Is his father abusive? 3) அம்மா மயங்கி விழுந்தவுடன் ஏன் அங்கிருந்து ஓடிவிட வேண்டுமென எண்ணுகிறான்? பரமேஸ்வரன் மேல் ஏன் கோவம் கொள்கிறான்? 

கேள்விகளை மனதில் இருத்தி, இரண்டாம் வாசிப்பு: இதில் முதல் வாசிப்பின் கேள்விகள் கூர் கொள்ள வில்லை. இந்த கேள்விகள் குறித்து முதல் வாசிப்பில் தவறவிட்ட தகவல்கள் / குறியீடுகள் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாம் வாசிப்பில், பிரதானமாக வந்தது, பரமேஸ்வரனின் கை. கொஞ்சம் பருமனானவர். மெல்லிய கைகள் கொண்டவர். ஆனால் பலமற்றவர். //அந்தக் கைகள் நெகிழ்வாக விரிந்து வருவதை உணர்ந்தார். ஒருவேளை இப்படிக் கைகள் முயன்றபோது நீண்டிருந்தால் பணத்தைத் தொட்டுவிட்டிருக்கலாம் என்று தோன்றியது. // இது பரமேஸ்வரனின் கைகளாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. தந்தையின் பலமற்ற கைகளை பார்த்த அமுதனை, திவாகரனின் திடமான கைகள் ஈர்க்கின்றன. அதற்கான காரணத்தையும் கடைசி காட்சியில் சொல்லிவிடுகிறார் கதைச்சொல்லி. பரமேஸ்வரனின் பாத்திரம், இந்த வாசிப்பில் உருவாகி வந்தது. விமர்சனம் / அவதானிப்பு:கதையை இப்படி எழுதியிருக்கலாம் என கூறுவது சரியல்ல என எண்ணுகிறேன். எழுதிய கதையை அப்படியே ஏற்றுக்கொண்டு எனது எண்ணங்கள் மட்டும்: 

1) சிறுகதையின் ஒருமை (unity) இந்த கதையில் ஒருமை இருப்பதாக எண்ணி வாசிக்கும் பொழுது, தொடக்க பகுதியில் நாயின் பார்வையில் இவ்வாறு தெரியும் என அமுதன் எண்ணுவதாக புரிந்துக்கொண்டு, அந்த வர்ணனையை அமுதனின் கதாபாத்திரத்துடன்இணைத்துக்கொள்கிறேன். இது மட்டுமல்ல, கதையில் வரும் அதீத தகவல்கள் அனைத்துமே அமுதனின் பார்வையில் தான். அதை கொண்டு அவனை உருவகிக்கிறேன். //சுவரை ஒட்டி வைத்திருக்கும் அலமாரி. வெளியிலிருந்து கைநீட்டினாலும் எட்டாது. இருந்தாலும் பூட்டப்பட்டிருக்கும்.// சிறுவன் இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். ஆனால் கடைசியில் அம்மாவை தூக்கிச்செல்லும் பொழுது, இவன் வீட்டிற்கு கொண்டி போட்டுவிட்டு தான் செல்கிறான். ஆக, இந்த உபரி தகவல்களின் ஊடே அமுதனை புரிந்துக்கொள்ளளாம். ஆசிரியரின் எண்ணம் அதுவாக இல்லை என்றால், அந்த பகுதிகள் கதையில் வர வேண்டிய அவசியத்தை அவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். 1a. நான் அடைந்த கேள்விகள், என்னுள் அடைந்தவை. ஆசிரியர் முன்வைக்க விரும்பும் கேள்வியை குறித்து கதை நகர்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். அந்த கேள்வியை நோக்கி செல்ல, இவ்வளவு துணை பாதைகள் அவசியம் என அவர் எண்ணினால், தவறேதும் இல்லை. ஆனால், அதை தாண்டி, கதைபோக்கிற்கு அவசியமற்றதாக இருப்பதை கண்டிப்புடன் நீக்க வேண்டியதும் ஆசிரியனின் கடமை. //எனக்கு கொஞ்சுவதற்கு எங்கள் தெரு வழியே போகிற நாய்க்குட்டிகளும் பூனைகளும் தேவைப்படுவது போலவே அம்மாவுக்கு நான் வேண்டும்.// கதையில் உருவாகிவரும் அமுதனின் கதாபாத்திரத்திற்கும் இந்த வரிக்கும் சம்பந்தம் இல்லை. வாசகனாக, அதையும் உள்ளிழுத்து அமுதனை உருவகிக்க வேண்டியுள்ளது. இது, ஆசிரியரின் குரலா, ஆசிரியரின் அவதானிப்பா, அல்லது நிஜமாகவே அமுதனின் எண்ணமா? அம்மா, பாசம், கொஞ்சுதல் போன்றவற்றை இவ்வளவு லௌகீகமாக அந்த வயதிலேயே அவன் பார்க்கிறான் என்றால், அவன் எதையெல்லாம் கடந்து வந்திருப்பான்?! இதை எத்தனிக்காமல், அமுதனின் குரலாக இல்லாமல், அழகியலுக்காக / தத்துவமாக ஆசிரியர், அவரின் எண்ணமாக இதை அங்கு எழுதியிருப்பார் என்றால், அது கதைக்கு செய்யும் அவமதிப்பு. முடிவு செய்ய வேண்டியது ஆசிரியர் மட்டுமே. வாசகனாக, இதில் உள்ள அனைத்து தகவல்களும் ஒரே முடிச்சை நோக்கி என்றுக்கொண்டால், பரமேஸ்வரனின் குணங்களையும், அமுதனின் செயல்களையும் இனைக்கும் வாசக இடைவெளி, அடிகோடிட்டோ, குறிப்புணர்த்தியோ கூட பேசப்படவில்லை. அவர்களிடையே ஒரு விலக்கம் இருப்பதாக தோன்றினாலும், கடையில் நடப்பதை அவன் அப்பாவிடம் கூறுகிறான். வாசகனாக, என்னால், கதையை ஒரு புள்ளியில் ஒன்றுதிரட்ட இயலவில்லை. (சிறுகதைக்கு அது அவசியமல்லவா?). அது, வாசகனின் பிரச்சனை, நான் கூற வேண்டிய அனைத்தும் கதையில் ஏற்கனவே உள்ளது என்று திடமாக சொல்ல இயலுமா என ஆசிரியர் முடிவு செய்யட்டும். 

2) மொழிப்பிரச்சனைகள்: பல இடங்களில், மொழி சரியாக கையாளப்படவில்லை. 

அ) என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் ‘யோகா’ என்றார். என் முகத்தில் ஆச்சர்யத்தை கவனித்திருப்பார். ஏதேனும் நான் சொல்வேன் என்று காத்திருந்தார். அமைதியாக அவரை கவனித்தேன். எதிர்மறை. 

ஆ) எனக்கும் அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. இப்போதுதான் நான். சில வாரங்களாக மட்டுமே. எனக்கு அர்த்தம் ஏதும் தராத பாதி வாக்கியங்கள். 

இ) அவரோடு எனக்குத் தெரிந்த ஆசனங்கள் குறித்துப் பேசினேன். செய்து காட்டுகிறேன். கால பிரச்சனை. 

ஈ) அவர் சட்டையில் வேர்வையும் உடலின் உப்பு வாடையும். அமுதன் ஆம்புலன்ஸ்காரரின் முதுகுப்பக்கம் நின்று தன் அம்மாவைத் தொடுவது போல இறங்கும்போதும் மேலே வந்து வீசியது. நவீன எழுத்துமுறையோ? 

உ) எப்போது கடன் வாங்கினோம் என்பது வீட்டில் எல்லாருக்கும் நினைவில் இருந்தது. அவர்கள் வந்து சேர்ந்த நேரத்தில் பரமேஸ்வரன் அன்றைய தினத்தை எப்படிச் சமாளிப்பது என்கிற குழப்பத்தில் கருந்தேனீர்க் குவளையை கையில் வாங்கியிருந்தார். இதில் முதல் வரி சொல்ல வருவது என்ன? அவ்வளவு அடர்த்தியான வரிக்கான அவசியம் என்ன? 

ஊ) அவனை பேருந்திலும் ஏற்றிவிட்ட பின்னர் பேருந்து போன திசையிலேயே நடக்கத் தொடங்கினார். எதற்கு லும்! எ) மிச்சமிருந்த சில்லரையைப் தேடி எடுத்துக்கொண்டு பையில் பெட்டிகள் 
ஒற்று.

அன்பு நாகபிரகாஷ்,
அனைவருக்கும் புரியவோ, அனைவரும் ஏற்கவோ கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. கலையில் உச்சம் நோக்கி பயணிக்கிறோமா என்று மட்டும் நோக்கவும். உச்சம் தொட்டவர்களை வாசித்து, உச்சம் என்றால் என்ன என்பதையும் நீங்களே வகுத்துக்கொள்ளவும். விமர்சகர்கள் ஏற்க்கவில்லை என எழுத்தை மூட்டை கட்டி வைப்பது தவறான முடிவு. எழுதுங்கள். உங்களுள் உள்ள விமர்சகனை முதலில் திருப்தி படுத்துங்கள். உங்களை கராரான விமர்சகனாக வளர்த்துக்கொள்ளுங்கள். அவனது எண்ணம் மட்டுமே பொருட்படுத்தபட வேண்டியது. 
அன்புடன்,
லாஓசி.