தளத்தில் எழுதி, ஏன் பொதுவாக எழுதியே நீண்ட நாட்கள் ஆகின்றன. சென்ற பதிவு மார்ச் 2022ல் எழுதியது. அதன் பின்னான மாற்றங்களை, இங்கு எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
மார்ச்-ல் பூமி அமைப்பில் எனது இடம், பங்களிப்பு பற்றிய கேள்விகளையும், எனது வாழ்க்கை பயணம் எதை நோக்கி என்ற கேள்வியையும் முன்வைத்து முடித்திருந்தேன். அலுவலகத்தில் இரண்டு மாத விடுமுறை பெற்று, தமிழகம் முழுக்க பைக்கில் ஒரு சுற்றுபயணம் சென்றுவந்தேன். அந்த பயணத்தை பதிவு செய்யும் எண்ணத்தில் எழுத தொடங்கியது, ஒரு பதிவுடன் அப்படியே நின்று விட்டது. (அணுபவங்களை மட்டும் எழுதுவதில் விருப்பம் இல்லை, அதனுடன் நான் சென்ற இடங்களின் வரலாற்றையும் இணைத்து எழுத வேண்டும். அதற்கு தேவையான வாசிப்பை வழங்கும் மனநிலையில் நான் அப்பொழுது இருக்கவில்லை). அந்த பயணத்தில், சுக்கிரி உரையாடல்கள் மூலம் அறிமுகமான துறவி ஆனந்த் சுவாமி அவர்களை திருவண்ணாமலையில் சந்தித்தேன். அவருடனான நீண்ட உரையாடல் எனது பல கேள்விகளுக்கு பதிலளித்தது.
ஆகஸ்ட் 2022ல் வேலையிலிருந்து விலகினேன். இப்பொழுது ஆகஸ்ட் 2024. இடையில் எழுந்த தயக்கங்களை, சோர்வுகளை டயரி தளத்தில் பதிவு செய்துள்ளேன். இங்கு அவற்றை விரிவாக பேச விரும்பவில்லை. 2022ன் இறுதியில் முழுமையாக public policy சார்ந்து பணி புரிவது என முடிவெடுத்து விட்டிருந்தேன். 2023 ஜூன் மாதம் நடந்த தேர்வில் தேவையான மதிப்பெண்கள் பெற்று, ஹைதராபாத் பல்கலைகழகத்தில் இரண்டாண்டு முழுநேர முதுகலை பொருளியல் படிப்பில் சேர்ந்துள்ளேன். அடுத்த இலக்கு உலகின் தலைசிறந்த பல்கலைகழகங்கள் ஏதேனும் ஒன்றில் public economics துறையில் முனைவர் பட்டம் பெறுவது.
இந்த flashbackயை பகிர்ந்தது எழுதும் மனநிலைக்கு என்னை நானே உந்திக்கொள்ளும் பொருட்டு எனவும் கூறலாம். இந்த பதிவில் நான் எழுத வந்தது, இன்னொரு வகை திரும்பி பார்த்தலையும், சில திட்டங்களையும்.
எனது உளச்சோர்வை பற்றி பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். எனது தினசரி வாழ்க்கையை பெருமளவு அது பாதித்திருந்தது. அந்த நிலையிலிருந்து பல படிகளினுடாக வெளிவந்தேன். உதவியவற்றில் முதன்மையென உளவியல் ஆலோசனை அமர்வுகளை சுட்டுவேன். ஆலோசகர் ரேனுகா அளித்த அடித்தளமும், அலோசகர் ஹேமாவுடன் நீண்ட நாள் தொடர்ந்த அமர்வுகளும் எனது மன அமைப்பை மாற்ற உதவின. மாற்றத்தை விட, என்னை நானே அறிந்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் அவை மிகவும் உதவின. ஆனாலும், அந்த அமர்வுகளின் பிறகும் எனது செயல்களில் மாற்றமோ தீவிரமோ வரவில்லை என்பதையும் அவதானித்தேன். Barclays வேலை பிடிக்கவில்லை என பூமி அமைப்பில் சேர்ந்தேன். ஆனால் அங்கும் எனது செயல்பாடுகள் எனக்கே திருப்பிகரமாக இருக்கவில்லை. அப்பொழுது antidepressantsயை மீண்டும் எடுக்க தொடங்கினேன். அவற்றை நான் முதன்முதலில் எடுத்தது 2016/17 காலகட்டத்தில். அதன் பலனை என்னால் வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது. தலைமீது இருந்து பெரும் பாரம் இறங்கியது போல, உலகம் துடைத்து வைக்கப்பட்டு வெளிச்சமாக இருப்பது போல, புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். இன்று அந்த மனநிலைக்கு நான் பழகிவிட்டேன். இதுதான் neuro-typical என அறிவேன். அனால், பதின்வயதிலிருந்தே இருளில் வாழ்ந்து பழகிய எனக்கு அது புத்துயிர்ப்பு. ஆனால் அவற்றை நான் தொடர்ந்து எடுக்கவில்லை. ஓரளவிற்கு எனது குழப்பங்களும் தயக்கங்களும் நீங்கிய பின் அவை எனக்கு தேவையில்லை என முடிவுசெய்து நிறுத்திவிட்டிருந்தேன். முன்பு குறிப்பிட்ட செயலூக்கமின்மை சார்ந்து என்னை நானே அவதானிக்கையில் 24 வயதில் இருந்த இருளில் இன்று இல்லை என்றாலும், ஏதோ ஒரு தடை மனதில் இருப்பதை உணர்ந்தேன். உளச்சோர்விற்கான மாத்திரைகளை தொடர்ந்து எடுக்க தொடங்கினேன். இது முதல் திறப்பு.
உளச்சோர்வு இல்லை என்ற நிலையிலும், செயல்களில் தீவிரம், persistance போன்றவை இல்லாமல் இருப்பதை கண்டேன். இதை Procrastination என கருதி, அதிலிருந்து விடுபடும் வழிகளை தேர்ந்துக்கொண்டிருக்கும் பொழுது, ADHD எனும் உளக்கோளாறை பற்றி வாசித்தேன். எனக்கு Working Memory சார்ந்த சிக்கல்கள் இருப்பதையும் கண்டறிந்தேன். அதற்கான மருந்துகளை உட்கொள்ள தொடங்கினேன். இந்த மருந்தின் நேரடி தாக்கம் எதையும் நான் உணர்வதில்லை, ஆனால் அந்த மருந்தை உட்கொண்ட பின் நான் செய்யும் செயல்களில் ஆக்கத்திறன் அதிகமாக இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. பல திசைகளில் ஆர்வமிகும் என் மனநிலையையும், செயல்களில் விரைவில் ஆர்வமிழக்கும் தன்மையையும் இந்த உளக்கோளாறின் வழி புரிந்துக்கொள்ள முடிந்தது. நோய் நடி, அது தணிக்கும் வாய்நாடியது இரண்டாம் திறப்பு.
இவை இரண்டும் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே நடந்துவிட்டன. கல்லூரியில் எனது மனம் முன்பை விட கூடுதல் தெளிவுடன் இருந்தது. ஆனாலும், செய்ய நினைப்பதற்கும் செயலுக்கும் இடையேயான இடைவெளி முழுமையாக விலகவில்லை. அதன் காரணம் எனது தலைவலி. பள்ளிநாட்கள் முதலே தொடர்ந்து விடாத தலைவலி இருந்துக்கொண்டிருந்தது. நெஞ்சக நோய் நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர், தலைவலி சைனஸிற்கான நிபுணர், ஒவ்வாமைக்கான நிபுணர், ஆயுர்வேதா, சித்தா, பஞ்சகர்மா என பல மருத்துவர்களை பல ஆண்டுகளாக ஆலோசித்து பல மருந்துகளை எடுத்துக் கொண்டும் எந்த நிவாரனமும் இல்லை. கடந்த February மாதத்தில் தற்செயலாக காது சார்ந்த பிரச்சனைக்காக ஆலோசித்த மருத்துவரிடம் இந்த தலைவலியை பற்றி கூறிய பொழுது அவர் ஒரு neurologistயை சந்திக்க பரிந்துரைத்தார். (Neurosurgenனை அல்ல எனவும் குறிப்பாக குறிப்பிட்டார்!) நரம்பியல் மருத்துவர் MRI எடுக்க சொன்னார். ஏற்கனவே இருமுறை CT Scan எடுத்துள்ளேன். சோதனை முடிவுகளில் பாதகமாக ஏதும் இல்லாததால் vascular headacheக்கிற்கான மருந்துகளை பரிந்துரைத்தார். இது மூன்றாவது மற்றும் முக்கியமான திறப்பு.
வாழ்வில் முதல்முறையாக தலைவலி இல்லாமல் இருக்கிறேன். கல்லூரியிலிருந்து அறைக்கு திரும்பியதும் படுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. சென்னையில் இருக்கும் பொழுதும், எங்காவது வெளியே சென்று வந்தால் உடனடியாக படுக்க விரும்புவேன். பசியிலிருந்தாலும் சிறிது நேரம் படுத்துவிட்டு தான் உண்பேன். இப்பொழுது அந்த தேவை முழுமையாக இல்லாமல் ஆகிவிட்டது. வகுப்பு முடிந்து 4 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ அறைக்கு திரும்பினால், இரவு வரை என்ன செய்யலாம் என மனம் யோசிக்கிறது, அதற்கான energy மனதில் இருக்கிறது. முதல்முறையாக முழு தினமும் எனது கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனது செயல்கள், எனது தினம் எனது முடிவின்படி என இப்பொழுது கூற முடியும். இரண்டாம் பருவ தேர்வில் 8.5 CGPA பெற்றதற்கும் இது முக்கியமான காரணம் என கூறலாம்.
இந்த மாற்றம் நடந்தது மார்ச், ஏப்ரலில். இப்பொழுது ஆகஸ்ட். இத்தனை மாதங்களில் இதை எப்படி உபயோகித்துக்கொண்டேன் என யோசித்தால் சிறிது ஏமாற்றம் தான். ஏப்ரல் இறுதியில் ஒரு வேலைக்கு விண்னப்பித்திருந்தேன். உடன் சில internshipsகளுக்கும் விண்ணப்பித்திருந்தேன். Mercatus Centre, George Washington Universityல் ஒரு fellowshipற்கும் விண்ணப்பித்திருதேன். ஜூன் ஜூலை விடுமுறையில் அவை அனைத்தின் முடிவுகளும் வெளிவரும் என்பதல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். அதில் எதுவும் நடக்கவில்லை. அது மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. கூடவே, வீட்டில் இருப்பதால் உறவினர் வீடுகளுக்கு செல்வது, கடைக்கு செல்வது என பல வேலைகள். என்னை தொகுத்துக் கொண்டு செயலில் ஈடுபட இயலவில்லை. GRE தேர்வை விடுமுறையில் முடித்துவிட வேண்டும் என எண்ணி இருந்தேன் அது கைகூடவில்லை. ஜூலை இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத் வந்தடைந்தேன். இங்கு அறையை ஒழுங்குப்படுத்துவது, அமைவது என சில நாட்கள் (வாரஙகள்?) வீணாகின. ஆனாலும் பாதிப்பு இல்லை. கடந்த சில வாரங்களாக செயலாற்றிக்கொண்டு இருக்கிறேன். உணவு கட்டுப்பாடு மற்றும் நேரத்திற்கு மருந்துகளை உட்கொள்வதை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறேன். Gym செல்கிறேன். எடை ஒரு 5 கிலோ குறைந்திருக்கிறது. ஆனால் இது வீட்டிற்கு சென்று அதிகமாக உண்டதால் ஏறிய எடை. ஏப்ரலில் இருந்த எடைக்கு தான் திரும்பியுள்ளேன். 30 கிலோ கட்டாயம் குறைக்க வேண்டும், முடிந்தால் 40 கிலோ. நான்கு பாடங்கள், ஒவ்வொன்றிற்கும் வாரத்தில் 4 மணிநேர வகுப்புகள் என மொத்தம் 16 மணி நேரம் தான் வகுப்புகள். மற்ற நேரம் முழுதும் எனது கையில். இந்த திறப்பிற்கு பின் இந்த நேரம் முழுதையுமே ஆக்கத்திற்கான வகையில் உபயோகிக்க முடிகிறது.
இந்த புது திறப்பு, என்னை மூடியிருந்த எல்லா திரைகளும் விலகிய பின் காணும் புது உலகம் எனக்கு புதியது. இதை கையாள நான் அறிந்திருக்கவில்லை. இந்த பதிவை எழுதுவது கூட என்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு முயற்சி தான். ADHD சார்ந்த சவால்கள், borderline சார்ந்த உணர்வு கொந்தளிப்புகள் அப்படியே தான் தொடர்கின்றன. அவற்றை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை செயல்படுத்த இப்பொழுது முடிகிறது. எனக்கு நானே விடுத்துக் கொள்ளும் கட்டளைகளை என்னால் பின்பற்ற முடிகிறது. இதுவரை முயன்று, பலமுறை தோல்வியுற்ற habit tracker, accountability partners போன்றவற்றை இம்முறை வெற்றிக்கரமாக செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்.
இது எனது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம் என அறுதியாக கூற முடியும். இந்த நிலையில் புது குழப்பம் ஒன்று எழுந்துள்ளது. வேலை, fellowship பற்றி சொன்னதன் தொடர்ச்சியாக, எனது வயதை பற்றிய தன்னுணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிகம் தாமதமாகிவிட்டது, என்னிடம் வீணடிக்க நேரமில்லை என்ற உணர்வு. அந்த பார்வையில், இது 2024 ஆகஸ்ட். 2025 மே-ல் எனது முதுகலை படிப்பு முடிவடைந்தால், அந்த ஆண்டு செப்டம்பரில் நான் முனைவர் பட்டபடிப்பில் சேர வேண்டும். அடுத்த ஆண்டிற்கான (2025) சேர்க்கைக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் (2024) விண்னப்பிக்க வேண்டும். கிட்டத்தட்ட 4 மாதங்கள் தான் கையில் இருக்கிறது. அதற்குள், GRE தேர்வு, single authored research paper ஒன்றை எழுதுவது, விண்ணப்பங்களில் உள்ள கேள்விகளுக்கான கட்டுரைகளை எழுதுவது என பல வேலைகள். விண்னப்பித்தால் மட்டும் போதுமா? இடம் கிடைக்கும் என்ற உறுதிப்பாடும் தேவை அல்லவா? அதற்கு தகுதியானவனாக நான் இருக்கிறேனா என கேட்டுக்கொண்டால், திட்டவட்டமாக இன்று கூற இயலவில்லை.
Public Economics என்ற துறையில் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. Econometrics சார்ந்தும் கற்க வேண்டியது அதிகம். தற்பொழுது முனைவர் பட்ட மாணவர்களாக இருக்கும் பலரும் அய்வு சார்ந்து முழுநேர பணியாறியவர்களாக இருக்கிறார்கள். ஆய்வுப்பணிகளில் பேராசியர்களுடன் பணியாற்றியுள்ளார்கள். அடுத்த சில மாதங்களை, ஆண்டை இவ்வகை கற்றலுக்கு செலவிடுவது நீண்டகால அடிப்படையில் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இப்பொழுது எனது நேரத்தை அடிப்படைகளை மேலும் கற்க செலவிடாமல், தேர்வு, விண்ணப்பங்கள் என செலவிடுவது தவறு எனவும் தோண்றுகிறது. வழக்கம் போல் உள்ளுணர்வின் அடிப்படையில் விண்ணப்பிப்பது என முடிவெடுத்து அதை நோக்கி செயலாற்றிக்கொண்டிருந்தாலும், இந்த கேள்வி தொடர்ந்து எழுந்துக் கொண்டே இருக்கிறது. எனக்கு நானே சொல்லிக் கொள்ளக்கூடிய சமதானம் என எதையும் எதையும் இதுவரை கண்டடைய முடியவில்லை.
இதனுடன் தொடர்புடைய சிலவற்றை பற்றியும் பேச விரும்புகிறேன். எனது அறிதல், அதனை தொகுத்துக் கொள்ளுதல். எனக்கு பல விஷயங்கள் தெரியும், ஆனால் எதில் நான் அறிஞன்? எந்த அவையிலும் எனது கருத்துக்களை தீர்க்கமுடன் முன்வைக்கும் தன்னம்பிக்கை இருக்கிறது. ஆனால், தனியாக அமர்ந்து யோசித்தால் எந்த துறையில் எனக்கு முழு அறிவு உண்டு? முழு கூட அல்ல, எந்த துறையில் என்னை நான் குறிப்பிடத்தக்க பரிச்சயம் உள்ளவனாக கருதுவேன்? எனக்கு அவ்வகை அறிதல் சில துறைகளில் இருக்கலாம், ஆனாலும் எனது அறிதல்களை நானே வரையறை செய்ய முயலும் பொழுது அவற்றை தொகுத்துக்கொள்ள இயலவில்லை. verbal, non-verbal working memoryல் உள்ள இடர்கள் இதற்கு முக்கிய காரணம் என்றாலும், நான் இதை எவ்வகையிலோ கையாள வேண்டும்.
இதனுடன் நெருக்கமாக தொடர்புடைய இன்னொன்று, எனது தன்னுணர்வு. என்னை நான் யாராக பார்க்கிறேன், யாராக உணர்கிறேன். மேற்குறிப்பிட்ட திறப்புகளுக்கு முன்பு, எதிர்காலத்தில் நான் யாராக இருக்க விரும்புகிறேன் என்ற தெளிவு எனக்கு இருந்தது, ஆனால் இன்று நான் யார் என்ற கேள்வி அப்பொழுது எழவில்லை. அவ்வகை பிரக்ஞையே என்னுள் இருந்ததில்லை. கடந்த சில மாதங்களாக தான் என்னை நானே உணர்கிறேன். எனது தன்னுணர்வு குறித்த பிரக்ஞை உருவாகியுள்ளது. அது Consciously கட்டமைக்கப்பட வேண்டியது என்பதையும் அறிகிறேன். எனது தினசரி செயல்கள் அந்த தண்ணுணர்வை வலுபடுத்தும். தண்ணுணர்வு எனது தினசரி செயல்பாடுகளை வழிநடத்தும். என்னை நான் அறிஞனாக உணர தொடங்க வேண்டும்.
முதன்முதலில் பைக் ஓட்ட கற்றுக்கொண்ட நாட்களை நினைவுகூறுகிறேன். கற்று தேர்ந்துவிட்டோம் என நினைக்கையில் ஒவ்வொரு பயனத்திலும் ஏதேனும் புதிய சூழல், சவால் முன் வரும். அவற்றை சந்தித்து, கற்று, இயல்பாக ஓட்ட தொடங்க ஒரு theething period தேவை. முழுமையாக வாழ்வதில் அவ்வகை teething periodல் இருக்கிறேன் என கூறலாம். எத்தனை விரைவில் கற்று தேறுகிறேன் என பார்ப்போம்!