ஜூலை மாத உயிர்மை இதழில் வெளிவந்த, எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களின் ‘மிஸ்டர் கே’ என்ற கதை குறித்த எனது பார்வை:
கதையை வாசித்திருக்காத நண்பர்களுக்காக, கதை குறித்த சிறு அறிமுகம்:
கதைச்சொல்லி, தனது நோக்கத்தை கதையின் தொடக்கத்திலேயே கூறி விடுகிறான். “மிஸ்டர். கே என்பவரை அறிமுகம் செய்து கொள்ளுதல்.”. சில மாதங்களாகவே அதற்கு முயன்றுக் கொண்டிருக்கிறான். முதலில் முரளி என்ற ஒரு மெக்கானிக் மூலம் முயல்கிறான். முரளியும்,அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் வகையில் பேசி, ஒரு வாரத்தில் உன்னை கேவுடன் நெருங்கி பழக வைக்கிறேன் என கூறுகிறான். ஒரு நாள், கே ஒரு இடத்திற்கு வருவதாக கூறி இவனை முரளி வர சொல்கிறான். இவனும், தனக்கு மிகவும் ராசியான மஞ்சள் சட்டையை அணிந்துக்கொண்டு அங்கு சென்று காத்திருக்கிறான். கே, தனது கரில் இருந்து இறங்கி இவர்கள் இருக்கும் இடத்திற்கு வருவது வரை, தெய்வத்தை பார்ப்பது போல் கேவை பார்க்கிறான். கே, இவர்களின் அருகில் வந்து, முரளியிடன் சில வார்த்தை பேசுகிறார். முரளிக்கு கே பரிச்சயம் என்றாலும், இவன் நினைக்கும் அறிமுகமும் நெருக்கமும் முரளி மூலம் கிடைக்காது என அறிந்து ஏமாற்றம் கொள்கிறான்.
பிறகு, தேடி பரந்தாமன் என்பவர் மூலம், கேவை அனுகலாம் என அறிந்து, அவரை சந்திக்க செல்கிறான். பரந்தாமன், இவனுக்கு குடும்ப நண்பர் என்ற வகையில் பழக்கம். கேவை எதற்கு சந்திக்க வேண்டும், என்ன விஷயம் என கேட்டுவிட்டு, இவனை மாலை வர சொல்கிறார். இவனை, மனோகர் முதலாலியின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார் பரந்தாமன்.
இங்கு மனோகர் முதலாலியின் சிறு அறிமுகம் / பின்கதை கூறப்பட்டுள்ளது. அவர் மாளிகை போன்ற வீட்டில் வசித்து வருகிறார். அவரது தொழில்கள் இப்பொழுது நலிவடைந்து விட்டன. ஆனாலும், அவர் சமுகத்தில் ஒரு முக்கியமான இடத்தில் தொடர்கிறார். அவரது இல்லத்தில் நடைபெறும் மதுமானம் சார்ந்த கேளிக்கை நிகழ்வுகளில் பங்கு கொள்வது ஒரு status symbolலாக உள்ளத்து. மனோகர் முதலாலியின் முதல் மகள் அவர்களது செக்யூரிட்டியுடன் காதல் வயப்பட்டு, அவனுடன் சென்று விடுகிறாள். பிறகு, அவர் வீட்டில் மேலும் பாதுகாப்பை அதிக படுத்துகிறார்.
இவன் இங்கு இருக்கும் நேரத்தில், கே பலரின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார். அவரை காண பலரும் வருகிறார்கள் மந்திரியுடன் தொலைப்பேசியில் பேசும் அளவிற்கு நெருக்கம் கொண்டுள்ளார். பிறகு, அங்கிருந்து கிளம்பும் பொழுது. கே, பரந்தானின் காரில் ஏறிக்கொள்கிறார். காரில், பரந்தாமன், கேவிடம் கதைச்சொல்லி குறித்து அறிமுகம் செய்கிறார். கேயின் எண்னை கதைச்சொல்லி பெற்றுக்கொள்கிறான்.
கதைச்சொல்லி, கேவை ஏன் சந்திக்க விரும்பினான், சந்தித்து என்ன செய்தார்கள் என்பது கதையின் முடிவு.
——–
பொதுவாக நம்மால், ஒரு இலக்கிய படைப்பிற்கும், கேளிக்கை படைப்பிற்குமான வித்தியாசத்தை எளிதில் உணர முடியும். ஒரு தேர்ந்த இலக்கிய வாசகனால், நல்ல படைப்பிற்கான இலக்கியங்களை வரையறுத்து கூறவும் இயலும். அவ்வாறான பல கூறுகள் இந்த கதையில் கான கிடைக்கின்றன.
முதலில், மொழியின் நடை. தட்டையான சொல்லாட்சிகள் எதுவும் இல்லாமல், மிகவும் செறிவான நடையில் கதை அமைந்துள்ளது. அதுவே வாசகனை கதைக்குள்ளும் இழுக்கிறது. மேலும், கதைச்சொல்லியின் எண்ணங்களை எழுதுதல், நிலம் சார்ந்த தகவல்களை கூறுதல், நினைவுகளை மீட்டெடுத்தல் போன்ற உத்திகளையும் எழுத்தாளர் கையாண்டுள்ளார். இவை கதைகளத்தை வாசகன் தன்னுள் வளர்த்தெடுக்க உதவுகிறது. இரண்டு இடங்களில் நேராக வாசகனிடமும் பேசுகிறார். முக்கியமாக, கதை முழுதும் விவரியிருக்கும் வாழ்க்கைக் குறித்த அவதானிப்புகளை குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் கதைச்சொல்லி தனது வாழ்க்கைக் குறித்து கூறுதல். தொடர்ந்து, ஏமாற்றம் குறித்த பார்வை, பாவா பற்றி கூறி, அவரது வாழ்க்கை பார்வையை கூறுதல், பிறகு, கதைச்சொல்லியே உண்மை என்னும் நெருப்பிற்கு, குளிர் காயும் அளவு தூரத்தில் இருப்பேன், உடல் பொசுங்கும் அளவு நெருங்க மாட்டேன் என கூறுதல் போன்றவற்றின் மூலம், ஆசிரியர் சில கருத்துகளை முன் வைக்கிறார் என்றே கூற வேண்டும்.
இந்த கூறுகள் அனைத்தும், ஒரு இலக்கிய வாசகனின் ஆர்வத்தை கட்டாயம் தூண்டும். மொழி நடை மற்றும் தகவல் செறிவு, கதையின் இறுதி திருப்பம் குறித்த அவனது ஆவலையும் தூண்டுகிறது.
எளிமையாக கூற வேண்டும் என்றால், ஒரு technically sound கதை. தேர்ந்த இலக்கிய படைப்பிற்கு தேவையான அனைத்து கூறுகளையும் தன்னுள் கொண்டுள்ளது. ஆனால், யோசித்துப்பாருங்கள், ஒரு திரைப்படத்தை நாம் டெக்னிகலி சவுண்ட் என கூறினால் எழும் முதல் குரல் என்னவாக இருக்கும்? அப்ப படம் சரியில்லையா? படம் சரியா இருந்தா ஏன் டெக்னிக்ஸ் பத்தி எல்லாம் பேசனும் என்பது தான். காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள், டெக்னிகலி சவுண்டாக இல்லாவிட்டாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே சமயம், பல திரயுலக ஜாம்பவான்களின் சமீப படங்கள், டெக்னிக்கலி ஸ்ட்ராங்காக இருந்தாலும் வெற்றி பெறாததை காண்கிறோம். அதன் காரணம் என்ன? திரை விமர்சகன், பல வார்த்தைகளில், அதை விளக்க முயலலாம். ஆனால், எதோ சரியில்ல சார். சம்திங் மிஸ்ஸிங் என கூறி கடந்து சென்று விடுவான்.
இந்த கதை குறித்த எனது விமர்சனம் கிட்டத்தட்ட அதே தான். நல்ல இலக்கிய படைப்பிற்கான இலக்கனங்களை கொண்டிருந்தாலும், அவற்றின் மூலம் வாசகனை ஈர்த்து, அமர வைத்து, அவனது ஆர்வத்தை தூண்டியப்பின், இந்த கதை வாசகனுக்கு தருவது என்ன என யோசித்தால் “எதுவும் இல்லையோ?” என எண்ண தோன்றுகிறது.
இங்கு, ஆத்மார்த்தியின் ஒரு கவிதையை குறிப்பிட விரும்புகிறேன்:
“சற்று மெலிந்த தேகம்
தந்தங்கள் அத்தனை
நேர்த்தியில்லை
கண்களில் ஒன்று
மற்றதைப் போலில்லை.
ஓரளவு யதார்த்த அருகாமையில்
கால்களை வேண்டுமானால்
சுட்டலாம்.
கோலத்தில் யானை எப்படி?
எனக் கேட்டவளிடம்
சுமார்தானெனச் சொன்னேன்
அடுத்தக் கணம்
கடும் கோபமுற்றுக் கிளம்பி
வீதிவழி போயிற்று
அத்தனை ரோஷத்தை
அதனுள் இட்டிருப்பாள்
என்று
அறிகிலேன்
என் செய்வேன்?”
இதில், யானையின் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும், அதனை விட அதனுள் இருக்கும் யானை, அதன் ரோஷம் மிக முக்கியம் என்று ஆத்மார்த்தி கூறுகிறார்.
அதேப்போல் தான், ஒரு நல்ல சிறுகதைக்கும். அதன் இலக்கிய கூறுகளை தாண்டி, அதன் ஆத்மா முக்கியம். கதையில் இருந்து வாசகன் பெற்று, அவனுள் வளரும் ஒன்று. அப்படி ஒன்று, இந்த கதையிலிருந்து வெளிப்படவில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது.