‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் ஜெ சென்னையில் நடத்திய கட்டண உரையின் பிறகு அவருக்கு எழுதிய கடிதம்:
ஜெ,
மரபு குறித்த உங்கள் உரையை இவ்வாறு தொகுத்துக்கொள்ள முயல்கிறேன்:
ஒரு செல் உயிரி முதல், அனைத்து உயிர்களிடமும், தான் வாழவேண்டும், பெருக வேண்டுமென்ற உள்ளுணர்வு உள்ளது. அதைத் தாண்டி, தனது சூழலுக்கு ஏற்றவாறு சிலவற்றை கற்றுக்கொள்கிறது. அந்த கல்வி / அறிவு நாளடைவில் அந்த உயிரனத்தின் பொதுஉள்ளுணர்வின் பகுதியாகி விடுகிறது. (Fight, Flight, Freeze போன்றவை). இது ‘தான்’ என்ற அளவில் நின்றுவிடக்கூடியது. Primitive விலங்குகளிடம் பெற்றோர் – குழந்தை என்ற உறவு இருப்பதில்லை. பாலூட்டிகளில் குடும்பம் என்ற அமைப்பு, குழு என்ற அமைப்பு ஓரளவிற்கு வளர்ந்து வருகிறது. பரிணாம வளர்ச்சி வழியாக, இவை மனிதனின் உள்ளுணர்வையும் வந்து சேர்கிறது. மனிதனின், ஆதி, அடிப்படை உள்ளுணர்வு, ‘தான்’ என்ற கருத்தை முன்னிருத்தியே செயல்படுகிறது. மனித இனத்தின் இந்த பொது உள்ளுணர்வும் மரபின் ஒரு பகுதிதான்.
தனி மனிதன் குடும்பமாக, குழுவாக, குலமாக சமூகமாக வாழ அவர்களுக்குள் ஏற்படுத்தும் சமரச ஏற்பாடு தான் கலாச்சாரம். கலாச்சாரமும் மரபின் ஒரு பகுதி.
ஒரு வகையில் பார்த்தால், வாழ்தல், பெருகுதல் தாண்டி தனது இருப்பை உணர்த்த, தனக்கென ஒரு legacyயை விட்டுச்செல்ல, தான் உருவாக்கியவற்றை தனது சந்ததியர்கு விடுச்செல்ல மனிதன் முயன்றதன் விளைவே கலாச்சாரம்.
உள்ளுணர்வு தாண்டி, மனிதன் உருவாக்கும் முதல் கலாச்சார அமைப்பு குடும்பம். அப்பொழுது, அவன் குடும்பதிற்கென (immediate family) சில விதிகளை அமைத்துக்கொள்கிறான். தாய், தந்தை என்ற படிமங்கள் உருவாகி வருகின்றன. அங்கிருந்து ஒரு படி முன்னேறி குலம் (extended family) என்ற அமைப்பை உருவாக்குகிறான். Kinship ( https://www.britannica.com/topic/kinship) என இதை கூறுகிறார்கள். தாய்வழி சமூகம், தந்தைவழி சமூகம், மூத்தார் வழிப்பாடு போன்றவை இதில் அடங்கும்.
இந்த கலாச்சார அமைப்பை தான் தாங்கள் குருதிமரபு என குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் கூறிய நான், தான், தன் என்ற எண்ணங்களே இதன் அடிப்படை.
இதை தாண்டி எழுந்து, ஒரு சமூகமாக இயங்க நாம் அமைத்துக்கொண்ட விதிகளே (விழுமியங்களே) இன்று நாம் பொதுவாக புரிந்துக்கொள்ளும் சமூக மரபு / கலாச்சாரம் என்பவை.
பெரும்பாலும், இவை பொதுநலம் சார்ந்தவையாக இருக்கும். சமூகத்தின் நலனை தனி மனிதனின் நலனை விட முக்கியமானதாக நிலைநிறுத்த முயல்கிறது. எனக்கு உடனடியாக மனு நீதி சோழனின் கதை தான் நியாபகம் வந்தது. தந்தை என்ற படிமத்தை தாண்டி, நீதி என்ற விழுமியத்தை நிலைநாட்ட உண்டானது தானே அந்த கதை?
ராமாயணம் குலமரபு,
மஹாபாரதம் பண்பாட்டு மரபு!
இதில், ஒவ்வொரு நிலையும் முந்தய நிலைகளின் பண்படுத்தப்பட்ட வடிவமாகவே நான் பார்க்கிறேன். மனிதனின் தான் என்ற உணர்வும், குடும்பம் என்ற அமைப்பும், சமூக கலாச்சார மரபில் மறுக்கப்படவும் இல்லை, மறைந்துவிடவும் இல்லை.
மரபை மறுக்கும் தரப்பு, இந்த பண்பாட்டு வளர்ச்சியை ஏற்க இயலாத மனநிலையை குறிக்கிறது. மரபை ஏற்பதின் பெயரில் மரபின் வளர்ச்சியை மறுக்கிறது.
மரபை மறுக்கும் தரப்பு, மரபு என்பது நிலையான மற்றமற்ற ஒரு கட்டமைப்பு என்பதை மறுப்பதன் வழியாக, மரபின் தன்னிச்சையான வளர்ச்சியை ஏற்கிறது.
ஆனால், இதில் தாங்கள் குறிப்பிட்ட archetype, ஆழ்மண படிமத்தை எப்படி அணுகுவது? எங்கு வைத்து புரிந்துக்கொள்வது?
24 வயதிற்கு முன்பு (இளவயதில்) அதற்கான அறிமுகம் பெற்று, ஒருவர் archetypes பற்றி கற்காவிட்டால், அவர் அது குறித்த அறிதலை வாழ்க்கை முழுவதற்குமாக இழந்ததுவிடுகிறார் என கூறினீர்.
கற்க இயலாது என்றாலும், இழந்தது எதை என புரிந்துக்கொள்ளவாவது இயலுமா?
நன்றி,
லாஓசி.
அன்புள்ள சந்தோஷ்,
குறிப்பான வினாக்கள்
பொதுவாக இந்தவகை உரைகள் உருவாக்கும் கேள்விகளை உடனடியாக திரும்பக்கேட்கவேண்டியதில்லை. முக்கியமான பயிற்சி ‘உங்கள்’ விளக்கம் என்ன என்பது. அதை நண்பர்கள், சற்று மூத்த நண்பர்களிடம் சொல்லுங்கள். உங்களால் அதை நிறுவமுடியுமா என்று பாருங்கள். [அவர்கள் கொஞ்சம் மட்டம்தட்டினாலும் பிரச்சினை இல்லை] பின்னர் நாம் பேசுவோம்
ஜெ