நான் மகிழ்ச்சியாக இல்லை என ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தான் நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக உடல்நிலை சரியில்லை, மனநிலையும் திடமாக இல்லை.

நேற்று மருத்துவரை பார்த்து, இரத்த பரிசோதனைக்கு அளித்துவிட்டு வந்தேன். இன்று முடிவுகளை வாங்க செல்ல வேண்டும். தங்கையை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்துக்கொண்டு, முடிவுகளை பெற்றுக்கொண்டு, இன்னொரு கடைக்கு சென்று திரும்பும் வழியில்… பல நாட்களாக வெளியிலிருந்து பார்த்து வந்த நாகாத்தம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என தோண்றியது.

நாகாத்தம்மன் ஆலையம்

கோவிலுக்குள் நுழைந்தபின் தான் இன்று பௌர்ணமி என அறிந்தேன். அபிஷேகம் நடந்துக்கொண்டு இருந்தது.

குமரித்துறைவியின் பங்குனி உத்திர திருவிழா குறித்து, அம்மாவின் திருமணம் என சமிபத்தில் தான் ஜெ பதிவிட்டிருந்தார். கிட்டதட்ட அதே தருணத்தில், இங்கு தேவி என்னை அழைத்தது மனதிற்கு இதமாக இருந்தது. அருகிலென அவள் தரிசனம்… வழமை போல் மனம் கொண்ட அமைதி என நிறைவான நிகழ்வு…

முத்துமாரியம்மன் கோவில், MMDA Colony

வழக்கமாக கோவில்களில்.. (பெரிய கோவில்களில்?) இருக்கும் சூழல் போல் இல்லாமல், மிக இயல்பான சூழலாக இருந்தது. கோவிலுக்குள் இரண்டு நாய்கள், தங்கள் வீடென படுத்திருக்க, கோவிலுக்கருகே தங்கியுள்ள குழந்தைகள் ஓடி விளையாட, அங்கிருந்த பலருக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகமும் இருந்தது. எனது கிராமத்து கோவிலுக்கு சென்ற உணர்வு. சூளைமேட்டில் நான் செல்லக்கூடிய கோவிலும் நினைவில் எழுந்தது..

சில ஆண்டுகள் முன்பு குல தெய்வம் கோவிலில் பார்த்ததை தவிர்த்தால் கடைசியாக எப்பொழுது கோவிலில் அமர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நிகழ்வதை பார்த்தேன் என்பதே நினைவில் இல்லை. பல பல ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றன. பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் என ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஆரத்தி காட்டி பொறுமையாக தமிழில் வழிபாடுகளை அர்ச்சகர் செய்துக்கொண்டிருந்தார்.

அபிஷேகம் முடிந்து திரையிட்ட பின், கோவிலை சுற்றிவருவதற்காக உற்சவரை வெளியில் வைத்து தயார் செய்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே மூலவருக்கு அலங்காரம்.

தீபாராதனை தொடங்கியதும் மனம் எங்கெங்கோ அலைய தொடங்கியது… அது, இது, என்ன, எப்படி என பல கேள்விகள்.. ஆனால் ஒரே நொடியில், ஓங்கி ஒலிக்கும் மணி ஒலியிலும், தீபஒளியிலும் அனைத்தும் அடங்கி, எப்பொழுதும் போல், எல்லாரும் நல்லா இருக்கனும்னு என வேண்ட தொடங்கி விட்டேன். அவளுக்கு தெரியாததையா நான் வேண்டி பெறப்போகிறேன்?

வாழ்விற்காகன, எதிர்காலத்திற்கான ஆயிரம் கேள்விகள்… அவள் முன் நிற்கையிலும் முதலில் எழுந்தது அவை தான், இது சரியா.. இல்லையா? அடுத்த அடி வைக்க வேண்டிய இடம் என்ன.. ஆனால், நினைவு தெரிந்த நாள் முதலே அவளிடம் கேட்பதை விட்டுவிட்டேன். இது வேண்டும் என கேட்ட முதலிரண்டு முறையும் அவை கிடைக்கவில்லை.. ஆனால், கிடைக்காததே நன்று என விரைவிலேயே கண்டுக்கொண்டேன்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. 

இமைக்கணம், ஜெயமோகன்

அன்றிலிருந்து, இன்று வரை, எனக்கு என்ன வேண்டும், என்ன தர வேண்டும் என அவளுக்கு தெரியும், நான் எதையும் கேட்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன். இந்த நம்பிக்கை தரும் அமைதியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது, அதுவும் இந்த சூழ்நிலையில். முன்பும் பலமுறை உணர்ந்தது தன என்றாலும், இன்று மீண்டும் ஆட்கொள்ளப்பட்டேன்.

தீபாரதனை முடிந்து சாமி சுற்றி வரும் நேரத்தில், என்னையும் சேர்த்து சரியாக 4 அண்கள் மட்டுமே கோவிலில். தேவியில் பின் இடது புறம் நான் சுமக்க, கோவிலை 3 முறை வலம் வந்தோம். பிறகு, நிறுத்தி தோளில் ஊஞ்சல் ஆட்டி, பிறகு சங்கிலியில் அமைத்து ஊஞ்சலில் அமரச்செய்தோம்.

ஊஞ்சலில் அமர வைத்ததுமே குழந்தையாகிவிட்டாள்.. கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்… மெதுவாக ஆட்டி, கண் துஞ்ச வைத்து… கண் படலாகாதே என பதறி.. விலக மனமின்றி..,

இன்று நான் அந்த கோவிலுக்கு செல்லவில்லை என்றால், யார் அவளை சுபந்திருப்பார்? என்றுமில்லாமல், இன்று பௌர்ணமியில் என்னை அழைத்து இத்தனை அருகே அமையச்செய்து நான் இருக்கிறேன் என அரவணைத்து, நான் மறந்தாலும் தன் இருப்பை அவளே உறுதி செய்கையில்… புது சக்தி பிறக்க்காதா மூச்சினிலே?