“இப்பல்லாம் சாதி யாரு சார் பாக்றாங்க?” என  பேசி விட்டு… சொந்த சாதியில் வரன் பார்க்கும் சமுகத்தில் இளவரசனின் மரணம் என்ன வகை மாற்றத்தை கொண்டு வரும் என தெரியவில்லை…
சாதி இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம் சமூகம் தான்…
சாதி விட்டு திருமணம் செய்வது ஏதோ அவமானகரமான செயல் என்பது போல் சொந்தங்கள் பார்ப்பதால் தானே
“லவ் பண்ணா பரவால்ல சார், நம்மாளா இருந்தா போதும்”??
நட்புகளே, உங்களிடம் அதிகம் கேட்கவில்லை…
உங்கள் பிள்ளைகளுக்கு ஜாதி விட்டு திருமணம் செய்து வைக்க மனம் இல்லை என்றால் பரவாயில்லை…
சொந்தத்தில்/சமூகத்தில் எங்கோ நடக்கும் சாதி மறுப்பு திருமணங்களை தவிர்க்காமல் இருங்கள். அந்த குடும்பத்தவரை பின் வேறு ஏதேனும் விஷேஷத்தில் சந்திக்க நேர்ந்தால் வித்தியாசமாக பார்க்காமல் இருங்களேன்.
நாளை சொந்தம்/சமூகம் என்னை புறக்கணிக்குமோ என்ற பெற்றோரின் பயம் தான் சாதியை கடந்து எழும் பிள்ளைகளின்  காதல்களுக்கு தடையாக உள்ளது. “நாளைக்கு வெளிய தலை காட்ட முடியாது.” இந்த எண்ணத்தை சமூகமாக நாம் மாற்ற முயலலாமே??!!
காதலை பற்றி நான் பேச காரணம், சாதி வேறுபாடின் சாயல் படாமல் நகரத்தில் வளரும் யுவ/யுவதிகளுக்கும் சாதியை அறிமுக படுத்துவது திருமணம் தான்! மிகவும் பின்தங்கி இருக்கும் கிராமங்களை கடந்து நம்மில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வில் சாதி நுழைவது திருமணங்களின் பொழுது தான்.
நிதர்சன வாழ்வில் சாதியை கடந்து  வாழ பழகிவிட்டோம் ஓரளவுக்கேனும், அதாவது வேறு சாதிக்காரர்களுடன் அலுவல் நிமித்தமோ சொந்த காரங்களுக்காகவோ பழக தயங்குவதில்லை நாம். அனைவரும் சமம் என்ற உணர்வை தரும் நிலையில் தான் இருக்கிறோம். ஆனாலும் மனதில் படிந்துள்ள சாதி அடிப்படையிலான ஏற்றதாழ்வுகள் நீங்க வில்லையே?? மாயாவதி மாநிலத்தின் முதல்வராக இருக்கலாம், ஆனால் ஊழல் வழக்கில் அவர் சிக்கும்  பொழுது அவரது ஜாதியை அவரது செயலுக்கு காரணமாக காட்ட தூண்டுவது நம் மனதில் படிந்து இருக்கும் சாதிகளை பற்றிய பிம்பமும் திணிக்கபட்ட ஏற்றதாழ்வுகளும்  தான்!
அடுத்த தலைமுறையின் மனதில் இப்படி ஒரு பிம்பம் படியாமல் இருக்க சாதி மறுப்பு திருமணங்களின் பங்கு மிக முக்கியமானது. சாதி என்ற அடையாளத்தை சமூகம் துறக்க பல ஆண்டுகள் ஆகலாம் ஆனால் அந்த அடையாளத்தை அடைப்படையாக கொண்டு மனதில் எந்த பாகுபாடும் எழாமல் இருக்க செய்யலாமே??!!
முகநூலில் நட்புகள் பகிர்ந்த இந்த அருமையான காணொளி உங்கள் பார்வைக்கு… நான் சொல்ல வருவதும் இதைத்தான்…
[youtube=https://www.youtube.com/watch?v=VeK759FF84s&w=640&h=385]
egalitarian society இங்கு அமைய வேண்டாம்… சிலருக்கு நாம் வாழும் உலகை நரகமாக்காமல் இருக்க இயன்றதை செய்வோம்!