2021 புத்தாண்டு அன்று காலை, நண்பர்களுடனான உரையாடலில் ஜெயமோகன் இந்திய கலைகள், குறிப்பாக ஓவியக்கலையின் பரிணாமம் குறித்த ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை முன்வைத்தார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையை, எனது மற்றும் நண்பர் ஜெயராமின் நினைவில் இருந்து மீட்டெடுத்து பதிவிடுகிறேன். இயன்றவரை ஜெவின் கருத்துகளிலிருந்து விலகாமல் இருக்க முயன்றுள்ளேன். ஒட்டுமொத்த சித்திரம் எனும்போது, தகவல்களின் துல்லியம், விடுபடுதலில்லாமல் இருத்தல் போன்றவற்றை விட, அவர் ஏற்படுத்தும் இணைப்புகள் முக்கியமானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1. வரலாற்றுக்கு முந்தையகாலம் (Pre-Classic)
இந்திய கலையின் தொடக்கம் என நான்கு தனித்துவமான மரபுகளை அடையாளம் காட்டலாம்:
1.அ. குகை ஓவியங்கள் (Cave Paintings / Murals): கிட்டத்தட்ட ஒரு லட்சம் வருடங்கள் முன்பிருந்தே மனிதர்கள் வாழ்ந்து வந்த பிம்பேத்கா குகைகளில் 10,000 வருடங்கள் பழமையான குகை ஓவியங்கள் கிடைக்கின்றன. அன்றிலிருந்து கிட்டதட்ட 1,400 வருடங்கள் முன்பு, மத்திய காலகட்டம் வரை (அஜந்தா எல்லோரா உட்பட) குகை ஓவியங்களின் தொடர்ச்சியை காண முடியும்.
1.ஆ. சுவரோவியங்கள் (Wall Decorations): சுவர்களில் வகைப்படும் அலங்கார ஓவியங்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவாகி வந்த கலை மரபுகள். வார்லி (மஹாராஷ்டிரா), மண்டனா (ராஜஸ்தான்), பித்தோரா (மத்திய பிரதேசம்) போன்றவை.
1.இ. துணி ஓவியங்கள்: வர்ண சாயங்கள், துணி ஓவியங்களின் பயன்பாடு ஹரப்பா நாகரீக காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அவற்றின் நீட்சியை பக்ரூ, கலாம்காரி, பட்டசித்திரா போன்ற கலைகளில் இன்று வரை காணலாம்.
1.ஈ. கோலம் / ரங்கோலி – சோவ்க்புராணா என பஞ்சாபிலும், அல்பனா என வங்கத்திலும், முக்குலு என தெலுங்கிலும் வெவ்வேறு பெயர்களில் இந்தியா முழுதுமே காணக்கிடைக்கும் வரைதல் முறைகள்.
2. செவ்வியல் காலம்
நீண்ட மரபுள்ள நம் செவ்வியல் கலை முதலாம் நூற்றாண்டிலேயே முழுமையடைந்து விட்டது. (காந்தார மரபு, குஷன் பேரரசின் காலம்). மதுராவின் யக்ஷி சிலைகளை இதன் எடுக்காட்டாக கூறலாம். அஜந்தா குகை ஓவியங்களும் இதற்கு சான்று.
தொடர்ந்த காலங்களில் புத்த ஜைன மரபுகள் ஆதிக்கம் செலித்தின. கலை நுண்ணிய வேலைப்பாடுகளிலும், அலங்காரங்களிலும் கவனம் செலுத்தியது. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மவுண்ட் அபு, தில்வாரா கோவில்கள் வரை அந்த மரபை பார்க்கலாம்.
தென்னகத்தில் குடைவரை கோவில்களில் இருந்து தொடங்கி, 11ம்,12ம் நூற்றாண்டுகளில் கோவில் கட்டுமானத்தின் உச்சியை அடைந்தோம். ஹோஷ்யாளர்கள், சாலுக்கியர்கள் சோழர்களின் பங்களிப்பை இக்காலத்தில் காணலாம்.
தொடர்ந்து செறிவூட்டப்பட்ட உளிகள் கிடைக்க தொடங்கியபின் விஜயநகர, நயக்க மன்னர்களின் காலங்களில் பிரமாண்டமான கருங்கல் சிலைகள் உருவாக்கப்பட்டன.
நமது செவ்வியல் மரபின் பொதுத்தன்மை என சிலவற்றை குறிப்பிடலாம்:
– புத்த சமண மரபுகளில் ஆடை அணிகலன்களில் அலங்காரங்கள் சாத்தியமில்லை என்னும்போது, ஜடாமுடியிலும், மேலிருக்கும் யட்சிகள் போன்ற உருவங்களிலும் தங்கள் கலை சாத்தியங்களை வெளிபடுத்தினார்கள். இது நுண்மையை நோக்கி கலையை உந்தியது எனவே கூறலாம்.
– Panelling – மொத்த விரிவையும் சிற்பங்களால் நிறைத்து விடுதல். சிற்பத்தொகைகள் ஒரு குறிப்பிட்ட தொன்மத்தையோ, நிகழ்வையோ முழுமையாக வெளிபடுத்துகின்றன.
கிட்டதட்ட 15,16ம் நூற்றாண்டு வரை இந்த செவ்வியல் மரபு தொடர்ந்தது. முகாலய படையெடுப்பின் பிறகு, இந்திய கலை மரபு ஒரு இருண்ட காலத்தை சந்தித்தது. புதிய கலை மரபுகள் எதுவும் உருவாகவில்லை. (இங்கு முகாலய ஓவியங்கள் போன்றவற்றை ஜெ குறிப்பிடவில்லை)
இந்தியாவில் இப்படி இருக்க… ஐரோப்பாவில், மறுமலர்ச்சி கால ஓவிய மரபின் நீட்சியாக உருவான பரோக் (Baroque) என்ற மரபின் கூறுகள் நமது செவ்வியல் மரபின் கூறுகளை ஒத்திருந்தது. 17முதல் 18ம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்திய பரோக் மரபு அடர் வண்ணங்கள், அலங்காரங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள், பிரமாண்ட அமைப்புகள் போன்றவற்றை கொண்டு உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்திருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், இங்கர்ஸ் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட புதுச்செவ்வியல்வாதம் பரோக்கை முழுமையாக நிராகரித்தது. புதுச்செவ்வியல் படைப்புகள் அமைதியான, எளிமையாக, சமச்சீரான அமைப்பை முன்வைத்தது.
பரோக் ஓவியங்கள்
புதுச்செவ்வியல் ஓவியங்கள்
3. நவினக்காலம்
ஜான் ரஸ்கினின் கலைக்கோட்பாடுகள் மூலம் நுணுக்கம் மற்றும் மிகை அலங்காரங்களால் நிறைந்த பரோக் மரபின் மீது ஒரு ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்தியா வந்த மேலை கலைஞர்கள், நுணுக்கங்களும் அலங்காரங்களும் நிறைந்த நம் இந்திய செவ்வியல் மரபை பரோக் மரபென்று எண்ணினார்கள். எனவே அவற்றை காலாவதியான வடிவம் என எண்ணினர். இந்தியாவில் அமைக்கப்பட ஓவிய கல்லூரிகளிலும் ஐரோப்பிய முறை ஓவியங்களே கற்பிக்கப்பட்டன.
அக்காலகட்டத்தில், ராஜா ரவி வர்மா, தனது ஆசிரியர் தியடார் ஜென்சனின் வழிகாட்டுதலில், டச் பாணி தைல ஓவியங்களை வரைகிறார். அதற்கு நாயர் பெண்களை மாடலாகப் பயன்படுத்துகிறார். மேற்கின் யதார்த்த வாத சிந்தனை முறைகள் மற்றும் இந்து தொன்மங்களின் கூட்டாக அவரது ஓவியங்கள் அமைகின்றன. இந்த ஓவியங்கள் மேலை நாடுகளில் விருதுகளையும் பெறுகின்றன(1873). அவர்களின் பாணியில் அவர்களின் ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஓவியங்கள். அவரது ஓவியங்கள் ஓலியோகிராப் மூலம் அச்சுப் பிரதி எடுத்து மலிவாக விற்கப்பட்டதால் இந்திய முழுவதும் பரவின. இன்றளவும் புகழ் பெற்று நிலைக்கின்றன. இந்த ஓவியங்கள் நவின இந்திய ஓவிய மரபின் தொடக்கம் என கருதப்படுகின்றன.
ரவி வர்மாவின் ஓவியங்களில் உள்ள குறைகளை சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டுகிறார். அவை, இந்திய கலைமரபுடன் தொடர்பற்றவையாக உள்ளன. அவர் பிறந்த கேரளத்தின் சுவரோவிய மரபின் தாக்கம் கூட அவற்றில் இல்லை. அவரது ஓவியத்தில் உள்ள ஆடை அணிகலன்கள் பார்ஸி நாடகத்திலிருந்து பெறப்பட்டவை, பெரும் தூண்கள் மேற்கத்திய கட்டிட மரபை சார்ந்தவை.
இதற்கு மாறாக, இந்திய ஓவிய மரபில் நமது வேர்களை நோக்கி இந்திய ஓவியர்கள் சிலரை சுவாமி விவேகானந்தர் ஆற்றுபடுத்துகிறார். அபநிந்திரநாத் தாகூர், மற்றும் அவரது மாணவர்கள் இந்திய ஓவிய மரபை அறிய ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். அஜந்தா ஓவியங்கள் அவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கல்கத்தா கலை இயக்கம் (1896) அவர்களிடமிருந்து தொடங்குகிறது. நந்தலால் போஸ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
நவின இந்திய மரபின் மற்றொரு கிளை சென்னை கலை இயக்கம். அபநிந்திரநாதின் மாணவர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி பொறுப்பு ஏற்றப்பின் சென்னை ஓவியக் கல்லூரியில் இதன் விதைகள் தூவப்படுகின்றன(1930). கேசிஎஸ் பணிக்கர் இந்த இயக்கியத்தின் முக்கிய முகம். சோழமண்டலம் கலை கிராமம்(1966) சென்னை கலை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
குஜராத்தில் பரோடா குழுவும் (1957) நவின கலை மரபை தனித்துவமான பாணியில் முன்னெடுத்து சென்றது. புபேன் காகர் போன்றவர்களால் இது முன்னெடுக்கப்பட்டது.
மும்பையிலும், குறுகிய காலத்திற்கு ஒரு நவின கலை மரபு உருவாகி நிலைபெற்றது. MF Hussain அதன் முக்கிய முகங்களில் ஒருவர்.
இந்த கலை மரபுகள் 1960கள், 70கள் வரை முக்கிய அலையாக செயல்பட்டன. அதன் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்ப்படவில்லை.
இந்திய கலை மரபின் தத்துவ, கலாச்சார பின்னனியை மேலை நாட்டினரிடம் கொண்டு சென்றதில் ஆனந்த குமாரசாமியின் பங்கு முக்கியமானது. அவரது சிவ நடனம் என்ற கட்டுரை தொகுப்பு (1918) செல்வாக்குடையது.
4. சமகாலம்
மேலை நாடுகளில் இருப்பது போல், கண்காட்சிகளிலேயோ, ஓவியரிடமோ அசல் ஓவியங்களை வாங்கி வீடுகளில் மாட்டும் வழக்கம் நம்மிடம் இல்லை. எனவே இங்கு ஓவியர்களுக்கான சந்தை மிக மிக சிறியது. விடுமுறைக்கு இந்தியா வரும் மேலை நாட்டு நடுத்தர வர்கத்தினரே சமகாலத்தில் இந்திய ஓவியங்களுக்கான முக்கியமான நுகர்வோர். அவர்களால் சில லட்சங்கள் கொடுத்து ஒரு ஓவியத்தை வாங்க முடியும். ஆனால், இந்திய மரபையோ அதன் நுண்மைகளையோ அவர்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. அவர்களுக்கு பரிச்சயமான cliche ஓவியங்களே இன்றைய தேதியில் அதிகம் வரைய, வாங்கப்படுகின்றன.