வாழ்வை தொகுத்துக்கொள்ள எழுதுவதில் ஏன் இந்த தயக்கம் என என்னையே கேட்டுக்கொள்கிறேன். எழுத தொடங்குவது அத்தனை எளிதாக இல்லை.. ஆனால் ஏன்?

செய்ய தவறிய விஷயங்கள் அனைத்தும் கண் முன் வந்து செல்கின்றன… எழுதும் செயலே ஒரு வகை சுய அறைகூவல் தானே.. அங்கு தோல்விகளை பறைசாற்றுவது இயல்வதல்ல. முக்கியமாக, எழுதுவது என்பது என்னை திறந்து வைப்பது… முதலில் என்னை நானே திறந்து பார்ப்பது… இவ்வகை சுயஅறிதல் அவசியமெனினும்… அந்த பிரக்ஞை அற்று வாழ்வது மேலும் எளிது..அனைத்திலிருந்தும் விலகியிருத்தல்..

ஏன் எழுத விரும்புகிறேன்..? நான் முக்கியமானவன், நான் பங்களிக்கவும் இங்கு ஏதோ இருக்கிறது என்ற சுய உணர்வை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது என்பதால்…

எழுத தயங்குவதன் மூலம் அந்த உணர்வை அடைவதை தாமதிக்கிறேனா.? தயங்குகிறேனா..?

கேள்விகள் எழும் வேகத்தில் பதில்கள் எழப்போவதில்லை… அவை அப்படியே இருக்கட்டும்…


சென்ற நவம்பர், இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு தயாராவது குறித்து எழுதியிருந்தேன்… அதன் பிறகு பல மாற்றங்கள்… நிகழ்வுகள்…

1. விஷ்ணுபுரம் விழா கோவை..
2. ஜெவுடன் புத்தாண்டு
3. PGP in public policy
4. Tamil wiki
5. BHUMI

விஷ்ணுபுரம் விருது விழா குறித்து எங்கும் எழுதவில்லை… இந்த விழா இலக்கிய உலகில் எனது இடத்தை வரையறை செய்ய உதவியது என தயங்காமல் கூறலாம். இன்று நான் புனைவெழுத்தாளன் அல்ல.. வாசகன் மட்டுமே, அதிலும், வாசிப்பணுபவத்தை எழுத்துகளாக ஏன் எண்ணங்களாக மாற்றகூட விரும்பாத நிலையில் இருக்கிறேன். இலக்கியபடைப்பு தரும் உணைர்வுகளை, உணர்வுகளாகவே அணுக விரும்புகிறேன். அடுத்த சில வருடங்களுக்கு எனது தமிழ் இலக்கிய வாசிப்பு மட்டுப்படும் எனவும் அறிகிறேன். வாழ்வு எங்கு அழைத்து செல்கிறது என பார்ப்போம்.


புத்தாண்டு… ஜெ மற்றும் சில நண்பர்களுடன், ECRல் ஒரு விடுதியில். 31 அன்று காலையே ஜாஜா மற்றும் ஷண்முகம் அண்ணா அவர்களுடன் காரில் சென்றடைந்தேன், ஆனால்… அன்று தான் PGPக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்… இரவு வரை அமர்ந்து விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்துகொண்டிருந்தேன்…

2022 வழமைபோல், ஆசானின் வார்த்தைகளுடன் தொடங்கியது… ஜெவின் உரையை இங்கு பதிவு செய்துள்ளேன்..


Public Intellectual – பொதுவாழ்வில் அறிவியக்கவாதியாக அறியப்பட வேண்டும் என வெவ்வேறு வகைகளில் கனவு கண்டு வந்துள்ளேன். அதற்கான அடிப்படை அறிதலுகளுக்காகதான் இந்திய ஆட்சிப்பணியின் பாடதிட்டத்தை வாசிக்க தொடங்கினேன். அதன் விருப்பதாளில் அரசறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் என்ற தாளை தேர்ந்தெடுத்தேன். அரசு முறைகள் உருவாதல், அரசியலமைப்பு, ஜனநாயகம், குடியரசு போன்றவற்றின் கோட்பாடுகளை அறிந்துக்கொள்வதில் எப்பொழுதுமே விருப்பம் இருந்துள்ளது. Constitutional assembly debates, story of integration of Indian states போன்றவற்றை வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் நீண்ட நாட்களாகவே இருந்துளது. இவை அனைத்தையும் Public Policy என்ற புலத்தில் அடைக்கலாம். முறையான வகுப்புகளாக Masters in Public Policy கற்க 2 வருடங்கள்… 6/7 லட்சம் வரை செலவாகும். அதற்கு மாற்றாக இணையவழியில் பெங்களூர் தக்‌ஷசீலா அமைப்பின் Post Graduate Programme in Public Policy வகுப்புகளுக்கு விண்ணப்பித்து… இணைந்துள்ளேன். முதல் பருவ வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இவற்றை குறித்து விரிவாக பிறகு எழுதுகிறேன். எனது வாழ்வை மறுவரையறை செய்யும் நிகழ்வுகளில் ஒன்று இது.


விக்கிபீடியாவின் அதே டெம்ப்ளேட்டில் நவீனத் தமிழிலக்கியம் சார்ந்த நூல்கள், ஆசிரியர்கள், அமைப்புகள், செய்திகளை தொகுக்கும் ஒரு தளம் அமைவது அவசியம் என்று நினைக்கிறேன். குறிப்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும். தொடர்ச்சியாக எழுதும் இருபது நண்பர்கள் இருந்தால், ஐந்தாண்டுகளில் முழுமையான ஒரு தரவுத்தளத்தை உருவாக்கிவிட முடியும். அது இன்றைய காலகட்டத்தின் தேவை. 

விக்கிபீடியாவிற்கு வெளியே, ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து ஜெ தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதிய பதிவுகளை அதன் நிர்வாகிகள் நீக்கியதன் விளைவாக ஜெ தமிழ் விக்கிப்பீடியாக்கு மாற்றாக தமிழில் இணைய கலைக்களஞ்சியம் உருவாக்க விரும்பினார். அதன் ஒருங்கிணைப்பில் எனது சிறிய பங்களிப்பும் உள்ளது என்பது எனக்கு மகிழ்வான விஷயம். இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் பகிறப்படும்.


இந்த பதிவை எழுத தொடங்கியது அலுவலகம் சார்ந்த பிரச்சனை பற்றி யோசிக்க தான். கார்ப்பரேட்லிருந்து சமூக செயல்பாடுகளுக்குள் நுழைந்த பொழுது இங்கு என்ன செய்யப்போகிறேன் என்ற தெளிவு இல்லை. பூமி நன்றாக பரிச்சயமான இடம் என்பதால் இங்கு இணைந்தேன்… குறிப்பிட்ட செயல்பாடுகள் மட்டும் தான் என்ன இல்லாமல் அனைத்து வகையிலும் பங்களித்துள்ளேன். அதுவே ஒருவகையில் பதாகமாக அமைந்தது விட்டது. அவர்களின் மதிப்பீட்டில் எனது பங்களிப்பை நிறுவி அதற்கான மதிப்பீடுகளை பெறுவதில் தொடர் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தொடர்ந்து பங்களித்தும் எதுவும் செய்யவில்லை.. (output… Outcome…) என்ற விமர்சனங்கள் மனதை தளரச்செய்கின்றன.. மீண்டும் depression அளவிற்கு செல்ல மாட்டேன் என்றாலும் என்னை… மீண்டும் தொகுத்துக் கொள்ள … என் சுய உணர்வை மீட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்….