பூமிக்கு பாரம் சேர்க்க தொடங்கி 27 வருடங்கள். பூமிக்காவது பாரத்தை குறைக்கலாம் என்றால், எடை குறைந்த பாடில்லை. இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம்.

கடந்த வருடம், சொந்த வாழ்வில் பெரிய மாற்றங்கள். சில புதிய மனிதர்கள், புரிதல்கள், பழைய மனிதர்கள். வாழ்வின் அந்த பக்கங்களை பற்றி இப்பொழுது எழுதுவதாய் இல்லை.
அதை தாண்டி, புது வேலை. தானாய் சரியாய் அமைந்தது நல்லூழ்.
கிட்ட தட்ட ஒரு வருடம் முன்பு தான் ரேணுகா அறிமுகம் ஆனார்கள். எனது மனநல குறைபாடுகளை முதன்முதலில் சரியாக அடையாளம் காட்டியவர். மும்பையை சேர்த்தவர். அலைபேசியில் அமர்வுகள் சரியாக கைகூடவில்லை. நானும் சரியாக ஒத்துழைக்கவில்லை. இப்போது, சென்னையில் ஹேமா என்பவரிடம் சிகிச்சை. நான் மீண்டு வந்ததில் ரேணுகா,ஹேமா இருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானவை.
Water painting செய்ய தொடங்கினேன். தொடர வேண்டும்.

இவை அனைத்தையும் தாண்டி, இந்த வருடத்தின் ஆகப்பெரும் பயன், விஷ்ணுபுரம் வட்டத்தில் இணைந்தது மற்றும் ஆசான் ஜெயமோகனை சந்தித்து, உரையாடி பழக வாய்ப்பு அமைந்தது.
எட்டு வருடங்களாக ஜெமோவை வாசித்து வந்தாலும் அவரை நேரில் பார்த்ததில்லை. டால்ஸ்டாயின் 190வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். நிகழ்வுக்கு முன், நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அருகில் சென்றதும் புன்னகைத்தார். நான் அவர் அருகிலேயே இருந்தேன். ஆனால், எதுவுமே பேசவில்லை.

அதிர்ஷ்டவசமாக, அங்கு எனது கல்லூரி சீனியர், ரவிக்குமார் பாண்டியனை சந்தித்தேன். அவர் மூலம், சென்னை வட்டத்தில் இணைந்தேன். வட்ட நண்பர்களின் ஏற்பாட்டில், நெல்லை கட்டண உரைக்கு ஒரு சுற்றுலா சென்று வந்தேன்.

தொடர்ந்து, கோவையில் விஷ்ணுபுரம் விருது விழா. அங்கு தான் முதன் முதலில் ஆசானிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
தொடர்ந்து, சென்னை கட்டண உரை. அதன் மறுநாள், வெண்முரசு விக்கி குறித்து நண்பர்களுடன் இணைந்து அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு. அடுத்த சில நாட்களிலேயே சிவ இரவு. பிறகு, ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில் பங்கு பெற இயலாத சூழலில், நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பில் பங்கு கொண்டேன். ஆசானுடன், ஆசான் அருகில் இரண்டு நாட்கள். அடுத்து ஊட்டி காவிய முகாம்.
இடையே, மின்னஞ்சல் மூலமும் அவருடன் தொடர்பில். சில கடிதங்கள் தளத்திலும் வெளியாகின.

மேலும், இந்த நிகழ்வுகளின் மூலம், பல நண்பர்களை பெற்றேன். தொடர்ந்து செயலாற்ற ஊக்கம் அளிப்பவர்களாக என்றுமே உள்ளனர்.
கடந்த வருடம் முக்கியமானது. சிறந்த தொடக்கமாக அமைந்தது. இது தொடர வேண்டும். உங்கள் அனைவரின் ஆசியுடனும் தொடர்வேன்.