சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் இஸ்லாமியதிற்கு எதிராக இருப்பதாய் அடிக்கடி போர்க்கொடி  உயர்த்த படுகிறது. அவர்கள் சொல்லும் ஒரே காரணம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக சித்தரிக்க படுகிறர்கள்.
கொஞ்சம் இந்த சச்சரவுகளை மறந்து இந்திய சூழலில் தீவிரவாதம் எப்படி இருக்கிறது என பார்ப்போம்.  

Terrorism is the systematic use of terror, often violent, especially as a means of coercion.

அடிபணிய வைக்க வன்முறையை சாதனமாக பயண்படுத்தும் முயற்சிக்கு தீவிரவாதமென்று பெயர். அப்படி செய்யும் அனைவருமே தீவிரவாதிதான், வலுகட்டாயமாக கடையடைப்பு செய்ய வைக்கும் அரசியல் தலைவர்கள் உட்பட.
ஆனால் நடைமுறையில் தீவிரவாதியென அழைக்கபடுபவன் யார்??
இந்திய அரசு தீவிரவாத அமைப்புகள் என வகைபடுத்தும் 33 அமைப்புகளை நான்கு விதமாக பிரிக்கலாம்.
1. எல்லைதாண்டிய மற்றும் மதவாத தீவிரவாதம். (17)

இது பாக்கிஸ்தானின் உதவியோடு எல்லை கடந்து நடக்கும் தீவிரவாதம். நாட்டின் பல இடங்களில் குண்டு வெடிப்பு போன்றவை தடை செய்ய பட்ட அமைப்புகள் மூலமாகவே நடக்கின்றன. தடை செய்ய பட்ட அமைப்புகள் அனைத்துமே தங்களை மதவாத அமைப்பாகவே அடையாள படுத்தி கொள்கின்றன.

(பி.கு: சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு எழுந்த போராட்டம் அடங்கிவிட்டதாகவே தோண்றுகிறது)

2. மத்திய மாநிலங்களில் நடக்கும் மாவோயிச/நக்சலிச தீவிரவாதம். (3)

வருடந்தோறும் பலாயிரகணக்கான CRPF படையினரின் உயிரை குடிக்கும் அந்த ஒரு குறிபிட்ட பகுதிக்குள் மட்டுமே நடக்கும் தீவிரவாதம். மக்களின் ஆதரவு பரவலாக இருக்கும் அமைப்பு. தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் கடத்தபட்டது இவர்களால்தான்

3. வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் தனிமாநில/தனிநாடு கோரிக்கைகள். (10)

அங்கிருக்கும் 7 மாநிலங்களில் பல்லயிரம் சிறு இனததவர்கள் தனி மாநில மற்றும் தனி நாடு கோரி போராடி வருகிறார்கள். ஜப்பானின் நிலநடுக்கம் போல், வட கிழக்கு இந்தியாவில் குண்டு வெடிப்பு என்பது சாதாரண நிகழ்வு.

4. தமிழீழ ஆதரவாளர்கள். (3)
இதில் தமிழீழ ஆதரவாளர்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் தனிப்பெயர் கிடைத்துவிட்டதால் மீதி இரு வகையினரையே தீவிரவாதியென செய்தி ஊடகங்கள் விளிக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்கட்டும், ஒரு பேச்சுக்கு நான் ஒரு இயக்குனர் என வைத்து கொள்ளுங்கள்.  இயக்குனராக சாதா காதல் கதையோ உள்ளூர் தாதாவை அடிக்கும் ஹீரோவையோ காட்டி சலித்து போனால் நான் அடுத்து எடுக்க கூடிய சப்ஜக்ட் நாட்டை காக்க போராடும் ஹீரோ, அதற்கு நான் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் தீவிரவாதம். அப்பொழுதுதான் நாட்டுக்கு, ஜனாதிபதி உயிருக்கு ஆபத்து, போன்ற கதை அமைத்து கதாநாயகன் காப்பதாய் காமிக்க இயலும்!
இப்பொழுது எந்த வகை தீவிரவாததை கையில் எடுப்பது??
வட கிழக்கு பிரச்சனை என்பது பிராந்திய செய்திகளுகளுடன் மறக்கபட வேண்டியது.
நக்சலிசம், ஈழம் பற்றி உண்மையாக எடுத்தால் சென்சார் தாண்டுவதே கடிது.
மற்றும் நக்ஸலிசம் பற்றிய புரிதல் குறைவு. ஈழத்தை தமிழகத்தில் தீவிரவாதமாக சித்தரிக்கும் தைரியம் எவர்க்கும் இல்லை என்பது என் துணிபு.
ஆனா மதவாத தீவிரவாதம் அப்படி இல்ல. நிறைய பேர் போன வழி… பிரச்சனை இருக்காது. மக்களுக்கு புரிய வைக்க மெனக்கெட வேண்டாம், ஒரு டெம்ப்ளேட் கதையில் சில மாற்றங்கள் செய்தால் போதும் ஒரு ஆக்ஷன் கதை தயார். கஷ்ட்டபடாம கால்ஷீட் வாங்கலாம். இப்படி ஒரு கதை எடுக்கும் பொழுது வில்லனாக தீவிரவாதியாக ஒரு முஸ்லீமைதான் காட்டியாக வேண்டும். கதையில் தீவிரவாதம் சம்பந்த பட்ட அனைவரும் முஸ்லிமாக இருப்பது கதையின் தேவை. தமிழீழம் பற்றி கதை எடுத்துவிட்டு வில்லனை தமிழன்அல்லாதவனாக காட்ட இயலாது.

”இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல.. தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல”

ஆனால் இந்த திரைகளத்தில் தீவிரவாதிகள் முஸ்லிமாகதான் இருக்கிறார்கள். ஏன் தீவிரவாதிகள் மசுதியில் பதுங்கிருப்பது போல் கூட ஒரு காட்சி…..நடந்து செய்திதாளில் படித்த சம்பவம் தானே. தர்க்க ரீதியாக தவறே இல்லை. கதாநாயகனின் வேலை எல்லையிலோ அல்லது shootingகிற்கு அணுமதி கிடைக்காவிட்டால் நாட்டின் ஏதோ ஒரு பகுதியிலோ ஊடுறுவி நாட்டின் பாதுகாபிற்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதிகளை அழித்து முடிந்தால் நாடு கடந்து சென்று அவர்களின் தலைவனையும் அழிக்க வேண்டும்.  ஹீரோவ கூட முஸ்லிமா காமிக்கலாம், ஆனா ஹீரோயின் முஸ்லிம்னா கிளாமர் டான்ஸ் ஆட முடியாது, மாடர்ன் டிரஸ் போட முடியாது. கடைசி சீன்ல கல்யாணத்த டீடெயில்லா சீன் பை சீன் காமிக்க முடியாது அதனால ஹீரோ ஹிந்துவாவோ இல்ல கிரிஸ்டின் ஆவோ வைச்சு படம் எடுத்துடலாம்.
ஏதோ தேறுன நாலு காட்சி வைச்சு டிரைலர் ஓட்டுனா “முஸ்லிம் அமைப்பு” கிட்ட இருந்து எதிர்ப்பு வரும். என்ன பண்றது போட்ட பணம் வீணா போதேனு அவங்க சொன்ன காட்சியெல்லாம் நீக்கி திரைகதைல பட்டி டிங்கரிங் செஞ்சு படம் வெளியிட்டு நல்ல வசுலாகி அடுத்த படத்துக்கு கதை எழுதுறப்பதான் எனக்கு ஒன்னு தோணுச்சு…
முஸ்லிம் தீவிரவாதிகள வைச்சு படம் எடுத்தேன்.. ஏதோ சில கட்சிகளை நீக்க சொன்னாங்க.. நீக்கின பின்பும் தீவிரவாதம் செய்பவன் முகமத்தியனா தான் இருந்தான். நம்ம ஊர்ல தான் யருக்கும் தெரியாம மக்களோட ஒருவனா தங்கி இருந்தான். ஹீரோ கேள்வி கேட்டதுக்கு அவன் செய்வது சரின்னு ஏதேதோ மேற்கோள் காட்டி காரணம் சொன்னான், சுருக்கமா சொல்லனும்னா முஸ்லிம் தீவிரவாதிகளால் இந்தியாக்கு ஆபத்துனு தான் படம் எடுத்தேன். போராடுனவங்க உண்மையாவே இஸ்லாமியர்களை பத்தி தவறான கருத்த பரப்ப கூடாதுனுதான் என் படத்த எதிர்த்தாங்கனா, இப்படி ஒரு படத்த வெளியிடவே கூடாதுனு தானே போராடி இருக்கனும்?? எனக்கு முன்னாடி வந்த துப்பாக்கி படத்துலையும் ஏதோ காட்சிலாம் எடுத்துட்டாங்கலாம். ஆனா நீக்கின பிறகு படம் பார்த்த நான் வெளிநாட்ல (பாக்கிஸ்தான்ல) இருக்க தீவிரவாத அமைப்புகளின் கட்டுபாட்டில் இங்க ஸ்லீப்பர் செல் நிறைய இருக்குன்ற புரிதலோட தானே வெளிய வந்தேன்?? சாதரணமா கடந்த சக பயணிய சந்தேக பார்வை பார்க்கதானே வைச்சுது. அப்ப இவங்க எதுக்கு போராடுனாங்க??
எத்தனை காட்சிகளை நீக்க சொன்னாலும் எல்லை தாண்டிய மதவாத பயங்கரவாதத்தை சித்தரிக்கும் பொழுது நான் வில்லன்களை முஸ்லிம்களாக தான் காட்ட வேண்டும். அது மக்கள் மனதில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் அனைவரும் கணிக்க கூடியதே. இது நன்கு தெரிந்த பொழுதும் முஸ்லிம் நலனுக்காக பேராடுவதாய் சொல்பவர்கள் சில காட்சிகளை மட்டுமே நீக்க சொல்லி போராடி ஜெயிப்பது எதை?? போராடும் முஸ்லிம் (அரசியல்) அமைப்புகளுக்கு வெற்றி என்பது நாளை உங்களுக்காக குரல் கொடுத்தேன் என முஸ்லிம் சகேதரர்களிடம் சொல்லுவதும், அரசியல் பேரத்தில தங்கள் மதிப்பை உயர்த்துவதாகவும் தான் எனக்கு படுகிறது.
ரோஜாவோ பயணமோ தீவிரவாதத்தின் தீவிரத்தை காட்டாமல் அழுத்தமான திரைகதை சாத்தியமாகாது. அப்படி காட்டும்பொழுது தெளிவாக அது அங்கிருக்கும் சில தீவிரவாதிகளின் செயல் என சொன்னாலும், படம் பார்த்தவர்கள் பின்பு எதிர்படும் முஸ்லிமை பார்க்கும் பார்வையில் மாற்றம் இருக்காது என்ற அளவிற்கு தமிழக மக்களின் புரிதல் முன்னேறும் வரையாவது தீவிரவாதத்தை கதைகளமாக வைத்து படம் எடுக்க வேண்டாமென முடிவெடுத்துள்ளேன்… என்ன சொல்கிறீர்கள்?