கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஜெமோவின் பழைய பதிவுகளை வாசித்துக் கொண்டும் , YouTubeல் அவரது உரைகளை கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்.
தமிழ் ஊடகங்களுக்கு அவர் தந்த பேட்டிகள் மிகக்குறைவு.
ஒரு பேட்டியில், தினமலர் அவரிடம் முன்வைத்த கேள்விகள்:
நவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி….
எழுத்தாளர்களுக்கு வருமானம் முக்கியம் என்று சொல்கிறீர்களா?
எழுத்தாளனுக்கு ஹைகிளாஸ் வாழ்க்கை அவசியம் என்று கூறுகிறீர்களா?
அவர் கூற வருவதை முற்றிலும் புரிந்துக்கொள்ளாமல், லூசுத்தனமான எதிர் கேள்விகள். மீதி சினிமா குறித்து.
நியுஸ்7ல், கமல் குறித்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கமலை முன்வைத்து ஒரு நேர்காணல்.
மேலும், சர்க்கார் தொடர்பாக சில.
அதே சமயம், மாத்ருபூமி ஜெமோவை மையபடுத்தி எடுத்த 2 நிகழ்ச்சிகளை பார்த்தேன்.
1. ஓனம் சிறப்பு நிகழ்ச்சியாக ஜெமோ நாஞ்சிநாடு குறித்து பேசும் நிகழ்ச்சி.
2. ஒரு ஐந்து நிமிட நேர்காணல். ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு சிறு அறிமுகம். வெண்முரசு குறித்து, அவரது மலையாள படைப்புகள் குறித்து, இணையத்தில் எழுதுவது குறித்து செறிவான கேள்விகள். முதற்கனல் அம்பையின் கண்ணீரை பேசுகிறது என்பதை பேட்டி எடுக்கும் மலையாளி அறிந்திருக்கிறார். வெண்முரசில் பெண்களின் இடம் குறித்து கேட்கிறார்.
கடைசி ஒரு நிமிடம் மட்டுமே, சினிமா குறித்து. அதிலும், ஒழிமுறி போன்ற படங்களில் பணிபுரிந்துவிட்டு பொழுதுபோக்கு திரைப்படங்களில் பணிபுரிவது குறித்து எழுத்தாளனின் எண்ணங்களை அறிய முற்படுகிறார்.
ஜெமோ, சாரு என பலரும் கூறி அறிந்திருந்தாலும், மலையாளிகள் இலக்கியத்திற்கு தரும் முக்கியத்துவத்தை இதில் நேராகவே உணர முடிகிறது.
இலக்கியத்தை விடுங்கள், தமிழில் அதிகமாக எடுக்கப்படும் சினிமா சார்ந்த நேர்காணல்களில் கூட, பரத்வாஜ் ரங்கன், சுதிர் ஸ்ரீனிவாசன் போன்ற மிக சிலரைத் தவிர, இந்த செறிவு இருக்கிறதா என்ன?