கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம்,
கவிச்சக்கரவர்த்தியிடம் கவி படித்தாலும் நான்
கவி பாட தொடங்கியது உன்னைக் கண்டுதான்…
அரசவை காணும் ஆவலில்
அரண்மனை வந்த நான்
அதிரூபசுந்தரி உன்னைக் கண்டேன்
அமரேசன் சபையிலிருந்து இறங்கியவளோ என
அதிசயித்து நிற்கையில்
அமராவதியென உன் பெயர் கூறிய தோழனை
அமரனாவாயென வாழ்த்தினேன்!
தங்க விதானத்தில் மன்னன்
தந்தையின் கவிகளை ரசித்து கொண்டிருக்கையில்
தனயன் உன்னழகை ரசித்தேன்!
ஓரக்கண்ணால்
ஓர் பார்வை பார்த்து
ஓடிப் போனாய், உன் பின்னால்
ஓடிப் போனது என் மனது
உறையூர்
உறங்கிய பின்னும்
உறங்காமல்
உன் நினைவில்
உறைந்தேன்…
கலைமகள்
கருணையில்
கவியில்
கரை
கண்டேன்
கண்ணே,உன்னை
கண்ட
கணமே
கரம் பிடிக்க
கங்கணம் கொண்டேன்
காவிரியை
காதல் தூது அனுப்பினேன், நின்
காயம் பட்ட காற்றையும்
காபந்து செய்தேன்
அரை நொடிப் பார்வையில்
அனைவரையும்
அமரராக்கும் ரதியே,
அடி அமராவதியே…
அடியேனின் காதலை
அங்கீகரியென
அனுகணமும் தவம் கிடந்தேன்
பிரம்மனே படைத்து
பிரமித்துப் போன நீ,
பித்தனின், உன் பக்தனின்
பிராத்தனை ஏற்றுப்
பிரியம் கொண்டாய் என் மீது,
பிரியை,
பிரியா வரம் தந்தாய்!!
கபடமில்லாக் காதல் கொண்ட
கலைமளின்
கடை மகனின் வாழ்வில்,
கலைமகளுக்கு அந்தாதி புனைந்தவரால்
கலகம்…
(தொடரும்)