பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு…
விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில்
விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது
பெண்டு என வாசல் தாண்ட
கட்டுப்பாடிட்ட குடும்பம்
குடிபெயந்தது வீதிக்கு…
பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும்,
உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்!
விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த – ஓர் இரவு
வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்…
இருநூறு குடும்பம் வாழ்ந்த ஊரில்
இரண்டு நிமிடங்களில் இருநூறு பேர் கூட எஞ்சவில்லை…
உறவுகூடி பூ சொரிந்து உன் கரம் பற்ற எண்ணிய நான்
அனாதையாய் உன் கை சேர்ந்தேன் செல் (shell) தூறலில்…
உயிருக்கு உத்திரவாதம் இல்லா நிலையில்
உன் உயிரான என்னை காப்பாற்ற முனைந்தாய்,
என் உயிரான உன்னை மறந்து,
கப்பலேறி கச்ச தீவு போகச்சொன்னாய்
கணாளா உன்னை பிரிந்து…
எதிர்த்து பேசயிலலாததால் ஏறினேன்
தாய் புதைந்த தாய் நாட்டை விட்டு
கயவரின் பார்வை மேல் மேயும்பொழுதெல்லாம்
போர்த்தி கொண்டேன் உன் பார்வையை
கடைசி மூச்சாய் கடலில் கரைய எண்ணியவளை
கருணையின்றி கரை சேர்த்தாள் கடலன்னை,
சஷ்டி கவசம்போல் வாய் உன் பெயரை முனங்க
அரை மயக்கத்தில் அடைப்பட்டேன் அகதி முகாமில்…
நாட்டை காக்ககொண்ட உறுதியில்
நங்கைக்கு தந்த உறுதியை மறந்தாய்
அணுகணமும் பிரியேன்னென…

மகாராணியாய் உன்னுடன் வாழ வேண்டியவள்
மிருகமாய் நடத்தபடுகிறேன் இங்கு,
தனிமையில் நின் நினைவுகளை புரட்டிபார்த்து புரட்டி பார்த்து
நைந்து போனது அதுவும் இங்கு அடைபட்டோர் மனம்போல்…
பகலிரவு பாராமல் என்னுள் எழும் ஒரே கேள்வி
பதுங்கு குழியில் பிணங்களுக்கிடையே
உன் அரவணைப்பில் ஒளிந்திருந்த இரவு
ஏன் பிரியவில்லை என் உயிர்?