இரவின் ஒளியில்
இருவரும் ரகசியங்கள் பேசினோம்…
ஒட்டு கேட்க வந்த காற்றையும்
ஒத்தி போக சொல்லி!!
நின்னை மடி சாய்த்து
நிலவொளியில் உறங்க வைக்கையில்
நினைவில் ஒரு சந்தேகம்…
“நிலவு ஏன் தேய்கிறது….??”
தேவதை நீ அருகிலிருந்ததாலோ என்னவோ
தேவன் தோன்றினான் என்முன்னே பதில் சொல்ல…
உன் உறக்கம் கலைக்காமல்
மென் குரலில் அளவளாடினோம்…
“சாதாரணனின் சந்தேகம் தீர்க்க
சாட்சாத் சகலவியாபி வரவேண்டிய அவசியம்??”
“சொர்கத்து தேவதைகளின் தேவதையை
சொந்தமாக்கி கொண்டபின் நீ சாதாரணன் அல்லவே..!”
புரியா இறையின் பேச்சை
புரிந்துகொள்ள முயலாமல், கேட்டு வைத்தேன்,,,
“நிலவொளியில் என்னவள் ஜொலிக்கும் அழகை
நித்தம் ரசிக்க, ஏன் இல்லை
நித்தம் பௌர்னமி??”
“தேவதைகளின் சாசனம் நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை,
ஒரு கதை சொல்கிறேன் கேள்….!
அண்ட சராசரமும்
ஆகாயமும்
இவ்வுலகுடன்
ஈரேழ் உலகும்
உயிரும்
ஊர்மியும்
எண்ணும், எழுத்தும்
ஏமாசலமும்
ஐங்கணையும்
ஒச்சமும்
ஓங்காரமும்
ஔவியம் கொள்ள
பலவும்
படைத்திருந்தாலும்…
ஏதோ குறை இருப்பதாய் எண்ணம் கொல்ல
ஏனோ திருப்தி கொள்ளவில்லை மனம்…!
படைப்பின் உச்சமாய் சில
படைப்புகளை செய்தேன்.
தேவதைகள் என்று பெயரிட்டு
தேவர்கள் அவற்றை போற்றினாலும்
சில குறைகள் கண்டேன் அதிலும்….!
சித்தம் பரிதவிக்க,
ஈசன் அடிபடிந்து அவர் சொற்படி
ஈரேழு ஆண்டுகள் தவம் கிடந்து
திறமை அனைத்தையும்
திரட்டி ஷ்ருஷ்டித்தேன் .
திவ்ய தேவதையை…!!
தேவதைகளின் தேவதையை…!!
தேவதேவதையை…!!
தனி உலகு உண்டாக்கிட விழைந்தேன்
தங்க தேவதைக்கு….
அவளோ,
அண்டசராசாத்தை
அழகாக்க பிறந்தவளை
அகிலம் சுற்ற
அனுமதிக்க வேண்டினாள்.
என் படைப்பின் சாரத்தை,
கற்பனையின் உச்சத்தை,
நீண்ட யோசனைக்கு பின்
நீங்க அனுமதித்தேன்…
தேவதை சாசனமெனும் சில விதிகளுக்குட்பட்டு…!”
“அப்படி என்ன விதிகள் தேவா.?”
“விடிய போகிறது… முழு
விதிகளை பிறகொருநாள் பார்ப்போம்.
விடை மட்டும் இயம்புகிறேன் உன் கேள்விக்கு,
தேவதை தேவலோகத்தில்
அமிர்தத்தில் குளித்தாலும்
பூமியில் அவள் குளிக்க,
நான் தினம் பனித்துளி அனுப்புவதென ஏற்பாடு…!
மஞ்சள் பூசினால் நிறமாறுமே,
அவள் பூசிகொள்ள
திங்கள் ஒரு திங்கள் படைப்பதென்று முடிவு, உடன்
நீர் சொட்டும் தேகம் துடைக்க முகில்களும்..
சூடி முடிந்த கார் கூந்தல் சேர விண்மீன்களும்..!
நுன்சிலையின்
நுன்மேனி நோகாதிருக்க
இந்த கட்டுபாடு…!
இதன்படி, அந்த
தேவதேவதை தினம்
தேய்த்து குளிப்பதால்
தேய்ந்து போகிறது நிலவு..!”
“தேவே… அப்படியானால் நிலவு வளர்வதெப்படி??”
“உன் மடி உறங்கும் தேவதேவதையை கேட்டுகொள்….”