குமுததில் தொடராக வெளிவந்து 1998ல் புத்தகமாக வெளியான அப்துல் ரகுமானின் கவிதைகளின் தொகுப்பு பித்தன். பல தலைப்புகளில் பித்தன் எனும் கற்பனை கதாபாத்திரத்துடனான கவிஞரின் உரையாடல்களை கவிதையாக அளித்துள்ளார். அறிமுகம் எனும் முதல் கவிதையில் பித்தனை பற்றி விவரிக்கையில்
“பித்தன் 
‘எதிரி’களின் உபாஸகன்”
என தொடங்கி
“உங்கள் கல்லடிக்கு
அவன் காத்திருக்கிறான்.
ஏனெனில்
அதுதான் அவனுக்கு
அங்கீகாரம்.”
என்று முடிக்கிறார்.
பித்தனின் கருத்துக்கள் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையாக தோண்றினாலும் உள்வாங்கி யோசிக்கையில் நிதர்சனத்தையும் நமது தவறான புரிதலையும் சுட்டி காட்டுவதாகவே இருக்கிறது.
ஏற்றத்தை பற்றி அனைவரும் பேசி கொண்டிருக்கையில் பித்தன்
“இறங்குவது
பரவசம்;
அதனாலல்லவா
அருவி பாடுகிறது” என்கிறான்.

பித்தனின் பார்வையில் இருந்து கவிஞர் உலகை பார்க்கும் விதம் வியக்க வைக்கிறது.
“எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு 
என்பதும்
தேன் என்பது ஒன்றுதான்
என்பதும்
தேனீக்கு மட்டுமே
தெரிகிறது”
“‘இருக்கிறேன்’ என்று
நீ சொல்லும்போதே
ஒவ்வோர் எழுத்தையும்
இறந்தகாலம்
விழுகிக் கொண்டிருப்பதைப்
பார்”
பேசி கொண்டே பித்தன் கேட்கும் சில கேள்விகள் நம்மை புரட்டி போட வைப்பவை.
“உங்கள் விடைகளிலும்
வினாக்களின் கர்ப்பம்
இருப்பதை
நீங்கள் அறிவீர்களா?”
இப்படி அனைத்து விஷயங்களிலும் எதிர்மறை பார்வையுடன் தீவிரமாக பயணிக்கும் புத்தகம் முழுதும் கவிஞரின் எழுத்தாளுமையும் கவிதிறனும் விரவிகிடக்கின்றன.

“அர்த்தம்
வார்த்தையை
உடுத்திக்கொள்வதைப் போல்
உங்களால்
உடுக்க முடியவில்லையே”
“சூரியன்
தினமும்
வெள்ளையடித்தாலும்
இரவு
நட்சத்திரங்களைக்
கிறுக்கிக்கொண்டுதான்
இருக்கும்”

எதிர்மறை பார்வையிலும் உலகை எத்தனை பாசிட்டிவ்வாக பார்க்க இயலும் என சில உரையாடல்கள் மூலம் எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம். ஒவ்வொரு கவிதையும் வாசிப்புக்கு பின் நமது எண்ணங்களில் மாற்றங்களை கொண்டு வர கூடியவை. தொகுப்பை வாசித்து முடிக்கையில் வாழ்க்கை பற்றிய உங்கள் புரிதல் மாறி இருக்கும். அப்படி மாறாவிட்டாலும் நல்ல தமிழை வாசித்த திருப்தியை கட்டாயம் அளிக்க கூடியது “பித்தன்”