2009ல் இணையத்தில் நுழைந்த சில நாட்களிலேயே, சமகால எழுத்தாளர்களாக ஜெ, சாரு மற்றும் எஸ் ரா அறிமுகமாகிவிட்டிருந்தனர். அவர்களின் படைப்புகளை வாசிக்க தொடங்கியிருந்தேன். ஆனால், அவர்களின் வலைதளங்களுக்கு அதிகமாக சென்றதில்லை. சாரு ஆன்லைன் ஒரு நாள் சென்றபொழுது, அவர் ஏதோ உதவி கேட்டு எழுதியிருந்தார். முந்தைய பதிவுகளில் அவரது பூனைகள் பற்றி ஏதோ குறிப்புகள். அது ஏனோ, எழுத்தாளரின் தளம் ஒரு டயரிக்குறிப்பு அல்லது சாதாரணவர்களின் முகநூல் பக்கம் போல் தான் என்ற எண்ணத்தை அளித்தது. பிறகு எவரது தளத்திற்கும் சென்று எதுவும் வாசித்ததில்லை.

2012 வாக்கில், #SorryJemo பிரபலமானது. (காரணம் இந்தப்பதிவு என்பதை இன்று காலை தான் கண்டுபிடித்தேன்.) இன்று வரை வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த hashtag கண்ணில் படுகிறது. (#சாரிஜெமோ!). இதுமட்டுமல்லாது, இணையத்தில் ஜெவின் பதிவுகளுக்கு தொடர்ந்து எதிர்வினைகள் வந்துக்கொண்டிருந்தன. அவர் பேசப்பட்டுக்கொண்டே இருந்தார். இவற்றால் ஊந்தப்பட்டு தான் ஜெமோ புள்ளி உள்ளே, உள்ளே சென்று விழுதேன். முதலில் என்னை ஈர்த்து, தொடர்ந்து வாசிக்கவைத்தது பண்பாடு, வரலாறு கலாச்சாரம் குறித்த பதிவுகள். முக்கியமாக கோவில்கள், சிற்பகலைகள் குறித்த பதிவுகள். தொடர்ந்து வரலாற்று ஆளுமைகள் குறித்த பதிவுகள், பயணகுறிப்புகள் போன்றவை.

இலக்கியம் சார்ந்து தளத்தில், ஆரம்பத்தில் வாசிக்கவில்லை. ஆனாலும் ஒரு லட்சிய வாசகனாக வேண்டுமென்று செவ்வியல் ஆக்கங்களை மூச்சு முட்ட வாசித்துக்கொண்டிருந்த நேரமது. வாசிக்க கடினம் என எல்லாரும் சொன்ன விஷ்ணுபுரத்தை இரண்டே நாட்களில் வாசித்து புரிந்துக்கொண்டேன் (கதையை!) என்றெல்லாம் பெருமைப்பட்டுள்ளேன். அந்த லட்சிய வாசகனை நோக்கி எழுந்த ஒரு அறைகூவலாக வெண்முரசை தொடங்கும் பொழுது ஜெ கூறிய வார்த்தைகள் வந்து விழுந்தன

நண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அலல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது.

வியாசனின் பாதங்களில், ஜெயமோகன்

ஒவ்வொருநாளும் ஒரு பதிவு கூட வாசிக்க இயலாதா என்னால்? நானும் வாசித்து காட்டுகிறேன் என்று ஒரு சவாலாக இதை எடுத்துக்கொண்டேன். (அவசரம் வேணாம், ஷோல்டர இறக்குங்க! முதற்கனல், இரண்டு நாள் படிச்சதுமே எல்லாமே போச்சு. அவர் என்னவோ எழுதி இருக்கார்… ஆனா ஒன்னும் புரியலையே modeலையே கொஞ்ச நாள் சுத்திக்ட்டு இருந்தேன். தொடர்ந்து வாசிக்க இயலவில்லை.) ஆனாலும், தளத்தை தினமும் வாசித்துக்கொண்டிருந்தேன். வெண்முரசு குறித்த பதிவுகள் தொடந்து தளத்தில் வந்துக்கொண்டிருந்தன.

அந்த கடிதங்கள் தந்த ஆர்வத்தின் பெயரிலும், நாகங்களில் தொடங்கிய கதை எப்படி மஹாபாரத கதையில் வந்து இணைகிறது என பார்க்கவும், இதை வாசித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன். பொதுவாகவே, பாரத கதை எங்கு தொடங்குகிறது என்ற ஒரு கேள்வி என்னுள் இருந்தது. பாண்டவர் கௌரவர், திருதாஷ்டிரர் பாண்டு ஆனால், கதைகள் பல தலைமுறைகள் முன்பு வரை செல்கின்றன. தர்மனின் முற்பிறவி எல்லாம் கதைகளில் உள்ளன. அப்பொழுது, எல்லாம் தொகுக்கப்பட்ட பாரதம் எங்கு தொடங்கும்? (பாரத கதை ஒரு நேர்கோட்டு கதை என்பது என் அன்றைய புரிதல்). இப்படி ஒரு ஆர்வமும் வாசகன் என்ற ஆணவமும் சேர்ந்து தான் வெண்முரசை வாசிக்க வைத்தது. 2014ன் மத்தியில் தான் வெண்முரசை வாசிக்க தொடங்கினேன்.

முதல் சில அத்தியாயங்களை கடந்தவுடன், நாவல் என்னை முழுதாக உள்ளிழுத்துக்கொண்டது. நாள் முழுக்க வேறு சிந்தனையே இல்லாமல் வெண்முரசை வாசித்த காலம் அது. இன்றும் நினைவில் உள்ளது, MBA வகுப்புகளில், வெளியில் வகுப்பு நடந்துக்கொண்டிருக்கையில், நான் அகத்தில் அஸ்தினபுரியுலும், கங்கயிலும் பயணப்பட்டுக்கொண்டிருதேன். அதன் பிறகு ஒரு நாளும் வெண்முரசை வாசிக்காமல் இருந்ததில்லை, கடைசி அத்தியாயம் வரை.

இன்று யோசித்தால் வெண்முரசை நான் வாசிக்கவில்லை எனறு தான் கூறுவேன். தொடக்கத்தில் இருந்தே ஜெ கூறுவது தான், ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும்.” அந்த எளிய வாசகனாக இருந்தே வெண்முரசை இன்று வரை வாசித்துள்ளேன். பாரத கதையை வாசிக்கும் பாவனையில் தான் வாசித்துள்ளேன்.

கண்டிப்பாக எந்த ஒரு வாசகருக்கும் இதன் கணிசமான ஒரு பகுதி எட்டாமலும் இருக்கும். அது நவீனநாவல்களின் ஒரு இயல்பு, அது முழுமையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

வெண்முரசு – புரிதலின் எல்லை, ஜெயமோகன்

அப்படி ஒரு வாசிப்பின் போதாமை எனக்கு அப்பொழுது புரியவில்லை. நிறைய விவாததள கடிதங்களையும் அதிகபிரசங்கிதனமென்று எண்ணியுள்ளேன். நாவல் தொடக்கம் எப்பொழுதும் நேராக கதையில் தொடங்காமல், வேறு ஏதோ நிலத்தில் தொடங்கும். அந்த பகுதிகளை எளிதாக தாண்டிவிடுவேன். ஏன் இப்படி எழுதுகிறார் என யோசித்ததும் உண்டு. சரி கடவுள் வாழ்த்து போல் ஏதாவது காவிய இலக்கணம் இருக்கும் என எண்ணிக்கொள்வேன்.

இப்படி, படம் பார்த்து கதை சொல்வது போல் நான் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில், சென்னை விஷ்ணுபுரம் நண்பர்களுடன் ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன். அன்று, ராஜகோபாலன் பிரகாரத்தில் இருந்த ஒரு சிற்பத்தை காட்டி, அது தான் கிராதத்தின் தொடக்கத்தில் வரும் பிக்‌ஷாடனர் என கூறினார். அந்த ஒரு சிறு நிகழ்வு எனது பார்வையை மாற்றியது. நாவல் தொடக்கங்களையும் கவனித்து வாசிக்க தொடங்கினேன். அவற்றிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என புரிந்தது. ஆனாலும், அவற்றை வெண்முரசின் மைய கதையோட்டத்திலிருந்து விலகிய பகுதிகளாகவே எண்ணினேன்.

இந்த எண்ணத்தை மாற்றி, வெண்முரசின் பிரமாண்டத்தை உணரவைத்தது சென்னை வெண்முரசு அமர்வுகள் தான். அமர்வுகளில் பங்குபெற தொடங்கிய சில மாதங்களிலேயே நான் வெண்முரசை வாசிக்கும், அணுகும் விதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. முக்கியமாக எனது வாசிப்பின் போதாமைகளை உணர தொடங்கினேன்.

முக முக்கியமான போதாமையாக நான் எண்ணுவது, முழு வெண்முரசையும் நினைவில் இருந்து மீட்டெடுக்க இயலாததை. விவாத அரங்குகளில் நண்பர்கள் சாதாரணமாக இந்த நாவலில் இது வரும் என கூறும் பொழுது, நான் venmurasu.inயை திறந்துவைத்து தேடிக்கொண்டிருப்பேன்.

இதெல்லாம் தெரியாம, பாவம் புதுவை நண்பர்கள் என்னை அவர்களின் கூடுகையில் பேச அழைத்தார்கள். மழைப்பாடல் குறித்து. எனக்கு அது ஒரு நல்ல அனுபவம். மழைப்பாடல் நாவலை மீண்டும் இரண்டு முறை வாசித்தேன். வெண்முரசின் ஒரு நாவலை இப்படி முழுதாக வாசித்தது அதுவே முதல்முறை. அந்த வாசிப்பின் முடிவில், பிரமித்து, அதன் பேருருவின் முன், அடிபடிந்து நிற்கும் சிறுவனாக உணர்ந்தேன். ஒரு பகுதியே இந்த உணர்வை தருகிறது என்றால், வெண்குரசின் முழு உருவையும் உள்வாங்க மீண்டும் மீண்டுமென வெண்முரசை வாசிப்பதே ஒரே வழி.

இப்படி, இலக்கிய வாசகனாகவும் இல்லாமல், கதைகளத்தை கூட முழுதும் நினைவில் இருத்தாமல், நானும் வாசித்தேன் என வாசித்த ஒருவனுக்கு வெண்முரசு கொடுப்பது என்ன? அவன் வெண்முரசிலிருந்து பெறுவது என்ன?

முதலில், இதோ இந்த பதிவை எழுதும் மொழி. நான் எழுத தொடங்கிய நாட்களிலிருந்ததை விட எனது மொழி மிகவும் மேம்பட்டுள்ளது. இரண்டாவதாக, அறிமுகம். ஒட்டுமொத்த இந்திய மரபிற்குமான அறிமுகம். ஒரு எளிய வாசகனுக்கு, ஒட்டுமொத்த இந்திய புராண இதிகாசங்களையும் ஒரே இடத்தில் வெண்முரசு தொகுத்து அளிக்கிறது. ஜெவின் வார்த்தைகளில், வெண்முரசு இந்திய தொல் படிமங்களின் களஞ்சியம். எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால், நமது புராணங்களில் உள்ள கதைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தருகிறது. அந்த கதைகளை புரிந்துக்கொள்வதற்கான பின்புலத்தையும் சேர்த்தே தருகிறது.

அடுத்து, இந்து மெய்ஞான மரபின் ஒட்டுமொத்த ஞானத்தையும் ஒன்றாக அளிக்கிறது. கீதையோ உபநிடதங்களோ, அவற்றை தனியாக வாசித்து அடையும் ஞானம் ஒரு வகை. வெண்முரசையும் கீதையையும் இணைவாசிப்பு செய்வதால் கிடைக்கும் திறப்புகள் ஒரு வகை. ஆனால் இவை ஏதும் இல்லாமல் வெண்முரசை மட்டுமே வாசித்தால் கூட வாசகன் அடையகூடிய ஞானம் ஒன்றுண்டு. அந்த வாசிப்பனுபவம், நிகர்வாழ்க்கை அனுபவம் தரும் ஞானம் அது. வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களுக்குமான பதில் வெண்முரசில் உள்ளது.

அடுத்து, எனக்கு கிடைத்திருப்பது கனவுகள். மிகப்பெரிய கனவுகள். வெண்முரசின் நிலங்கள், வர்ணனைகள் திறந்துவிடும் சாத்தியங்கள் அசாத்தியமானவை. கழுகுப்பார்வையில் துவாரகையை பார்க்கமுடிந்த என்னால், புரவியோடிய அதன் ஒவ்வொரு தெருவையும் நினைவிலிருந்து எடுக்க முடியும். அங்கு வாழ முடியும். என்னற்ற நகரங்கள், சிற்றூர்கள், பாதைகள், பயணங்கள், மாந்தர்கள். ஒரு பெரும்…மிகப்பெரிய உலகை என்னுள் சிருஷ்டித்துள்ளது வெண்முரசு. பயணித்து தீரா உலகு. அதே உலகு வெவ்வேறு காலகட்டங்களில். யுகச்சந்தியில் நடைபெறும் வெண்முரசு, இரு வேறு யுகங்களில் இருவேறு உலகை சமைத்துள்ளது.

அதனினும் மேலாக, தகவல்கள். தத்துவ சிக்கல்களும், உணர்சி கொந்தளிப்பும் விவரிகிடக்கும் கதைவெளியிகளின் ஊடாக பரவிகிடக்கும் தலவல்கள். ஒரு பல்கலைகழகத்தின் அத்தனை துறைகளிலும் ஆய்வறிக்கை சமர்பிக்கும் அளவிற்கு தலவல்களால் நிறைந்துள்ளது வெண்முரசு. பொருளாதார கட்டமைப்பு தொட்டு குதிரை வளர்ப்பு வரை. படை அமைப்புகள் முதல் குகை வாழ்க்கை வரை. குளியலறை முதல் ஈற்றறை வரை. வெண்முரசின் அழகியல் என்பது, இந்த தகவல்கள் எதுவும் வெறும் தகவல்களாக நிற்காமல், மைய கதையோட்டத்தின் ஒரு பகுதியாக வருவதே. (தரவுகள் ஏன்?).

இவை அனைத்தையும் விட, எனக்கு மிக முக்கியமானது .. வார்த்தைகள்… சொற்றொடர்கள்… சொற்சேர்க்கைகள்.. எழுத்தின் அடர்த்தி! இதை எழுதி உணர வைக்க முடியாது, ஆனால் தமிழ்மகளின் முழு அழகை உணர விரும்பும் அனைவரும் வெண்முரசை வாசிக்க வேண்டும். (வெண்முரசில் தமிழ் சொற்கள், வெண்முரசு சொற்கள்,).

கடல் நீரை பூனை அல்ல, புழு குடிக்க முற்படுவது போல் தான், வெண்முரசை நவின வாசகனாக, காவியம் என்ற பாவனை பூண்டு எழுந்து வந்த, நவின இலக்கிய பிரதியாக அனுகாமல் அதன் கதையொழுங்கிலும், தகவல் செறிவிலும் மயங்கி நிற்பது. ஆனால், அந்த அளவிலே கூட முழுதாக வாசித்து முடிக்க இன்னும் எத்தனை முறை மிள் வாசிப்பு செய்ய வேண்டுமோ!