படைப்பிலக்கியம் சார்ந்து செயல்பட விரும்பும் பலரும், பொருளியல் தேவைகளுக்காக தங்களை ஒரு அலுவலக சூழலில் அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அலுவலக வாழ்க்கை தரும் அழுத்தங்கள், உளசிக்கல்கள் ஒருவரது மனநிலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடிய சூழ்நிலையில், ஒரு படைப்பாளி இந்த சவால்களை எப்படி எதிர்கொள்கிறான்?
எனது தேடலினூடே எழுந்த கேள்வி இது. எந்த எழுத்தாளரை, தேர்ந்த வாசகரை பார்த்தாலும் கேட்க முனையும் கேள்வியும் கூட.
அரசு சார் நிறுவனத்தில் பணியாற்றியதாலும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாலும் மேலாளர் தரும் அழுத்தங்களை அதிகம் சந்திக்க நேர்ந்ததில்லை என ஜெமோ குறிப்பிட்டதாக நினைவு. ஆகவே, அவரிடம் இது குறித்து பேசியதில்லை. அதே சமயம், தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் கட்டுரையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அலுவலகத்தில் சந்தித்த அழுத்தங்களை விரிவாகவே ஜெமோ பதிவு செய்திருந்தார்.
இதைக்குறித்து, நாஞ்சில் நாடன் அவர்களிடமே உரையாடும் வாய்ப்பு ஊட்டி காவிய முகாமில் கிடைத்தது.

அந்த உரையாடலின் நினைவுத் தொகுப்பு கீழே:
- குடும்ப பொருளியல் சூழல்
பிழைப்பு வாழ்க்கைனு ஒன்னு இருக்கு. நம்ம வருமானத்த நம்பி வீட்ல குடும்பம், தம்பிங்க எல்லாரும் இருக்காங்க. நாமல்லாம் 20ம் தேதி வாக்குலயே கடன் வாங்குற குடும்பம். அப்ப, ஒரு மாசம் இந்த வருமானம் இல்லனா எவளோ பெரிய சிக்கல் வரும் பாருங்க. இந்த நிலைல மேலாளர் பிரச்சனை பண்றார்னு ராஜினாமா பண்றது எப்படி சரியா இருக்கும்.
வீட்ல நான் தரைல தான் உட்காந்து எழுதுவேன். ஒரு சின்ன சூட்கேஸ மடில வைச்சிக்ட்டு. கல்யாணம் ஆன பிறகு தான், இதை பார்த்துட்டு மாமனார் ஒரு தேக்கு table செஞ்சி அனுப்பினார்.
- படைப்பிற்கான மனநிலை
அலுவலகத்தில் ஆயிரம் அழுத்தம் இருந்தாலும்…. …. வீட்டுக்கு வந்ததும் முகம் கழுவி, fresh ஆகி, அறைக்குச் சென்றுவிடுவேன். இசை கேட்பேன். சிறிது நேரம் இசை கேட்டாலே மனம் சமநிலை அடைந்து விடும். பிறகு எழுதவோ, வாசிக்கவோ தொடங்குவேன். நான் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் இசை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
- படைப்பிற்கு நேரம்
படைப்பிற்கு நேரம் செலவிட விரும்புகிறவர்கள், பிற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் நாம் செலவிடும் நேரத்தை நம்மால் குறைக்க முடியுமா? முடியாது. ஆனால், வெளியே அர்த்தமற்ற கேளிக்கைகளில் செலவிடும் நேரத்தை நாம் குறைக்கலாம்.
நான் மும்பையிலிருந்த பொழுது, தினம்மும் நான்கு மணி நேரம் பயணத்திலேயே சென்றுவிடும். அலுவலகத்தில் எட்டு மணி நேரம். வீட்டில், குடும்பத்துடனும் நேரம் செலவிட வேண்டும். கேளிக்கைகளில் ஈடுபடாமலிருந்தால் மட்டுமே, எனக்காக செலவிட நேரம் கிடைக்கும்.
பொதுவாக நான் சினிமா பார்ப்பதில்லை. சினிமா பார்ப்பதால் நான் பெறக்கூடியது எதுவும் இல்லை. மேட்ரிக்ஸ் போன்ற சில படங்கள், படைப்பிற்கான ஊக்கத்தை, மனநிலயை தரும். அவற்றை பலமுறை பார்த்துள்ளேன். மற்றபடி, நான் கேளிக்கை சினிமாக்களை பார்ப்பதில்லை. கடைசியாக நண்பர்கள் பரிந்துரைத்து பார்த்த படம் காக்கா முட்டை. அந்த படம் எனக்கு பிடித்தும் இருந்தது. அதிகபட்சம் 30 நிமிடங்கள் செய்திகளை தவிர தொலைக்காட்சி பார்ப்பதில்லை. இந்த நேரத்தை இலக்கியத்திற்கு செலவிடுகிறேன்.

தொழில் நிமித்தம் பல ஊர்களுக்கு செல்ல நேரும். அங்கு, ஐந்து மணி வாக்கில் அலுவலக வேலைகள் முடிந்த பின்னர், அந்த நகரத்தில் ஏதாவது புராதன இடங்கள் இருந்தால் சென்று பார்ப்பேன். அல்லது, ஏதேனும் கலை நிகழ்வுகள் நடந்தால் பங்கு கொள்வேன். சினிமா சென்று நேரத்தை வீணடிக்க மாட்டேன். அந்த மாலை முழுவதையும் இலக்கியத்திற்கு செலவிட என்னால் இயலும்.
- இந்த வாழ்விலிருந்து எழுத்தாளன் பெறுபவை
பல பிரச்சனைகள், அழுத்தங்கள் இருந்தாலும், அலுவலக வாழ்க்கை படைப்பாளிக்கு தொடர்ந்து உள்ளீடுகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. சரியான மனநிலை இருப்பவர்களால் அவற்றை பெற்றுக்கொள்ள இயலும். அழுத்தம் தரும் மேலாளரோ, கடினமான வாடிக்கையாளர்களோ இறுதியில் நமக்கு தருவது அனுபவங்களை. அந்த வாழ்க்கையையின் மூலம் அடைபவை, படைப்புகளை செறிவாக்க உதவக்கூடும்.
எனது பல கதைகள் பல வருடங்கள் முன்பு நான் அடைந்த அனுபவங்களில் இருந்து எழுந்தவை. 20 – 30 வருடங்கள் முன்பு நடைபெற்ற சம்பவங்கள் கூட தெளிவாக நினைவில் எழும். அனுபவஙகளை உடனடியாக / நேரடியாக எழுத இயலாது. அதற்கான சந்தர்ப்பம் வரும் பொழுது, தக்க கதைக்களத்தை அமைத்து அவற்றை எழுதுவேன். ஆனால், இந்த உள்ளீடுகளை நான் பெற்றது அலுவலக வாழ்வில் தான். அனைத்தையும் கூர்ந்து நோக்கும், பார்வை இருந்தால் இவ்வகை வாழ்வின் விரிவுகள், படைப்பாளிக்கு உதவவே செய்ய்யும். ஆனால், அப்படி கவனிக்க ஒருவருக்கு படைப்பாளியின் மனம் தேவை.
ஒருவர் படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில் தனக்கான வழியை முட்டு மோதி தானே கண்டடைவார்.
நாஞ்சில் அவர்கள், அலுவலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சமயங்களிலும், தன்னளவில் ஒரு படைப்பாளியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே புரிந்துக்கொள்கிறேன். பல சவால்களை குடும்ப சூழலுக்காக கடந்துவரவும், அடிப்படையில் தான் ஒரு எழுத்தாளன் என்ற தன்னுண்ர்வே அவருக்கு உதவி உள்ளது.
குறிப்பு: இதை நான் ஒரு பேட்டியாக எண்ணியிருக்கவில்லை. ஆகவே, குறிப்புகள் எதுவும் எடுக்கவில்லை. முழுதும் நினைவில் இருந்து எழுதுகிறேன். வார்த்தை பிரயோகங்கள் மாறி இருக்கும். அவர்அன்று பேசிய கருத்திலிருந்து மாற்றம் ஏதும் இன்றி பதிய முயன்றுள்ளேன்.